Last Updated : 02 Mar, 2019 10:07 AM

 

Published : 02 Mar 2019 10:07 AM
Last Updated : 02 Mar 2019 10:07 AM

மதுராந்தகனின் அகவுலகம்

கங்காபுரம், அ.வெண்ணிலா

அகநி வெளியீடு, வந்தவாசி -604 408.

விலை: ரூ.450  9842637637

ஜோ டி குருஸ்ராஜராஜனுக்கு மகனாய்ப் பிறந்து, அவனது ஒவ்வொரு சிகரச் சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த மதுராந்தகன் பின்னாளில் தாமதமாகவே ராஜேந்திரன் என மகுடம் சூட்டப்பட்டான். கங்கையும், கடாரமும் கொண்ட இச்சோழ இளவல், தன் முன்னோர்கள் உருவாக்கிய சோழ அரசின் விரிவாக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டதோடு மட்டுமல்லாது, நிர்வாகத் திறத்தால் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றிருந்தான். சோழர்களின் நீர் மேலாண்மை இன்றும் வியக்கவைக்கிறதே!

ராஜேந்திரனின் ஆட்சிக்காலமே தமிழர்களின் பொற்காலம் என்பது யாராலும் என்றும் அழித்துவிட முடியாத வரலாற்றுச் சான்று. ஆனால், அவன் தான் வாழ்ந்த காலம் முழுவதுமே தன் தந்தையைப் பற்றிய பிரமிப்பிலிருந்து மீளாமலேயே வாழ்ந்திருந்தான். பெரும் அகச் சிக்கல்களோடே வாழ்ந்திருந்தாலும் மக்கள் நலன் கருதி, தன் மனநிலையை ஒருபோதும் மக்கள் அறிய வெளிப்படுத்தவில்லை.  அவனது ஆளுமையை நவீன இலக்கியத் தரத்தோடு இன்றைய வாசகர் மனதில் அழியாப் புனைவாக பதிந்ததில் கவிஞர் வெண்ணிலா வெற்றிபெற்றிருக்கிறார்.

வரலாற்று நாவலாகையால் தூண்டில்காரனுக்கு தக்கையிலேயே கண் என்பார்களே அதுபோல என் கண்கள் துளாவித் துளாவித் தேடியவை மூன்று விஷயங்கள். ஒன்று மீனவக் குடிகளான முத்தரையர்களிடமிருந்து விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியது. மற்றொன்று, தில்லையில் கூத்தனுக்கு மாப்பிள்ளைச் சீர்செய்யும் கிள்ளைப் பரதவர் பற்றிய குறிப்பு. இரண்டு இருந்தது. அப்பாடா, வரலாறு முக்கியம். ஆனால், பரந்து விரிந்த வங்கக் கடலை ஏரிபோல் பயன்படுத்திய சோழனுக்கு, பரதவக் கடலோடிகளின் துணை இருந்திருக்க வேண்டுமே!

நிலம், நீரென நினைத்த இடத்துக்குப் படை நடத்தும் ராஜேந்திரனின் ஆற்றலைச் சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது. 11-ம் நூற்றாண்டிலேயே தமிழரின் மாட்சியைச் சமுத்திர ஆளுமையில் நிரூபித்ததன் மூலம் உலகையே சோழ சாம்ராஜ்ஜியத்தை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்தவன் அவன்.

ராஜேந்திரனின் புறச்சாதனைகளைப் பற்றிப் பேச ஆயிரம் புத்தகங்கள் எழுதலாம். ஆனால், அவன் அகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த நிகழ் கணங்களின் எண்ண ஓட்டங்களை யார் நமக்குச் சொல்லுவார்? அதற்கும் ஒரு தாயுள்ளம் வேண்டுமே! ‘கங்காபுரம்’ வரலாற்றின் மீட்டுருவாக்கம். வரலாற்று ஆளுமைகளை, அவர்தம் உள்ளம் கவர்ந்தவர்களை, அவர்களைச் செதுக்கிய சிற்பிகளை, தோளோடு தோளுரசும் மனிதர்களாய் நிகழுலகில் உலவவிடும் அற்புதம் இந்நாவலில் நடந்திருக்கிறது. சம்பவ நிகழ்தலைக் காட்டிலும், கதாபாத்திரங்களின் உள்மனவோட்டங்களின் வீரியத்தை, உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் இருக்கிறது.

ஒவ்வொரு புறத்தோற்றத்துக்கு உள்ளேயும் ஒரு அகத்தோற்றம் ஆளுமை செய்கிறது. அதுவே வெற்றி, தோல்வி என்ற புறமாயைகளுக்கும் காரணமாகிறது. ராஜேந்திரன் என்ற புறத்தோற்றத்தின் காரணகர்த்தாவான அவன் மட்டுமே தரிசிக்க முடிந்த உருவமற்ற மதுராந்தகன் என்ற அகஆளுமை இருக்கிறான். அவமானங்களையும், அலட்சியங்களையும் அடியுரமாய் மாற்றும் ரஸவாதம் தெரிந்தவன் அவன். ஐம்புலன்களால் மற்ற யாராலும் கண்டுகொள்ள முடியாதவன், உள்மனதில் அரூபியாய் உணரப்படக்கூடிய, அந்த ராஜேந்திரனை வாசகர்களுக்குக் காட்சிப்படுத்தி உணரவைத்திருக்கிறார் வெண்ணிலா.

தாய்வழிச் சமூகக் கூறுகளாய் நாவலெங்கும் காத்திரமான பெண் பாத்திரங்கள். பாட்டியாய், தாயாய், அத்தையாய், தமக்கையாய், தோழியாய், காதலியாய், மனையாட்டிகளாய்… அவனே அறியாத அவனை அறிந்துவைத்திருக்கும் ஆன்மாவின் காதலியான வீரமாதேவியுடனான காதலும் கலந்துரையாடலும் கவிதையின் நேர்த்தி. ராஜேந்திரனைப் போலவே அதிபக்குவம். அதனால்தான்,  ‘எப்போதும் என் தலைக்கு மேல், கருநிழலென என் தந்தையின் பெருமையும், வெற்றியும் பின்தொடர்ந்தபடியே இருக்கின்றன’ என அவளிடம் மட்டுமே அவனால் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

பறக்க எத்தனிக்கும் கணத்தில் பறவையின் அலகு பட்டு தனித்த ஓர் இலை காற்றில் அலையுறுவதைப் போல் அலைக்கழிக்கப்பட்டாலும் தன் இதழ்க்கடையில் துளிர்விட்ட சிறுநகையோடு கடந்துவிடத் தெரிந்திருக்கிறது ராஜேந்திரனுக்கு. அறிவால், ஆற்றலால், ஆளுமையால், எதிர்நோக்குப் பார்வையால், பண்பாட்டால் கொண்டாடப்பட வேண்டியவன் ராஜேந்திர சோழன்.

- ஜோ டி குருஸ்,

சாகித்ய அகாடெமி விருதுபெற்ற எழுத்தாளர்.

தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x