Published : 24 Mar 2019 08:18 am

Updated : 24 Mar 2019 08:18 am

 

Published : 24 Mar 2019 08:18 AM
Last Updated : 24 Mar 2019 08:18 AM

தஞ்சை பெரிய கோயிலில் காந்தி

தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்று தனித்தன்மை வாய்ந்தது. காந்தியின் வரலாற்றிலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு செலுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இந்த உறவு, தொடர்பு தொடங்கிவிடுகிறது. தென்னாப்பிரிக்கப் போராட்ட வரலாற்றில் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகம், காந்தியடிகளால் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கிறது.

சென்னையில் 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு காந்தியடிகள் விடுத்த செய்தியில், ‘எனது தமிழறிவு சொல்பமே. ஆயினும் நான் தமிழின் அழகையும் வளத்தையும் அந்த அறிவிலும் உணருகிறேன். தமிழை அலட்சியம் செய்வது ஒரு பெருங்குற்றம் என்பது என்னுடைய அபிப்பிராயம்’ என்று தமிழ் மீதான தமது ஈடுபாட்டைக் குறிப்பிட்டார் (மணிக்கொடி 24.12.1933). திருக்குறள், கம்ப ராமாயணம் போன்றவற்றின் உயர்வை உணர்ந்திருந்த அவர் அதை வெளிப்படுத்தியும் இருக்கிறார். ஓய்வு கிடைத்தால் தமிழ்த் தாத்தா உ.வே.சா.விடம் தமிழ் படிக்க ஆசை என ஒருமுறை காந்தி கூறியிருக்கிறார். தம்மைச் சந்தித்த பாரதி விடைபெற்றதும், ‘இவரைப் பாதுகாக்க வேண்டும்’ என்று ராஜாஜி உள்ளிட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்த கோயில்களின் கதவுகள்

தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் காந்தியடிகள் வந்துசென்ற வரலாற்றை ஆவணமாக்கி விவரிக்கும் அரிய நூல் அ.இராமசாமியின் ‘தமிழ்நாட்டில் காந்தி’. இந்நூலில் காந்தி தஞ்சைக்கு வந்து சென்ற வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நூல் விவரிக்காத முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பயணம் குறித்த சில செய்திகள் இப்போது ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் வாயிலாகக் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று 24.03.1919-ல் தஞ்சைக்கு முதன்முறையாக வந்தபோது தஞ்சை பெரிய கோயிலுக்கு காந்தியடிகள் சென்ற நிகழ்வு. தஞ்சை பெரிய கோயிலுக்கும் காந்தியடிகளுக்குமான ஒரு தொடர்பை வெளிப்படுத்தும் அறிவிப்பு, பெரிய கோயிலில் இடம்பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 99 கோயில்களையும் தாழ்த்தப்பட்டவர்களின் வழிபாட்டுக்காகத் தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம் ராஜா திறந்துவிட்டிருக்கிறார் என்பதை காந்தியடிகள் பாராட்டிய பதிவு இது. அப்பதிவு (29.07.1939) வருமாறு:

‘இராஜாஸ்ரீ இராஜாராம் இராஜா அவர்கள் மூத்த இளவரசரும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அரங்காவலரும் ஆவார்கள். புகழ்பெற்ற தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வர ஆலயம் உட்பட இவரது பொறுப்பில் 90 கோயில்கள் உள. எல்லாத் திருக்கோயில்களையும் அரிசனங்களின் வழிபாட்டிற்காக இவர் திறந்துவிட்டார். இது அரிசனங்களுக்கான தன்னிச்சையான திருத்தச்செயலாகும். இதுவே இந்து மதத்தினைத் தூய்மைப்படுத்துவதை விரைவுபடுத்தும். இது இராஜாசாஹேப் அவர்களின் ஒரு பெரிய நல்ல செயலாகும். எனவே, தீண்டாமை இந்து மதத்திலுள்ள களங்கம் என்று நம்புபவர்கள் அனைவரின் வாழ்த்துகளையும் இவர் பெறத் தகுதியானவர்.’

