

நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மகத்தான இயக்க சக்தி சி.சு.செல்லப்பா. காந்தி யுக அர்ப்பணிப்போடும் லட்சியப் பிடிமானத்தோடும் செயல் முனைப்போடும் கலை நம்பிக்கையோடும் வைராக்கிய சித்தத்தோடும் இயங்கிய பேராற்றல்மிக்க சக்தி. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளத்துக்கும் செழுமைக்கும் களமாக அமைந்த சிறுபத்திரிகை இயக்கத்தைக் கட்டமைத்த தனித்துவ ஆளுமை. சிறுபத்திரிகை என்ற கருத்தாக்கத்துக்குச் செம்மையான வடிவம் கொடுத்த இதழான ‘எழுத்து’ இவருடைய கடும் பிரயாசைகளாலும் மேலான கனவுகளாலும் உருவானது. நவீனத் தமிழிலக்கியப் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்து, அதற்கு விரிவும் ஆழமும் தந்த களம். இவ்வியக்கம் நிர்மாணித்த எல்லைகளிலிருந்து விரிந்து செழித்ததுதான் சிறுபத்திரிகை இயக்கம்.
11 வருடங்கள் (1959-70) கடும் நெருக்கடிகளுக்கிடையே, தன் இருப்புகளையெல்லாம் இழந்து இதழை நடத்திய கனவு மனிதர். ‘எழுத்து’ என்ற இதழ் மூலம் அவர் விரித்த பெரும் சிறகுகளுக்குள் அடைக்கலமாகி இலக்கிய வெளியில் பல ஆளுமைகள் உயரப் பறந்தனர்.
நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஏ தமிழ் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் - 1972 இறுதியில், சி.சு.செல்லப்பாவைப் பார்த்தேன். இரு கைகளிலும் கைக்கு ஒன்றாக முரட்டுக் காடாத் துணிப் பையில் ‘எழுத்து பிரசுரம்’ வெளியீடுகள் நிறைந்திருக்க சி.சு.செல்லப்பா, தமிழ்த் துறைக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 60. மெலிந்த தேகம். லேசாகப் பழுப்பேறிய வேட்டி. தொள தொள வெள்ளைச் சட்டை. அது ‘எழுத்து’ இதழ் நின்று, ‘எழுத்து பிரசுரம்’ எனப் புத்தக வெளியீடுகளிலும் அவற்றை விற்பதிலும், தமிழ்த் துறையினரின் பரவலான கவனத்துக்குக் கொண்டுசெல்வதிலும் சி.சு.செல்லப்பா கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலம். எங்கள் துறையில் நவீனத் தமிழ் இலக்கியம் பயிற்றுவித்த பேராசிரியர் சி.கனகசபாபதி செல்லப்பாவுக்கு நன்கு அறிமுகமானவர். ‘எழுத்து’ இதழில் புதுக்கவிதை குறித்துக் கல்விப்புலரீதியிலான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதியவர். எனது நவீன இலக்கிய ஈடுபாடு கனகசபாபதியுடன் அணுக்கமான உறவை உருவாக்கியிருந்தது. மேலும், செல்லப்பா என்ற ஆளுமையின் முக்கியத்துவத்தையும் அப்போது அறிந்திருந்தேன். ‘எழுத்து’ இதழ்கள் சிலவற்றையும் கனகசாபாபதி மூலம் வாசித்திருந்தேன். சிறுபத்திரிகைகளைத் தேடி வாசிக்கும் முனைப்பும் இருந்தது. ஒரு கனவுவெளிக்குள் பயணப்படுவதற்கான ஆரம்ப உத்வேகத்தோடு இருந்துகொண்டிருந்த சமயம். “நாளை செல்லப்பா வருகிறார்” என்று கனகசபாபதி சொன்னதிலிருந்தே மனம் அவரைச் சந்திக்கும் பரவசத்துக்கு ஆட்பட்டிருந்தது.
எம்ஏ முதலாமாண்டு முதல் செமஸ்டர், தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றியது. ’எழுத்து’ இதழில் வெளிவந்த புதுக்கவிதைகளிலிருந்து சி.சு.செல்லப்பா தேர்ந்தெடுத்துத் தொகுத்த ‘புதுக்குரல்கள்’ பாடத்திட்டத்தில் இருந்தது. பிரமிள், தி.சோ.வேணுகோபாலன், பசுவய்யா, நகுலன், சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன் என ‘எழுத்து’ உருவாக்கிய கவிஞர்களின் கவித்துவப் பாதைகளைக் கண்டறிந்து பிரமித்திருந்த காலம். நாவல் பிரிவில் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ பாடமாக இருந்தது. நான் சிறப்புப் பாடமாக நாவலை எடுத்திருந்ததால் செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’ நாவலையும் வாசித்திருந்தேன். செல்லப்பாவைக் காணும் பேராவலோடு காத்திருந்தேன்.
