Published : 27 Apr 2019 08:39 AM
Last Updated : 27 Apr 2019 08:39 AM

நூல் நோக்கு: நட்சத்திரவாசியும் ஒரு மத்தியமரும்

பிரமிளும் விசிறி சாமியாரும்

அழகியசிங்கர்

விருட்சம் வெளியீடு

சென்னை-33

விலை: ரூ.90

 9444113205

‘பிரமிளும் விசிறிச் சாமியாரும்’ என்ற பெயரைப் பெரிய திட்டத்துடன் அழகியசிங்கர் வைத்திருக்க முடியாது. பிரமிள், தமிழில் சில ஆயிரம் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமானவர். விசிறிச் சாமியாரோ மிகவும் பிரபலம். தனக்கு ஆதர்ச குருவான விசிறி சாமியாரைப் பார்ப்பதற்காக அழகியசிங்கரையும் பிரமிள் கூட்டிச்சென்றது பற்றி இப்புத்தகத்தில் ஒரு கட்டுரை உள்ளது. மற்றவை எல்லாம் பிரமிள் என்ற தமிழின் பெரும் ஆளுமையான கவிஞனின் தினசரித் தன்மைகளை, கோபதாபங்களை, அல்லல்களை, கொண்டிருந்த நம்பிக்கைகளை விவரிப்பதாக உள்ளது. ஒரு இலக்கிய நண்பராக, புரவலராக, மாணவனாக, மத்தியமராக பிரமிளுடன் பழகிய ஒருவரின் குறிப்புகளாக இவை உள்ளன. பிரமிளை இப்புத்தகத்தில் அறிந்துகொள்ள முடிவதோடு அழகியசிங்கரையும் அறிந்துகொள்வது ஒரு அனுபவம்.

- சற்குணம்

முன்னுதாரணச் சிறுகதைகள்

இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை ‘பாதுஷா என்ற கால்நடையாளன்’ கதையில் விநோதத்துடன் சொல்கிறார் உண்ணி. திரைப்படங்களாகக் கவனம் பெற்ற உண்ணியின் ‘ஒழிவுதிவசத்த களி’, ‘லீலை’ ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு. காரல் மார்க்ஸ் குறித்த புதுமையான சிறுகதையும் உள்ளது.

- விபின்

பாதுஷா என்ற கால்நடையாளன்

உண்ணி.ஆர்

தமிழில்: சுகுமாரன்

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை,

நாகர்கோவில் - 629001.

விலை: ரூ.175

 9677778863

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x