Published : 18 May 2019 08:35 am

Updated : 18 May 2019 08:35 am

 

Published : 18 May 2019 08:35 AM
Last Updated : 18 May 2019 08:35 AM

சொற்களில் சிந்திய ரத்தம்

உலகின் மிக நீண்ட கழிவறை

அகரமுதல்வன்


நூல்வனம் வெளியீடு,

சென்னை-89. விலை: ரூ.220

91765 49991

போருக்குப் பிறகான வாழ்வு என்பதும் ஒருவகையில் அழிவின் தொடர்ச்சிதான். தப்பிப் பிழைத்து வாழும் அனுபவமோ செத்துப்போவதைக் காட்டிலும் கொடுமையாய் மாறிவிடுகிறது. போர்ச்சூழலின் பரிதவிப்பில், அதன் அலைக்கழிப்பில், இழப்புகளின் வலியில் பதின்வயதுகளைத் தொலைத்த ஒரு தலைமுறை கையில் பேனாவை எடுத்திருக்கிறது. பொங்கிவரும் துயரத்தையும் ஆற்றாமையையும் காகிதங்களுக்குக் கடத்திவிட முயல்கிறது. 25 வயதுக்கு முன்னதாகவே, நான்கு கவிதைத் தொகுப்புகளையும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் அகரமுதல்வன் அவர்களில் ஒருவர். அவரது சமீபத்திய குறுநாவல் தொகுப்பு ‘உலகின் மிக நீண்ட கழிவறை’ (கழிப்பறை என்று வந்திருக்க வேண்டும்; கழிப்பறை என்பது டாய்லெட், கழிவறை என்பது செப்டிக் டேங்க்).

தடுப்பு முகாமில் தற்கொலைகளுக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் நடுவே எந்தக் கணத்திலும் மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞனின் நினைவுகளும் நிகழ்வதுமாய் விரிகிறது ‘அகல்’ குறுநாவல். குழந்தைமையின் பயங்கள் நீங்குவதற்கு முன்பாகவே தோள்களில் துவக்கு சுமக்க நேர்ந்தவர்களின் கதை இது. போருக்கான காரணங்களோ அல்லது அதற்கான நியாயங்களோ ஏதுமறியாமல், பிடித்துச்செல்லப்பட்ட பெடியள்களையும் அவர்களுக்குள் நடக்கும் அரசியல் உருமாற்றங்களையும் கிட்ட நின்று படம்பிடிக்க முயன்றிருக்கிறது இந்தக் கதை. சகாக்களையே சந்தேகம்கொள்ளும்படியாய் ஆக்கிவிட்ட தடுப்பு முகாம் வாழ்க்கையிலும்கூட காதலின் நினைவேக்கம் தொடர்ந்தபடியே இருக்கிறது.

தடுப்பு முகாமிலிருந்து உயிர்தப்பினாலும் அகதியாய் ஓரிடத்தில் நிலைகொள்ள முடியாமல் சந்தேகக் கண்களுக்கு நடுவே வாழ நேர்கிற அவலத்தைச் சொல்கிறது ‘எனக்குச் சொந்தமில்லாத பூமியின் கடல்’. பரிவுணர்ச்சியால் கிடைக்கிற காதல் இன்பங்களுக்குப் பதற்றத்தைத் தணிக்கிற ஆற்றலும் இல்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நிழலாய்த் தொடர்கிறது விசாரணைகளின் அச்சுறுத்தல். உயிர்பிழைத்தவர்களின் புகைப்படத்துக்கு மாலைபோட்டும்கூட தொடர் விசாரணைகளிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கின்றன குடும்பங்கள். ஏதிலியாய் உழலும் வாழ்க்கையில் பெண்ணாயிருப்பது இன்னும் பெருங்கொடுமை. தாராள மனதினராய் அறிமுகமாகிறவர்களிடம் அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது. தியாகங்களுக்குப் பதிலாகக் கிடைப்பது துரோகமும் அவமதிப்பும்தானா என்ற கேள்வியும் எழுகிறது. கதையை முடித்த பிறகும் அகரமுதல்வனின் இந்த வரி மனதை நெருடிக்கொண்டே இருக்கிறது: ‘பிறக்கும் பிள்ளையையும் அச்சுறுத்தும் அகதியின் மரபணு நடுக்கம்’.

தொகுப்பின் தலைப்பாய் அமைந்த ‘உலகின் மிக நீண்ட கழிவறை’, கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்துக் குளத்தை மையமாக வைத்து முள்ளிவாய்க்காலின் முன்னும் பின்னுமான கால மாற்றங்களைப் பேசுகிறது. ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அக்குளத்தின் அடியில் உடல்களோடு உண்மைகளும் புதைக்கப்பட்டுவிட்டன. 2004 சுனாமியின்போது குடியானவர்களைக் காப்பாற்றிய மீட்பு நடவடிக்கைகளை நினைவுபடுத்துகிறது. அதே குடியானவர்கள் முள்ளிவாய்க்கால் தாக்குதலின்போது தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சர்வதேச சமூகத்துக்கு முன்பாக என்னென்னவெல்லாம் சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்றும் உண்மையில் அவர்கள் எப்படியெல்லாம் நடத்தப்பட்டார்கள் என்பதையும் சொல்கிறது. பிணங்கள் செத்து மிதந்த கடற்கரை, அதிகாலை கழிப்பறையாக மாறிப்போன காட்சிகளை விவரிக்கிறது.

எவ்வளவு துயரத்தைப் பேசினாலும் காமத்தைத் தொட்டு மீளாமல் அகரமுதல்வனின் கதைகள் முடிவடைவதில்லை. ஆமைக்குளத்தில் நீராடித் திளைக்கிறாள் இன்பம். ஒரு கொலைக்குப் பின்னணியாக இல்புறக் காதலொன்றும் துல்லியமான காட்சி விவரணைகளோடு சொல்லப்படுகிறது. குறும்புதினங்களுக்குரிய கச்சிதத் தன்மையிலிருந்து அவை விலகிச்செல்கிறதோ என்றும் தோன்றுகிறது. என்றாலும், போரின்போதும் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகும் குடியானவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைத்தான் இக்கதைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகின்றன.

‘சொற்களில் சிந்திய ரத்தம் மட்டும்தான் பிசுபிசுப்போடு இருக்கிறது. அதைத் தொட்டுணர விழையின் பிம்பங்களை விடுத்து ஈழத்துப் படைப்பிலக்கியங்களை நோக்கிச் செல்லுங்கள்’ என்கிறார் ரவிக்குமார். கடந்த பத்தாண்டுகளில் வெளியான இலக்கிய ஆக்கங்கள் யாவும் காலத்தின் சாட்சியமே. ஓங்கிக் குரலெடுத்து அழுது அரற்றுகையில் ஆங்காங்கே சுதி பிசகிவிட்டதாய் லாக்டோமீட்டரோடு வருகிற இலக்கிய ஆசான்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமிருந்தும்கூட நற்சான்று பெறுகிற சாமர்த்தியங்களை அறிந்துவைத்திருக்கிறார் அகரமுதல்வன்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

chief-minister

யார் முதல்வர்?

கருத்துப் பேழை
x