Published : 07 Apr 2019 09:25 am

Updated : 07 Apr 2019 09:25 am

 

Published : 07 Apr 2019 09:25 AM
Last Updated : 07 Apr 2019 09:25 AM

நாவலைப் பின்தொடரும் ஒளிப்படப் பயணம்!

கேரளத்தின் வைக்கத்தைச் சேர்ந்தவர் டி.மனோஜ். ஒளிப்படக் கலைஞர். மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய நாவல் ‘கசாக்கின் இதிகாசம்’, பாலக்காட்டுக்கு அருகிலுள்ள தஸ்ராக் எனும் கிராமத்தில் நிகழ்கிறது. தஸ்ராக்கைத்தான், ‘கசாக்’ என்று பெயர் மாற்றிப் பிரயோகித்திருக்கிறார் விஜயன். நாவலிலுள்ள தஸ்ராக்கின் அம்சங்களை ஒளிப்படங்கள் எடுத்து அதைப் புத்தகமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் மனோஜ். இந்த மிகு நேர்த்தியான புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் படங்களெல்லாம் நாவலிலுள்ள வாக்கியங்களைப் பின்தொடர்ந்து எடுக்கப்பட்டவை. இந்தப் புது இலக்கியப் பரிமாணத்தில் இது முக்கியமானதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. அவரோடு உரையாடியதிலிருந்து...

ஒளிப்படக் கலையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?


முதலில் ஓவியனாகத்தான் என் பயணத்தைத் தொடங்கினேன். பிறகு, ஒளிப்படக் கலையும் படித்து ஓவியத்திலும் ஒளிப்படத்திலும் நீண்டகாலம் செயல்பட்டுவந்தேன். இப்போது சிற்பக் கலையிலும் ஈர்ப்பு வந்திருக்கிறது. இதோடு, தீவிர இலக்கிய வாசிப்பும் தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த வாசிப்புதான் ‘இலக்கிய ஒளிப்படக் கலை’ எனும் புதிய துறைக்கு வந்தடைய எனக்கு உதவியது.

எந்த வயதில் ‘கசாக்கின் இதிகாசம்’ நாவல் வாசித்தீர்கள்?

எட்டாவது படிக்கும்போது விடுமுறைக் காலத்தில்தான் முதன்முறையாகப் படித்தேன். கோட்டயம், வைக்கத்துக்குப் பக்கத்திலிருக்கும் வல்லகம் கிராம நூலகத்தில்தான் என் தந்தை வெகுகாலம் நூலகராக இருந்தார். வாசிப்புக்கான தூண்டுதல் எனக்கு அப்பாவிடமிருந்துதான் கிடைத்தது. தொடக்க கால வாசிப்பிலேயே நல்ல நூல்களை வாசிக்க முடிந்ததை என் பாக்கியமாகக் கருதுகிறேன். அதனால்தான், இன்று என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வாசிப்பு இருக்கிறது.

‘கசாக்கின் இதிகாசம்’ நாவல் நிகழ்ந்த களமான தஸ்ராக் கிராமத்தை ஒளிப்படங்கள் எடுப்பதற்கான தூண்டுதல் என்ன?

இந்நாவலில் இயற்கை குறித்த வர்ணனைகள் மிகச் சிறப்பாக இருக்கும். கதாபாத்திரங்களின் மனவோட்டங்களைப் பிரதிபலிப்பதற்கு இயற்கையின் ஒவ்வொரு மெல்லிய உணர்ச்சியும் நுட்பமாகப் பயன்பட்டிருக்கும். காற்று, மழையின் பல வித பாவங்கள், பனி, வெயில், இரவு, நிலவு என உயிர்ப்பழகுடன் பிரவேசிக்கச் செய்திருக்கிறார் ஓ.வி.விஜயன். பனைகள், வயல்கள், வழிகளெல்லாம் கதாபாத்திரங்களுக்கு இணையாக நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்பு தஸ்ராக் கிராமத்துக்கு வருகிறேன். அக்காலத்தில், நாவலில் சித்திரிக்கப்பட்டிருக்கும் கசாக் ஏறத்தாழ அப்படியே இருந்தது. முதல் பயணத்தில் நாற்றுப்புரையின் முன்புற நிலத்தில் நின்றிருந்த மிகப் பெரிய புளிய மரத்தையும் நிறைய பனை மரங்களையும் பார்த்தேன். ஆனால், பல வருடங்களுக்குப் பிறகான பயணங்களில் கசாக் வேகமாக மாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அது என்னைக் கடுமையாகப் பாதித்தது. இப்படிப்பட்ட இழப்புகள்தான், தஸ்ராக்கில் தற்போது நிலைத்திருக்கும் காட்சிகளையேனும் பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தின.