காந்தியடிகள் தொடர்பான வேறு பதிவு பெரிய கோயிலில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. 1919 மார்ச் 26 அன்று வெளிவந்த ‘சுதேசமித்திரன்’ இதழில் பெரிய கோயிலுக்கு காந்தி சென்ற நிகழ்வு விரிவாகப் பதிவுபெற்றுள்ளது. மார்ச் 24 அன்று தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில், நகரின் பல பிரமுகர்களும் கூடியிருந்தனர். வண்டியிலிருந்து காந்தி இறங்கியதும் அவருக்கென்று ஏற்படுத்தியிருந்த ஆசனத்தில் அமரவைத்தனர். தஞ்சையின் புகழ்பெற்ற வழக்கறிஞரும் தேசியவாதியும் ‘தமிழ் வரலாறு’ நூலை எழுதியவருமான கே.எஸ்.சீனிவாசம் பிள்ளை மாலை அணிவித்தார். வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவருக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த மோட்டார் வண்டியில் ஏறி சீனிவாசம் பிள்ளையின் பங்களாவுக்கு காந்தி சென்றார்.

காந்தியின் முதல் தமிழ் கையொப்பம்

அதன் பின் 10 மணிக்குத் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கே கோயில் அதிகாரிகள் செய்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கே வைக்கப்பட்டிருந்த வருகைதருவோர் கையொப்பம் இடுகிற புத்தகத்தில் தமது பெயரைத் தமிழில் காந்தியடிகள் கையொப்பமாக இட்டிருக்கிறார். காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வருகைதந்தபோதும் தமிழ் தொடர்பான சூழல்களிலும் தமிழிலேயே தம் பெயரை எழுதிக் கையொப்பமிட்ட நிகழ்வுகள் பிற்காலத்தில் சில நடந்திருக்கின்றன. 1933-ல்

சென்னைக்கு வந்த மகாத்மா 24.12.1933-ல் நடந்த தமிழன்பர் மாநாட்டுக்கு ஆசி வழங்கி அனுப்பிய செய்தியில் ‘மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார். இதை, அந்தக் கூட்டத்தில் அறிவித்தபோது கூட்டத்தில் நீண்ட நேரம் கரகோஷம் எழுந்ததாம் (மணிக்கொடி 24.12.1933). பிற்காலத்தில், 1947-ல் கல்கி, ராஜாஜி ஆகியோர் மக்கள் ஆதரவோடு எட்டயபுரத்தில் மகாகவி பாரதி மணிமண்டபத்தை நிறுவிய விழாச் சூழலில் அதை வாழ்த்தித் தமது கைப்படத் தமிழில் எழுதிய செய்தியிலும் ‘பாரதி ஞாபகார்த்த பிரயத்தனங்களுக்கு என் ஆசீர்வாதம் - மோ.க.காந்தி’ எனத் தமிழில் கையொப்பமிட்டிருந்தார்.

தமிழ்நாட்டளவில் தமிழில் கையொப்பமிடும் காந்தியின் முதற்பதிவாகத் தஞ்சை பெரிய கோயிலில் கையொப்பமிட்ட நிகழ்வு இருக்கக்கூடும். அவ்வாறு கையொப்பமிடும்போது, அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனா, அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்திருக்கிறது. அதைக் கண்ட காந்தி, சுதேசிய மயமாய் இருக்கும் நாணத்தட்டையால் எழுத வேண்டுமென்றும், சுதேசியத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அங்குதான் அத்தியாவசியம் என்றும், தர்மகர்த்தாக்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர்களிடத்தில் எடுத்துக் கூறியிருக்கிறார்.

தஞ்சையில் சத்யாகிரக உரை

அதன் பின்னர், பெரிய கோயிலிலிருந்து தஞ்சை நகர முக்கியத் தெருக்களின் வழியாகச் சென்று ஆங்காங்கு பிரமுகர்களின் மரியாதை பெற்றுத் தமது இருப்பிடத்தை அடைந்தார். 12 மணி முதல் 2 மணி வரை திருவையாறு சாது கணபதி சாஸ்திரியார் குழுவினரால் நடத்தப்பட்ட வாய்ப்பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். 4 மணிக்கு நகரப் பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். மாலை 6 மணிக்கு தஞ்சை பெசன்ட் லாட்ஜில் சுமார் 10,000 மக்களின் முன் சத்யாகிரக விரதத்தைப் பற்றி உரையாற்றினார். அதில் காந்தியடிகள் எடுத்துரைத்த செய்திகளை சுதேசமித்திரன் (26.03.1919) பின்வருமாறு வெளியிட்டிருந்தது:

