Published : 25 May 2019 08:47 AM
Last Updated : 25 May 2019 08:47 AM

அண்ணாவுக்குத் திரண்ட பெருங்கூட்டம்!

கிருஷ் அனிருத்

இப்படி ஒரு கூட்டம் புத்தக அறிமுக நிகழ்வுக்குத் திரள்வது ஆச்சரியம்தான் - அதுவும் அன்றைய நாளில் அதே நேரத்தில் இலக்கியம் சம்பந்தப்பட்ட மூன்று முக்கியமான நிகழ்ச்சிகள் சென்னையில் நடந்துகொண்டிருந்தன. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, ஒன்றே கால் மணி நேரம் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இதைப் புரிந்துகொண்டவராகவே தன் பேச்சை இப்படித் தொடங்கினார்: “என் பேச்சைக் கேட்கவோ அல்லது நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சைக் கேட்கவோ அல்லாது பேரறிஞர் அண்ணாவுக்காகக் கூடியிருக்கும் இந்தக் கூட்டத்துக்கு என் வணக்கத்தைத் தெரிவிப்பதுடன், அரங்கை நிறைத்துக் கூடியிருப்போர் அனைவருக்கும் நாற்காலிகள் ஏற்பாடுசெய்ய இயலாமைக்கு வருத்தமும் தெரிவிக்கிறேன்.”

கூடுதல் நாற்காலிகள் போடப்பட்டும் போதவில்லை என்றபோதும் கூட்டம் நாற்காலிகளைப் பொருட்படுத்தவில்லை. பலர் கீழே தரையில் உட்கார்ந்து உரை கேட்டார்கள். மேலும், அரங்கினுள்ளும் வெளியிலும் நின்றபடியே உரையைக் கேட்டார்கள்.  “எவ்வளவோ புத்தகங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன்; ஆனாலும், இந்த நூலை ஒரு மணி நேரத்துக்குள் பேசுவது என்பது என் வாழ்வில் ஒரு சவால்தான்” என்ற சுப.வீரபாண்டியன், “இப்படி ஒரு புத்தகத்தை வெளியிட்டதற்காக, பாராட்டுகளையோ வாழ்த்துகளையோ அல்ல; என் சிரம் தாழ்ந்த நன்றிகளை ‘இந்து தமிழ்த் திசை’ ஆசிரியர் குழுவினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று உணர்ச்சிப்பெருக்கோடுதான் நூல் அறிமுகத்தை ஆரம்பித்தார். அவர் உரை நெடுகிலும் அந்த உணர்ச்சிப்பெருக்்கு வெளிப்பட்டது.

‘மிகப் பெரிய ஆளுமையான நம் அண்ணாவை லட்சக்கணக்கான பக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து, எண்ணூறு பக்கங்களுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். இந்தப் புத்தகம் என்ன அண்ணாவின் வாழ்க்கை வரலாறா? அல்லது அண்ணாவின் பேச்சுகளை வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது அண்ணாவின் எழுத்துகளை வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது அண்ணாவைப் பற்றி எழுதியிருக்கிறார்களா? இப்படி நமக்கு எழும் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். ஆம்! எல்லாமும் இருக்கிறது!’ என்ற சுப.வீரபாண்டியன் புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்டு விலாவாரியாகப் பேசினார்.

ஆளுமையை முழுமையாகப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வெளியான இரண்டு மாதங்களுக்குள் முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்திருக்கிறது. அதுவும் முன்பதிவு அடிப்படையிலேயே. இரண்டாம் பதிப்பும்கூட முன்பதிவாளர்களுக்காகக் காத்திருக்கிறது. பொதுவெளிக்கு விற்பனைக்கு வர இன்னும் கொஞ்ச நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் இப்புத்தகத்தை வாங்கியவர்கள் பலரிடமும் இதை இன்னும் பரவலாகக் கொண்டுசேர்க்கும் ஆர்வம் எழுவதைப் பார்க்க முடிகிறது. அதன் உச்சமாக, சீமந்த சீர்வரிசையாகவெல்லாம் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் தரப்பட்டது. போலவே, பல்வேறு ஊர்களிலும் புத்தக அறிமுகக் கூட்டங்களின் வழி இதைக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் பலரும் இறங்கியிருக்கிறார்கள். முதல் அடியைப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எடுத்துவைத்திருக்கிறார்.

