Published : 10 Mar 2019 08:01 AM
Last Updated : 10 Mar 2019 08:01 AM

தமிழ் ஆய்வுலகம் ஏன் தூங்கிவழிகிறது?-

ஆயிரம் பூக்கள் கருகட்டும்

ரவிக்குமார்

மணற்கேணி பதிப்பகம், தஞ்சாவூர்- 613 004.

விலை: ரூ.120

தொடர்புக்கு: 8110906001

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும்  செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும்  விவாதங்கள் இவை.

டெல்லி பல்கலைக்கழகத்தால் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட ஏ.கே.ராமானுஜனின்  ‘முந்நூறு ராமாயணங்கள்’ கட்டுரையைப் பற்றிய அறிமுகத்தோடு அதை எதிர்ப்பதற்குப் பின்னுள்ள அரசியலைக் குறித்தும் விவாதிக்கிறது முதல் கட்டுரை. ராமாயணத்தின் பல்வேறு பிரதிகளுக்கு இடையே இருக்கும் முரண்களைச் சுட்டுவதால் அக்கட்டுரை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது என்று அக்கட்டுரையை ஆதரிக்கும் அறிஞர்கள் தெரிவித்தார்கள்.  ஆனால், வால்மீகி ராமாயணத்தோடு ஒப்பிட்டு கம்ப ராமாயணத்தின் சிறப்பைப் பாராட்டும் கட்டுரை என்பதால்தான் அது பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ரவிக்குமாரின் ஐயம்.

தமிழகச் சூழலில் ராமாயணத்தை வைத்துப் பார்க்கும் ரவிக்குமார், திராவிட இயக்கத்தின் கம்ப ராமாயண எதிர்ப்பு  என்பது வழிபடுபிரதி என்பதற்கு எதிரானதே தவிர, இலக்கியப் பிரதியாக அதை எதிர்ப்பது அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அண்ணாவின் ‘கம்பரசம்’ வழியாக கம்பனை வந்தடைந்தாகச் சொல்லும் அவர், கம்பரசத்திலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் ஏ.கே.ராமானுஜனின் கட்டுரையோடு மிக நெருக்கமானவை.   ‘ஆராய்ச்சி அதிகம் இல்லாததால் ராமாயணம் எத்தனை விதங்களாக உள்ளன, எத்தனை ஏடுகள் உள்ளன என்பதை அறியார்’. அண்ணாவின் இந்த ஒற்றை வாக்கியத்தின் மீதுதான் ஏ.கே.ராமானுஜனின் மொத்தக் கட்டுரையும் கட்டப்பட்டிருக்கிறது. கம்பனை அண்ணாவிடமிருந்தும் தொடங்கலாம்.

 செம்மொழிகளிலும் செவ்வியல் இலக்கியங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின் தற்போதைய நிலைகளைக் குறித்து  சம்ஸ்கிருத அறிஞர் ஷெல்டன் பொல்லாக் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் குறித்து இரண்டு முக்கியமான கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. செம்மொழிகளில் ஆய்வுகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்துவருகின்றன என்ற பொல்லாக்கின் கருத்தோடு உடன்படும் ரவிக்குமார், அந்தக் கருத்தை தமிழ் ஆய்வுப்பரப்பை மையமாக வைத்துப் பேசுகிறார். ஆய்வு நிறுவனங்களின் அவல நிலையைக் கண்டிக்கிறார். அதேநேரத்தில், இந்தியாவில் சம்ஸ்கிருதம் அழியும் நிலையிலிருக்கிறது என்ற பொல்லாக்கின் இன்னொரு கட்டுரையோடு முரண்படவும் செய்கிறார். மத்திய அரசு அள்ளி வழங்கும் ஆய்வு உதவித்தொகைகளின் மூலமாக, சம்ஸ்கிருத ஆய்வுகள் பெருகிவருகின்றன என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிறார். கூடவே,  தமிழ் ஆய்வுலகம் தனது பொறுப்பையும் கடமையையும் உணராமல் தூங்கிவழியும் நிலையைச் சொல்லி வருந்தவும்செய்கிறார். எந்தவொரு ஆய்வறிஞரின் கருத்தோடும் முழுதாக உடன்பட்டு அவரை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை, ஆய்வறிஞர்களின் முடிவுகள் முழுவதுமாக நிராகரிக்கப்படக் கூடியவையும் அல்ல என்ற ரவிக்குமாரின் அணுகுமுறை முக்கியமானது.

பதினோராம் வகுப்பு அரசியலறிவியல் பாடநூலில் இடம்பெற்ற அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரத்தின் பொருத்தமின்மையைக் குறித்து நாடாளுமன்றத்தில்

குரல் எழுப்பினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன். அந்தக் கேலிச்சித்திரத்தின் பின்னாலுள்ள வரலாற்றுத் திரிபுகளை விளக்கி எழுதும் ரவிக்குமார், அதற்காக என்சிஇஆர்டி அமைப்பையே மூடிவிட வேண்டும் என்பதுபோன்ற அரசியல் கட்சிகளின் குரல்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை, பாடநூல்களின் உருவாக்கத்தில் கேலிச்சித்திரங்கள் இடம்பெறுவதன் தேவையையும் மறுக்கவில்லை. மாறாக, சில விஷயங்களில் முழு உண்மையைப் பேச முடியாத பாடநூல் உருவாக்கக் குழுவின் இயலாமையையே சுட்டிக்காட்டுகிறார்.

ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே இக்கட்டுரைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. கமலின் விஸ்வரூபத்தையும் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், ஷோபாசக்தி ஆகியோரை மையமாகக் கொண்டு ஈழத்தின் இலக்கியப் போக்குகளையும் பேசுகிறது. ஜல்லிக்கட்டு, பெருமாள் முருகனின் மாதொருபாகன் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நோபல் பரிசுபெற்ற சீன எழுத்தாளர் மோ யான் வழியே சீனாவின் இன்றைய பொருளாதாரப் போக்கையும் விவரித்துள்ளார். சமதர்மப் பொருளாதார லட்சியமும் மாற்றுக் கருத்துகளுக்கான சுதந்திரமும் கேள்விக்குறியாகியிருப்பதை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரைத் தொகுப்பின் அதிர்ச்சிக்குரிய தலைப்பு.

- செல்வ புவியரசன்

தொடர்புக்கு:

puviyarasan.s@thehindutamil.co.in

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x