

கல்தோன்றி மண்தோன்றாச் சமூகமா தமிழினம் என்பதில் தொடங்கி இலக்கண அரசியல், நாட்டுப்புறத் தமிழ் என்று விரிகிறது இந்நூல். திருக்குறளில் முரண்பாடுகளா, அணுவைத் துளைத்ததை அவ்வை கண்டுபிடித்துவிட்டாளா, மாயோனும் சேயோனும் யார், எது முதல் திணை, தமிழை மறைத்தது எப்படி என்று விறுவிறுப்பான மொழியில் விவரிக்கிறார். சித்திரையா – தையா எது புத்தாண்டு, திராவிடமா – தமிழா, தொல்காப்பியத்தில் சாதி உண்டா, ஜாதிக்கும் சாதிக்கும் வேறுபாடு என்ன போன்ற விளக்கங்கள் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கின்றன. தமிழ் குறித்துப் பேசுவதற்கு ஆய்வு விளக்கங்களைத் துணைக்கு அழைக்கும் அதேவேளையில் மீம் போன்ற சமகால சமூக வலைதள உரையாடல் மொழியையும் கையாண்டிருக்கிறார்.
அறியப்படாத தமிழ்மொழி
கண்ணபிரான் இரவிசங்கர்
தடாகம் வெளியீடு
திருவான்மியூர், சென்னை-41.
விலை: ரூ.250
89399 67179
திரைப்பாடல்கள் வழியே மார்க்ஸியம்
மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடங்கும் அறிமுகம், சித்தாந்தங்களைப் பயில வேண்டியதன் அவசியத்தைத் திரைப்படப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி எளிமையாக விளக்குகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் சங்கப் பாடல்கள், பாரதியார் பாடல்களின் துணையோடு விளக்குகிறது. இந்திய தத்துவ ஞானத்தை மேற்கத்திய தத்துவ முறைமைகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறது. மனித வரலாறு என்பது உற்பத்தி முறையோடு நெருங்கிப் பிணைந்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்து காலம்தோறுமான உற்பத்தி அமைப்புகளை விவரித்து மனித சமுதாயம் கடைசியில் வந்தடைய வேண்டிய புள்ளி பொதுவுடைமையே என்ற மார்க்ஸிய தத்துவத்தை எளிமையாக விளக்கியிருக்கிறார் சு.பொ.அகத்தியலிங்கம். மார்க்ஸியம் சார்ந்த அடிப்படைப் புரிதலை வழங்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் பட்டியலை அளித்திருப்பது சிறப்பு.
மார்க்சியம் என்றால் என்ன?
சு.பொ.அகத்திலிங்கம்
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை,
சென்னை-18.
விலை: ரூ.120
044-24332424