Published : 06 Apr 2019 08:38 am

Updated : 06 Apr 2019 08:38 am

 

Published : 06 Apr 2019 08:38 AM
Last Updated : 06 Apr 2019 08:38 AM

360: தலையை இழந்த காதலி

360

பா.வெங்கடேசனுக்கு ஓசூரில் மரியாதை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஓசூர் கிளை சார்பில் நாளை (7-04-2019) மாலை 5.30 மணிக்கு, ஓசூர் தளி சாலையிலுள்ள பைரவி கலைப் பள்ளியில் எழுத்தாளர் பா.வெங்கடேசனுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பா.வெங்கடேசன், கிட்டத்தட்ட தனது எல்லாப் படைப்புகளிலும் தான் வாழ்ந்துவரும் ஓசூர் நிலப்பரப்பை மிக நுட்பமாகப் பதிவுசெய்திருக்கிறார். ‘நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓசூர் நிலப்பரப்பை முதன்முதலில் கையாண்டிருப்பது நான்தான் என்பதைப் பணிவோடு உரிமை கோரிக்கொள்கிறேன்’ என்று சொல்வார் பா.வெங்கடேசன். எழுதப்படும் களத்திலிருந்தே பெறும் கவுரவம் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.


தூத்துக்குடி புத்தகத் திருவிழா

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கம் நடத்தும் புத்தகத் திருவிழா, தூத்துக்குடியில் உள்ள ராமையா மஹாலில் கடந்த வியாழன் அன்று தொடங்கியது. ஏப்ரல் 14 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் 10% தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை ‘இந்து தமிழ்’ அரங்கு எண் 1B-ல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தலையை இழந்த காதலி

ஒளிப்படக் கலைஞர் சோஹ்ரப் ஹுராவின் புதிய புத்தகமான ‘தி கோஸ்ட்’, தலையை இழந்த காதலியைப் பற்றிய கதை. புதிய தலையைத் தருவதாக வாக்கு கொடுக்கும் கிளி ஜோசியக்காரன், முட்டாள் ஒளிப்படக் கலைஞன், கூண்டை விட்டுத் தப்பித்த பறவை இவை மூன்றும்தான் பிற கதாபாத்திரங்கள். இந்த மாய யதார்த்தக் கதை, 12 முறை திரும்பத் திரும்ப சிறிய மாற்றங்களோடு கூறப்படுகிறது. மாற்றி மாற்றி இந்தக் கதைகளைச் சொல்வதன் வழியாகக் கதாநாயகியின் தெரிவுகளிலும் கூடுதல் சாத்தியங்கள் உருவாகின்றன. கதையின் மையமான வன்முறை அம்சமும் குறைக்கப்படுகிறது. ஏப்ரலில் வெளியாகவிருக்கும் இப்புத்தகத்துடன் 119 நிமிடங்கள் கொண்ட காணொலி ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. புத்தகத்தில் உள்ள அதே கதை, சில மாற்றங்களுடன் உருவாகியுள்ள அப்படத்தின் பெயர் ‘தி லாஸ்ட் ஹெட் அண்ட் தி பேர்ட்’. “இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த பிரதிபலிப்புதான் இந்தப் படைப்பு” என்கிறார் ஹூரா.

ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரின் தேடல்

பிரிட்டிஷ் தந்தைக்கும், அமெரிக்கத் தாய்க்கும் மகளாகப் பிறந்த ஹாலி ரூபன்ஹுட்டுக்கு வரலாற்றின் மீது தீராக் காதல். ஹாலி எழுதிய ‘ஹாரிஸ் லிஸ்ட் ஆஃப் கவன்ட் கார்டன் லேடிஸ்’ எனும் புத்தகம் வெகு பிரசித்தம். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லண்டன் நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த பாலியல் தொழிலாளர்கள் குறித்த ஆவணமாக இப்புத்தகம் இருக்கிறது. இப்போது ‘தி ஃபைவ்: தி அன்டோல்ட் லைவ்ஸ் ஆஃப் தி விமென் கில்ட் பை தி ஜாக் தி ரிப்பர்’ எனும் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ஜாக் தி ரிப்பர் எனும் தொடர் கொலைகாரனிடம் சிக்கிக்கொண்ட பெண்கள் குறித்த வரலாறு இது. லண்டன் நகரின் அறிவார்ந்த வட்டங்களில் இப்புத்தகம் பேசுபொருள் ஆகியிருக்கிறது.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x