Published : 10 May 2019 01:38 PM
Last Updated : 10 May 2019 01:38 PM

நெட்டிசன் நோட்ஸ்: தோப்பில் முஹம்மது மீரான் மறைவு- சாய்ந்த நாற்காலி!

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு நெட்டிசன்களும் இலக்கிய வாசகர்களும் தங்களின் அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

Thanappan Kathir

#சாய்வுநாற்காலியில் ஒரு சாகித்யம் சாய்ந்திருந்து நம்மை வேறு உலகிற்கு அழைத்துச்சென்றது. அதே சாய்வு நாற்காலியில் வெற்றிடத்தை இட்டுச்சென்றிருக்கிறது அந்த இதயம்.

 

கடலோர கிராமத்தில் கூனன்தோப்பில் நாம் மீண்டும் இவரைத்தேடிக்கொள்வோம்..

 

Yuga Bharathi

ஒரு சாய்வு நாற்காலியைக் காலம் சரிந்த பலகையாக்கிவிட்டது. எழுத்துக்களிலும் எழுத்துக்களாகவும் வாழ முற்பட்ட எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானை ஆழ்ந்த கண்ணீருடன் ஏக இறைவனிடம் ஒப்படைப்போம்.

 

M.m. Abdulla

"ஒரு கடலோர கிராமத்தின் கதை" அவரைத் தமிழ் கூறும் வாசகர் உலகம் தோறும் கொண்டு சேர்த்தது. தேங்காய்பட்டிணம் என்ற ஒரு கடற்கரை கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு அவர் படைத்த அந்தப் புதினம் என்றென்றும் அவர் புகழை நிலைத்திருக்கச் செய்யும்.

 

Saranya Satchidanandam

தோப்பில் முகமது மீரான், வைக்கம் பஷீர், அர்ஷியா, பிரபஞ்சன் இவர்களுக்குள் எதோவொரு உருவ ஒற்றுமை இருப்பதாய் எனக்கு அடிக்கடி தோன்றும்...

 

இன்னொரு ஒற்றுமை அனைவரும் Star writers என்பது... ஒரு சமூகத்தின், நிலப்பரப்பின் வாழ்வியலை அழகாகச் சொல்கிறவர்களெல்லாம் இன்னொரு சிற்பி என்றே சொல்லப்பட வேண்டியவர்கள்....

 

Kombai S Anwar

தோப்பில் முகம்மது மீரானின் 'ஒரு கடலோர கிராமத்தின் கதை‘ முதலில் படித்த போது அது என் உலகத்தை மேலும் விரிவாக்கியது. வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் கதைதான் 'சாய்வு நாற்காலி'. அவருடைய நாவல்களை, சிறு கதைகளை எளிதில் கடந்து செல்ல முடியாது. நெஞ்சை பிழியும். மானுடம் பேசும் அவரது கதைகளை படித்து விட்டு கண்ணீரை கட்டுப்படுத்த முயன்று தோற்றிருக்கின்றேன்.

 

Vilasini Ramani

தமிழ்- மலையாள இலக்கியப் பிணைப்பின் தூண்களில் ஒருவர் தோப்பில் முஹம்மது மீரான். அவர்களின் இறப்பிற்கு என் ஆழ்ந்த இரங்கல்.

 

ச. மாடசாமி

1990களில் பி.ஏ/ பி.எஸ்சி மாணவர்களுக்குத் தோப்பிலின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ (நாவல்) பாடமாக இருந்தது. அறுபது மாணவ மாணவிகள் இருந்த வகுப்பு அது. கடலோர கிராமத்தின் கதையில் இருந்து அறுபது தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து மாணவர்களையே பாடம் நடத்தச் சொன்னேன்.

மாணவர்கள் வெகு யதார்த்தமாக, நடைமுறை உதாரணங்களுடன் பாடம் நடத்தினர். நான் வியந்து பார்த்த அற்புதம் அது.

அந்த அற்புதத்தைக் காண மேலாண்மை பொன்னுச்சாமியும் தோப்பில் முகமது மீரானும் சேர்ந்தே கல்லூரிக்கு வந்தனர். கல்லூரிக்குள் எழுத்தின் வெளிச்சம்!

மறக்கமுடியாத நாட்கள்...

மறக்கமுடியாத எழுத்தாளர்கள்...

 

Abdul Hameed Sheik Mohamed

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் இஸ்லாமியர்களில் வாழ்வை உக்கிரமாக முன்னெடுத்துச் சென்றவர் தோப்பில். அந்த வாழ்வியலின் பேசப்படாத பக்கங்களையும் துணிச்சலாக பேசியவர் அவரே. பொதுவாக இஸ்லாமியர்களின் வாழ்வை எழுதிய இஸ்லாமியர்களுக்கு ' இஸ்லாமிய எழுத்தாளர்' என்ற தனித்த அடையாளம் கிடைத்ததே தவிர அவர்கள் பொது நீரோட்டம் சார்ந்த ' நவீன எழுத்தாளர்' அடையாளத்தை பெற்றதில்லை. அதை உடைத்தவர் தோப்பில்.