அன்று சி.சு.செல்லப்பா தமிழ்த் துறை நூலகத்துக்கும் பல்கலைக்கழக நூலகத்துக்கும் புத்தகங்களை விற்பதற்காக வந்திருந்தார். புதுக்கவிதையின் புது வடிவம் பற்றியும், கால முக்கியத்துவம் பற்றியும் மாணவர்களிடையே உரையாடினார். அக்காலத்தில் அவர் தமிழ்நாடெங்கும் ஒவ்வொரு கல்லூரியாகப் புத்தகங்கள் தாங்கிய துணிப் பைகளோடு சென்றுகொண்டிருந்தார். நூலகங்களுக்குப் புத்தகங்கள் விநியோகிப்பதற்கும் கல்லூரிப் பாடத் திட்டங்களில் நவீன இலக்கியப் படைப்புகளை இடம்பெறச் செய்வதற்குமாக முதிய வயதில் புத்தகங்களின் பாரம் சுமந்து கல்லூரி கல்லூரியாக அலைந்தார். அன்று கல்லூரித் தமிழ்த் துறையினரிடம் நவீன இலக்கியம் குறித்து கடும் வறட்சி நிலவியது மட்டுமல்ல; நவீன இலக்கியம் குறித்த எதிர் மனோபாவமும் பீடித்திருந்தது. இத்தகைய சூழலில் செல்லப்பா மேற்கொண்ட பிரயத்தனங்களும் தமிழ்ப் பண்டிதர்களிடம் சளைக்காமல் அவர் நடத்திய உரையாடல்களும் ஒரு கடுமையான முன்னோடி முயற்சி. கல்விப் புலங்களில் நவீன இலக்கியப் பிரக்ஞையை உருவாக்குவதன் மூலமே மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு அல்லல்பட்டவர். அதன் பலன்கள் ஓரளவேனும் இன்று கூடிவந்திருக்கின்றன.
பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் கனகசபாபதி இருந்ததும், துறைத் தலைவராக இருந்த முத்து சண்முகம்பிள்ளையின் நவீனப் பிரக்ஞையும் அன்று செல்லப்பாவின் வருகைக்குப் பலன் அளித்தன. மதியம் அவரை பஸ் ஏற்றிவிட கனகசபாபதியும் நானும் சென்றோம். அவரிடம் பைகளைத் தருமாறு கேட்டேன். பிடிவாதமாக மறுத்துவிட்டார். “இப்ப நீ தூக்கிடுவ. பிறகு, யார் தூக்குவா? என் சுமையை நான்தான் சுமக்கணும்” என்றபடி இரு கைகளிலும் புத்தகப் பைகளோடு நடையைத் தொடர்ந்தார். பிற்காலங்களில் எனது சென்னை வாழ்க்கையில் அவருடைய இந்தப் பிடிவாதத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் நின்றுகொண்டிருந்தபோது, மீண்டும் கேட்டேன். “பஸ் வரும்வரை வச்சுருக்கேன்” என்றேன். சட்டெனப் பைகளைக் கீழே வைத்துவிட்டு ஒரு பார்வை பார்த்தார். நான் அமைதியாகிவிட்டேன். பஸ் வந்ததும் இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு, “ஏறுங்க தர்றேன்” என்றேன். ஏறிய பின் கொடுத்தேன். லேசாகச் சிரித்தபடி வாங்கிக்கொண்டார்.
பல ஆண்டுகளுக்குப் பின், என் சென்னை வாழ்வில் அவரை மீண்டும் சந்தித்தபோது தன் முந்தைய கால சாதனைகளோடு நிறைவுற்று, சமகாலப் போக்குகளில் அதிருப்தியும் சலிப்பும் கொண்டவராக மாறியிருந்தார். அவருடைய உடல்மொழியிலும் பழகுமொழியிலும் ஓர் இறுக்கம் இருந்துகொண்டிருந்தது. இதே காலகட்டத்தில்தான், நவீனத் தமிழ் இலக்கியவெளியைக் கட்டமைத்த மற்றொரு சக்தியான க.நா.சுப்ரமண்யம் தன் 20 ஆண்டு டெல்லி வாசத்தை முடித்துக்கொண்டு தன் குடியிருப்பை 1985-ல் சென்னைக்கு மாற்றினார். முதுமையிலும் க.நா.சு. சகல வயதுப் படைப்பாளிகளோடும் இலக்கிய ஆர்வலர்களோடும் சகஜமாக உரையாடினார். சமகாலத் தன்மையோடு இருந்துகொண்டிருந்தார். ஆனால், சி.சு.செல்லப்பா தன் சாதனைக் காலத்தோடு உறைந்துவிட்டிருந்தார். எனினும், தன் காலத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவர் நிகழ்த்திக் காட்டிய வரலாறு நித்திய மதிப்பு கொண்டது. ஓர் ஆதர்ச சக்தியாக நாம் போற்றிக் கொண்டாட வேண்டிய பெருமிதம் அவர். செல்லப்பாவின் பெருமையை நாம் அறியத் தவறியிருக்கும் அவலத்தையும் அவருடைய முக்கியத்துவத்தையும், ‘தமிழகம் உணர்ந்துகொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு’ என்று குறிப்பிடுகிறார் கலை இலக்கியப் பண்பாட்டு விமர்சகரான வெங்கட் சாமிநாதன்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com