Last Updated : 29 Apr, 2019 08:37 AM

 

Published : 29 Apr 2019 08:37 AM
Last Updated : 29 Apr 2019 08:37 AM

மனதை மணக்கவைத்த கி.ரா. குழம்பு!

குழந்தைகளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்..? பாடுவது, ஆடுவது, சிரிப்பை வரவைக்கும் வகையில் பேசுவது, தேவதைக் கதைகள் கேட்பது.. இப்படி எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து, குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது ‘கி.ரா. குழம்பு’ நாடகம்.

கீரைக் குழம்பு தெரியும். அதென்ன ‘கி.ரா. குழம்பு’?

கரிசல் மண்ணின் கதைசொல்லி கி.ராஜநாராயணனின் பல கிராமத்துக் கதைகள், வாய்மொழிக் கதைகள், பாத்திரங்களைக் கொண்டு, ஆனந்த்சாமி, மாயா கிருஷ்ணன், ரவீந்திர விஜய் தங்களது கற்பனை மசாலாவைச் சேர்த்து ராஜீவ் கிருஷ்ணனின் இயக்கம் எனும் கைப்பக்குவத்தில் சுடச்சுட பரிமாறுவதால், நாடகத்துக்கு ‘கி.ரா. குழம்பு’ என்றே பெயர் வைத்துவிட்டனர்.

சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள ‘ஜஸ்ஜம்ப்’ குழந்தைகள் விளையாட்டு மையத்திலும், அண்ணா நகரில் உள்ள லிட்டில் மில்லினியம் பள்ளியிலும் அரங்கேறிய ‘கி.ரா. குழம்பு’ நாடகத்துக்கு குழந்தைகளிடம் பெருத்த வரவேற்பு!

கி.ரா.வின் பல கிராமியக் கதைகளில் வருகிற பெரும் தொந்தி சுப்பு செட்டியார், மொச்சை, தென்னங்குச்சி பாத்திரங் களைப் புரிந்துகொண்ட பெரியவர்களும் நாடகத்தின் போக்கில் சிறிது நேரம் தங்களை மறந்து குழந்தைகளாகி குதூகலிப்பதைப் பார்க்க முடிந்தது.

‘‘முன்னொரு காலத்திலே வானம் இவ்ளோ உயரத்துல இல்லியாம்..’’ என்ற தொடக்கமே சுவாரஸ் யத்தை கூட்டிவிடுகிறது. நான்கு அடி உயரத்தில் இருந்து இப்போது இருக்கும் உயரத்துக்கு வானம் எப்படிப் போனதாம்? அதற்கு நடுவில் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் கதையின் மையம். ஒலி அமைப்புகள் இல்லை. வண்ண ஒளி விளக்குகள் இல்லை. இரண்டு மர பெஞ்ச்கள் தான் செட் ப்ராப்பர்டி. ஒரு சிவப்பு அங்கியே பறவைக்கு றெக்கையாகிறது. அதுவே ஆதிசேஷனாகிறது. காவேரி லால்சந்தின் ஆடை வடிவமைப்பு அவ்வளவு கச்சிதம்!

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் பாத்திரங்களின் வாயிலாக நகைச்சுவை, பொறாமை, அரசியல் பகடி, சுற்றுப்புற சுகாதாரம், சக உயிர்களின் மீதான நேயம்.. என எல்லாமும் ஒரு கலைடாஸ்கோப்புக்குள் தரிசனம் ஆகின்றன.

ஆனந்த்சாமி நவீன நாடக மேடைகளில் மிகவும் பிரபலமானவர். தமிழில் ‘லென்ஸ்’, மலையாளத்தில் ‘பாசஞ்சர்’ ஆகிய திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் கவனிக்க வைத்தவர். மாயா கிருஷ்ணன் ஒரு ஜிம்னாஸ்டிக் கலைஞர். சில திரைப்படங்களில் தன் நடிப்பால் கவனம் ஈர்த்திருப்பவர். ரவீந்திர விஜய் தமிழகம் மற்றும் பெங்களூரு நாடக மேடைகளில் பிரபலமாக நடித்துவருபவர். இந்த நாடகத்தை இதுவரை 88 முறை அரங்கேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x