‘மகாத்மா தன்னுடைய பிரசங்கத்தில் சத்யாக்ரஹ விரதமென்றால் இன்னதென்றும் அவ்விரதத்தைக் கைக்கொண்டவர்களுக்கு விஷேச ஆத்ம சக்தி உண்டாகுமென்றும் அவ்வாத்ம சக்தியினால் பெரிய காரியங்களை நடத்தலாமென்றும் அதற்கு தற்சமயமே சரியான காலமென்றும் ஒருவனும் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமான காரியத்தைச் செய்யக் கூடாதென்றும் அநீதியான அதர்மமான கெட்ட சட்டங்களை அடியோடு ஒழித்துப் பொது நன்மைக்கும் பிரஜைகளின் முன்னேற்றத்திற்கும் நமது தேசத்தின் ஷேமத்திற்கும் சரியான வழியளிப்பது இந்த சத்யாக்ரஹ விரதமென்றும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் சத்யாக்ரஹிகளால் ஒருவருக்கும் எவ்விதத் தீங்கும் விளையாது என்றும் சத்யாக்ரஹிகள் சத்தியத்தைக் கைக்கொண்டு கோபமில்லாமலும் பழிக்குப்பழி வாங்குவதென்ற எண்ணமில்லாமலும் சண்டைச் சச்சரவில்லாமலும் விஷேசமான பரித்யாகங்களைச் செய்தும் மகத்தான கஷ்டங்களை அனுபவித்தும் தேசத்தின் நன்மையைத் தேட வேண்டுமென்றும் பிரஹல்லாதருடைய மகிமையைப் பற்றி விஸ்தரித்துச் சொல்லி சத்தியத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்சமயம் ஜனங்களின் பிரதிநிதிகளின் அபிப்ராயத்திற்கு நேர்விரோதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரௌலட் சட்டத்தை உடனே கவர்ன்மெண்டார் ரத்துசெய்யும்படிச் செய்ய வேண்டியது சத்யாக்கிரஹிகளின் முக்கியக் கடமையென்றும் ஜனங்களெல்லாம் பரவசமாகும்படி எடுத்துச்சொன்னார்.’

காந்தியின் சொற்பொழிவை டாக்டர் ராஜன் தமிழில் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்து, முஸ்லிம் பிரமுகர்கள் கூட்டத்தில் பேசினர். 75 பிரமுகர்கள் சத்தியாகிரக விரதத்தை அனுஷ்டிக்க ஒப்புக்கொண்டு அங்கே கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் காந்தியடிகள் தஞ்சை மேலவீதியில் குஜராத்தியரின் மடத்துக்குச் சென்றார். குஜராத்தியப் பிரமுகர்கள் காந்திக்கு நல்வரவுப் பத்திரிகை வாசித்து அளித்து மரியாதை செய்தனர். தமிழ் மண்ணில் தமது தாய்மண்ணைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து காந்தி மகிழ்ந்தார்.

இச்செய்திகள் பலவும் ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலில் இடம்பெறவில்லை. 1919-ல் முதன்முறை தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகைதந்த பதிவு, 1939-ல் தாழ்த்தப்பட்டவர்கள் தரிசனத்துக்குத் திறந்துவிடப்பட்டதையொட்டி எழுதிய பதிவு என இரு பதிவுகள் பெரிய கோயிலை மையமிட்டுக் கிடைக்கின்றன. இந்த நூற்றாண்டு தினத் தருணத்தை நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்வோம்!

- ய.மணிகண்டன், பேராசிரியர்

தலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com

24.03.1919: தஞ்சை பெரிய கோயிலுக்கு மகாத்மா காந்தி வருகைதந்த நூற்றாண்டு தினம் இன்று.


தஞ்சை பெரிய கோயிலில் காந்திதஞ்சை பெரிய கோயில் மகாத்மா காந்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author