கசாக்கைப் படம் எடுக்க நீங்கள் எத்தனை காலம் செலவிட்டீர்கள்?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிலிம் கேமராக்களில் படங்கள் எடுத்தேன். அவையெல்லாம் தொலைந்துபோய்விட்டன. 2010 முதல் 2016 வரையான ஆறு வருட காலத்தில் எடுத்த ஒளிப்படங்கள்தான் இப்போது இருக்கின்றன. எடுத்த படங்கள் மொத்தம் 3,000. தேர்ந்தெடுக்கப்பட்ட 100 படங்கள் இந்த ஒளிப்படப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எப்படியான வரவேற்பு கிடைத்தது?

இப்புத்தகம் இதுவரை இரண்டு விருதுகள் பெற்றிருக்கிறது. கேரள லலித்கலா அகாடமி, ரஷ்ய கலாச்சார மையம், தில்லி கேரள கிளப், ஷார்ஜா சர்வதேச புத்தகக் காட்சி, கேரள இலக்கியத் திருவிழா, திரைப்பட விழா ஆகியவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட ஒளிப்படக் காட்சிகள் நடத்தியிருக்கிறேன். இன்று கேரளத்தின் எல்லா நூலகங்களிலும் என் ஒளிப்படப் புத்தகங்கள் இருக்கின்றன. ஷார்ஜா சர்வதேச புத்தகக்காட்சி உட்பட பல்வேறு புத்தகக்காட்சிகளில் என் புத்தகங்கள் பெரிதும் கவனிக்கப்பட்டன.

இந்தப் பணியில் எப்படியான சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?

கசாக்கின் பருவநிலை மாற்றங்களை சித்திரிப்பதுதான் பெரிய கஷ்டமாக இருந்தது. மழைக்கான மேகமூட்டத்தை எதிர்பார்த்து வரும் நாட்களில் அப்படி நடக்காமலும் போகும் அல்லவா? சூரிய சந்திரனையும் உதய அஸ்தமனங்களையும் திருப்திகரமான நிலையில் படமெடுக்கப் பல காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. தலை சாய்த்துப் பார்த்தபடி ஓடும் மயில், பெரிய ஓணான், சிலந்திகள், மீன்கொத்தி, நீர்க்கோழி, தும்பிகள் தொடங்கி ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலில் வரும் பெரும்பாலான பிராணிகளையும் படமெடுத்திருக்கிறேன். இதற்காக நான் எண்ணற்ற நாட்கள் அலைந்துதிரிந்திருக்கிறேன். ஆனந்த அலைச்சல்தான்.

வேறு என்ன புத்தகம் வெளியிட்டிருக்கிறீர்கள்?

முதலில் வெளியிட்டது ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலின் ஒளிப்படத் தொகுப்புதான். பிறகு, வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய ஒளிப்படப் புத்தகம். அடுத்ததாக, எம்.முகுந்தனின் ‘மய்யழிக் கரையோரம்’. இந்த வரிசையில், புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘மீஸான் கற்கள்’, எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலுகட்டு’, ‘மஞ்சு’ ஆகிய நாவல்கள் குறித்தும், மாதவிக்குட்டி, வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியுமான ஒளிப்படப் புத்தகங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

- யூமா வாசுகி, ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்.

தொடர்புக்கு: marimuthu242@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x