 

அவர் நவீன எதார்த்தவாத தமிழ்ப் புனைகதை மரபின் பெரும் ஆளுமைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இஸ்லாமிய கலாச்சாரத்தை மனத்தடையின்றி எழுதுவதற்கு தோப்பிலின் எழுத்துக்கள் பெரிதும் உற்சாகமூட்டி வழிகாட்டின. சாய்வு நாற்காலி ஏற்படுத்திய அதிர்வுகள் சாதாரணமானதல்ல.

 

தோப்பிலுக்கு மனம் கசிந்த அஞ்சலிகள்.

100

 

Sam Nathan

சாய்வு நாற்காலி, கடரோல கிராமத்தின் கதை என இரண்டு கிளாசிக் நாவலை எழுதியவர். கடலோர கிராமத்தின் கதையை வாசித்துவிட்டு வீடு தேடிச் சென்றேன். "உங்கள படிச்சிருக்கேன் சார். பேசிட்டு போலாம்னு வந்தேன்" சொன்னதும் கதவு திறந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சந்தோஷமாகப் பேசினார்.

 

தமிழின் கிளாசிக் வரிசையில் எப்போதும் உங்களுக்குத் தனி இடமுண்டு. சென்று வாருங்கள் மீரான். ஜன்னத்துல் பிர்தோஸ் உங்களுக்காக காத்திருக்கிறது.

 

K S Saravanan

என்னிடம் யாராவது வாசிக்க தமிழ் நாவல்கள் ஏதாவது சொல்லுங்கன்னு எப்பக் கேட்டாலும் தவறாமல் இடம் பெறும் நாவல் "சாய்வு நாற்காலி"

..

கண்ணீர் அஞ்சலி தோப்பில் முகமது மீரான்.

 

மாலன் நாராயணன்

மீரான்,

மண்ணிலிருந்து விடை பெறுகிறீர்கள்,

எண்ணத்தில் என்றும் இருப்பீர்கள்.

 

கார்த்திக் புகழேந்தி

எழுத்தாளர், கதைசொல்லி - தோப்பில் முகமது மீரானுக்கு எங்களது நிறைவு அஞ்சலி.

 

Thiruppur Krishnan

தோப்பில் முகமது மீரான் அதிரப் பேசாதவர். அவரது முக பாவனைகள் குழந்தைமையோடு இருக்கும், வஞ்சகமற்ற வெள்ளை மனத்தின் பிரதிபலிப்பை அவரது கள்ளம் கபடில்லாத சிரிப்பில் காணலாம். அவர் பிறந்த சமுதாயத்தை விமர்சித்தும் நிறைய எழுதினார். அவரது மொழிநடை ஜாலக்குகள் அற்றதாய் மண்ணின் நேரடி மணத்தோடு அமைந்தது.

 

மொழிப் பயிற்சியில் அவர் அதிக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் தனக்குத் தெரிந்த மொழியில் தன் எண்ணங்களை இலக்கியமாக்கும் வித்தை அவருக்குக் கைகூடியிருந்தது. தமிழில் அதிகம் பரிச்சயமாகாத புதிய களத்தை அவர் அறிமுகப் படுத்தினார். அந்த வகையில் என்றும் புறக்கணிக்கப் பட முடியாத எழுத்து அவருடையது.

 

Palani Bharathi

"நான் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் கடந்த காலத்தின் வழியாக வரலாற்றுக்குச் சென்று விடுவேன்....

வரலாற்றை மறந்துவிட்டுப் படைப்புகள் இல்லை. என்னைப் பொருத்தவரை படைப்பு என்பது கடந்தகாலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும்"

 

அந்தக் கடலோர கிராமத்தின் கதைமனிதர்

தோப்பில் முஹம்மது மீரானுக்கு

ஆழ்ந்த அஞ்சலி...

 

Sakthi Jothi

தமிழ் புனைவு வெளிக்குள் அதுவரையிலும் இடம்பெற்றிராத புதியதொரு நிலப்பரப்பை ,

வாழ் முறையை ,

மொழிக் குறிப்பை

தன் கதைகள் வழி அறிமுகப்படுத்தியவர்

தோப்பில் முஹம்மது மீரான்.

இனி அவர் இல்லை,

எழுத்துக்கள் மாத்திரமே இருக்கும்.

ஆழ்ந்த அஞ்சலி.

 

கரிகாலன்

தோப்பில், ஞாபகங்கள்!

~

தென்தமிழக எழுத்தாளர்களில் பு.பி, சு.ரா, பூமணி, கோணங்கி, வா.த, வ.நிலவன் அளவு அதிகம் பேசப்பட்டவரல்லர் தோப்பில் முகம்மது மீரான். ஆனாலும் இவர்கள் எவருக்கும் குறைந்ததன்று தோ.மு.மீரானின் இலக்கிய அழகியல்.

 

தமிழ்ப்பிரபா

காலத்தில் நிலைக்கும் முஸ்தபா கண்ணுவை கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள். போய் வாருங்கள் என் தகப்பனே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x