Published : 10 Mar 2019 08:05 AM
Last Updated : 10 Mar 2019 08:05 AM

நூல் நோக்கு: நூலகர்- கவிஞரின் நிறைவேறாத கனவு

நூலகத்தால் உயர்ந்தேன்

ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

வசந்தா பதிப்பகம்

சென்னை - 88

விலை: ரூ.1,200

  9380417307

நூலகர்- கவிஞரின் நிறைவேறாத கனவு

நூலகரும் மரபுக் கவிஞருமான ஆலந்தூர் கோ.மோகனரங்கனின் சுயசரிதை. இளம்வயதில் அரசு நூலகமொன்றில் பணியில் சேர்ந்து, வாசிப்பால் தன்னை உயர்த்திக்கொண்ட ஒரு பெருமனிதரின் வாழ்க்கை. திரையுலகில் பாடலாசிரியராக வேண்டும் என்கிற கனவில், ஞாயிறுதோறும் சென்னைக்கு வந்து எம்.எஸ்.விஸ்வநாதன், டி.ஆர்.பாப்பா, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சவுந்தர்ராஜன் ஆகியோர் வசித்த மந்தைவெளி பகுதியில் வாய்ப்புக் கேட்டு அலைந்து திரிந்திருக்கிறார்.

ஒரு மாலைப்பொழுதில் அக்கனவை அவர் அறுத்தெறிந்துவிட்டு, எழுத்திலேயே முழுக் கவனமும் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். இப்படித் தனது வாழ்க்கை அனுபவங்களோடு தான் பார்த்த பல நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மோகனரங்கன்.  எம்.ஜி.ஆர் சுடப்பட்ட செய்தியைத்  தெரிந்துகொள்ள நூலகத்தில் மக்கள் வரிசையில் நின்ற காட்சி இன்றைக்கும் ஆச்சரியம் அளிக்கிறது.

- மானா பாஸ்கரன்

ஏர்வாடியாரின் மனதில்

பதிந்த மாண்புறு

மனிதர்கள் 100

தொகுப்பு : இரா.மோகன்

வானதி பதிப்பகம்,

சென்னை–17

விலை: ரூ.1,000

 044- 24342810

ஆளுமைகள் நூறு

47 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ‘கவிதை உறவு’ இதழின் ஆசிரியர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், ‘மனதில் பதிந்தவர்கள்’ எனும் தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகள் இதுவரை 9 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இதுவரை 241 ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். அக்கட்டுரைகளிலிருந்து 100 ஆளுமைகளைத் தேர்வுசெய்து தொகுத்துள்ளார் இரா.மோகன். நடைச் சித்திரமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், வெறும் வாழ்க்கை வரலாறாக இல்லாமல், மனங்கவர்ந்த மனிதர்களின் குண நலன்களையும், அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் படிப்பவர் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளது. சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மனிதர்களைக் கொண்டாடுகிற முன்னெடுப்பு என்று இத்தொகுப்பைச் சொல்லலாம்.

- மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x