

அசலான பிராந்தியத் தன்மையும், தனிக் கலாச்சாரமும் கொண்ட கவிதைகளாக ராஜன் ஆத்தியப்பனின் கவிதைகள் இருக்கின்றன. எப்போதும் கடைசியில் வருபவரின் வலி, தனிமை தவிர எப்போதாவது கிடைக்கும் அதிர்ஷ்டத்தையும் இவர் நுட்பமாகப் பதிவுசெய்கிறார். கட்டிடத் தொழிலாளியாகப் பணிபுரியும் ராஜன் ஆத்தியப்பனின் பார்வை, பெருநகரத்தில் கட்டி முடிக்கப்பட்ட வானுயர்ந்த கட்டிடத்திலிருந்து வெளியேறும் கடவுளின் குஞ்சுகளைப் பார்க்கும் வாய்ப்பு பெற்றவையாக உள்ளன.
அம்மாவால் சுடப்படும் முதல் பணியாரம் பூஜிக்கப்பட்டு, கடைசியில் கோழிகளுக்கு உணவாகும் கிராமியச் சித்திரம் தமிழுக்குப் புதியது. தமிழில் சமீபத்தில் எழுதப்படும் கவிதைகள் பாவனை மற்றும் மிகையுணர்வால் வெறும் செய்யுள்களாக, சொற்கூட்டங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், தனது அனுபவங்களை வெளிப் படுத்துவதற்காக, சுயமான மொழியைத் தேடும் திணறலின் மூலம் தன் கவிதைகளைப் படைத்திருக்கிறார் ராஜன் ஆத்தியப்பன்.
கடைசியில் வருபவன்
ராஜன் ஆத்தியப்பன்
வெளியீடு: சிலேட்,
78 ஏ, என்.ஜி.ஓ காலனி,
காந்தி நகர்,
கோட்டார்,
நாகர்கோவில்- 629 002
தொலைபேசி: 8220386795
விலை: ரூ.100/-