Published : 06 Apr 2019 08:33 AM
Last Updated : 06 Apr 2019 08:33 AM

நூல் நோக்கு: பெரியாரின் தமிழ்த் தொண்டை விளக்கும் கையேடு

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

கி.வீரமணி

திராவிடர் கழகம், சென்னை.

விலை: ரூ.180

 044-26618163

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற புத்தகம், 270 பக்கங்களில் 20 அத்தியாங்களில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகியவை மேம்பட பெரியார் செய்த மகத்தான பங்களிப்புகளைப் பேசுகிறது. தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஓயாத அக்கறையையும், அதற்கு அவர் செலுத்திய அயராத உழைப்பையும் விவரிக்கிறது. பெரியாரின் உரைகள், ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் மட்டுமல்லாமல் அவரது சமகாலத் தமிழறிஞர்களான திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி., சோமசுந்தர பாரதியார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்டோர் பெரியாரின் தமிழ்த் தொண்டு பற்றிக் கூறிய கருத்துகளும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளன. பெரியார் தமிழை ஆரிய மேலாதிக்கத்துக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தினார் என்பதும், அந்த ஆயுதம் நவீனக் காலத்துக்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டும் என்பதையே அவர் தமிழ் மொழி மீதான விமர்சனங்களாக வெளிப்படுத்தினார் என்பதையும் இந்நூல் விளக்குகிறது. தமிழை அவர் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதும் அத்தன்மையிலானதே என்பதை விளக்க ஒரு தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அந்நூலை அவர் எவ்வளவு மதித்தார், அதன் பெருமைகளை எப்படியெல்லாம் பரப்பினார் என்பவை ‘குறளைப் பரப்பிய பெரியார்’ என்ற அத்தியாயத்தில் விரிவான தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. சென்னை ராஜதானிக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வேண்டும் என்பதையும் பெரியார் தன் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார். பொங்கலை ‘தமிழர் பண்டிகை’யாக இடம்பெறச் செய்ததிலுள்ள பெரியாரின் பணியும் நூலில் இடம்பெற்றுள்ளது. அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துச் சீர்த்திருத்தங்களை முன்மொழிந்து தமிழ் மொழியைப் புதுப்பித்ததோடு நில்லாமல், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் தமிழர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை என்பதையும், புராணக் கதைகளை விடுத்து தமிழர்களின் வரலாற்றை, அவர்தம் வாழ்வியலைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடமாகப் புகட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார் என்பதைப் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள உரைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. திராவிட இயக்கமும் அதைத் தொடங்கியவரான பெரியாரும் தமிழுக்கும் தமிழினத்துக்கும் விரோதிகள் என்று சித்தரிக்கப்படும் பிரச்சாரத்தை ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் எதிர்கொண்டு உடைக்கிறது இந்நூல்.

- ச.கோபாலகிருஷ்ணன்

சங்கீத சிகரம் செங்கோட்டை

எஸ்.ஜி.கிட்டப்பா

செ.திவான்

அட்சரம் பதிப்பகம்

பல்லடம், திருப்பூர் - 641667.

விலை: ரூ.130,   9159659788

கந்தர்வ கான கிட்டப்பா

கிராமபோன் இசைத்தட்டுகள் வெளிவந்த காலத்தில் இசை ரசிகர்களிடம் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கிட்டப்பா. சங்கரதாஸ் சுவாமிகளிடம் இசைப் பயிற்சி பெற்று இசைநாடக மேடைகளில் கதாநாயகனாக உலாவந்தவர், உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர், கதர் உடுத்தி தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாளை இசையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. நெல்லையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் செ.திவான், தன் மண்ணில் பிறந்த மாபெரும் இசைக்கலைஞருக்குச் செய்திருக்கும் மரியாதை இந்நூல். 1934-ல் ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய ‘ஸ்ரீமான் கிட்டப்பா அவர்களின் ஜீவிய சரித்திரம்’ நூலுடன் கிட்டப்பாவைப் பற்றிய அரிய செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இசையறிஞர் விளாத்திக்குளம் சுவாமிகளைப் பற்றிய ஆவணப்படத்தையும் நூலையும் உருவாக்கிய என்.ஏ.எஸ்.சிவகுமார் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.

- புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x