சுப.வீரபாண்டியன் பேச்சை முன் உணர்ந்தவராக, தன்னுடைய தலைமை உரையைச் சுருக்கமாக முடித்துக்கொண்டார் இயக்குநர் கரு.பழனியப்பன். ஆனால், ஒரு புத்தகத்தின் முக்கியத்துவத்தை எப்படி இந்தத் தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்பதில் மனிதர் கெட்டிக்காரர்!

அண்ணா புத்தக நிகழ்வில் அவர் பேசியதைப் பல ‘யூட்யூப் சேனல்கள்’ வெளியிட்டிருக்கும் நிலையில், கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் காணொளிகளைக் கண்டு களித்திருக்கிறார்கள். புத்தக விமர்சன உரைகளை இவ்வளவு பேர் தேடிப் பார்ப்பதே நம்மூரில் பெரிதல்லவா? எல்லாம் அண்ணாவின் மகிமை!

“நம்முடைய தலைவர்களை எப்படிப் புரிந்துகொள்வது என்று இந்தத் தலைமுறைக்கு வழிகாட்டுகிறது ‘இந்து தமிழ்’. கருணாநிதியின் பங்களிப்புகளை என் தலைமுறை புரிந்துகொள்ளும்படி செய்தது ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகம்தான். அடுத்தது இந்தப் புத்தகம். ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை நான் தேடி அலையாத கடை இல்லை.  ஒரு புத்தகம் தமிழ்நாட்டில் எங்கு போய்க் கேட்டாலும் கிடைக்காமல், பதிப்பித்தவர்களிடம் கேட்டால் அவர்களும் அடுத்த பதிப்பு வர வேண்டும் என்று சொன்னது அண்ணாவின் இந்தப் புத்தகத்துக்குத்தான்” என்றவர், “இந்த நிகழ்ச்சியில் பேசுவதன் மூலமாக எனக்கு ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் கிடைத்துவிடும் என்பதற்காகவே வேறு நிகழ்ச்சியை ஒதுக்கிவிட்டு சுப.வீரபாண்டியனிடம் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன்” என்றார் கரு.பழனியப்பன்.

கரு.பழனியப்பனின் பேச்சு ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகத்தைத் தொட்டுக்காட்டி சமகால அரசியலையும் பேசுவதாக இருந்தது. “இந்தப் புத்தகம் மூலம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், ஒரு கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது என்பதை ஒரு மனிதன் ஐம்பது ஆண்டு காலத்துக்கு முன்னால் இவ்வளவு நயம்பட நாகரிகமாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார் என்பதுதான். இன்றைய தலைவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது” என்றார்.

விழாவுக்கு வந்த எல்லோரும் புத்தகம் வாங்க முண்டியடித்தனர்; நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கால் மணி நேரத்தில் விற்றுவிட்ட நிலையில், “அடுத்த பதிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வந்துவிடும்; முன்பதிவுசெய்துகொள்ளுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் விற்பனையாளர்கள். முன்பதிவிலேயே ஒரு பதிப்பு விற்றுத்தீர்ந்ததும், அடுத்த மாதமே அடுத்த பதிப்பு காண்பதும் அண்ணாவின் சாதனைதான்! 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லையில் உள்ள ‘இந்து தமிழ்’ அலுவலகங்களில் காலை 9 - மாலை 5 மணிக்குள் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ள: https://www.kamadenu.in/publications அஞ்சல் செலவு ரூ.50 தனி

மேலும் விவரங்களுக்கு: 74012 96562, 74013 29402

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x