Published : 30 Mar 2019 09:01 AM
Last Updated : 30 Mar 2019 09:01 AM

360: கூத்துப்பட்டறையின் நாடகத் திருவிழா

கூத்துப்பட்டறையின் நாடகத் திருவிழா

கூத்துப்பட்டறையின் சார்பாக மூன்று நாள் நாடக விழா நடக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் ஆணாதிக்க சிந்தனைக்கு எதிரான கவிதையாக ‘இன்னும் உறங்குதியோ’வும், சமூகத்திடம் நீதி கேட்டு மன்றாடும் ஒரு தாயின் குரலில் போர் அவலத்தைப் பேசுவதாக ‘அறங்கூற்றாகும்’ கவிதையையும் இன்று மேடையேற்றுகிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியனின் இந்தக் கவிதைகளை கருணா பிரசாத் நெறியாளுகை செய்கிறார். நாளை கலைராணி மேடையேறுகிறார். இடம்: 3-வது பிரதான சாலை, ஸ்ரீ ஐயப்பா நகர், விருகம்பாக்கம், சென்னை. நேரம்: மாலை 7 மணி.

மீண்டும் பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள்

எம்.ஜி.சுரேஷ் எழுதிய ‘இஸங்கள் ஆயிரம்’, நவீனக் கலை இலக்கியக் கோட்பாடுகளை எளிமையான நடையில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய புத்தகம். அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, பின்நவீனத்துவ சிந்தனையாளர்களான ஃபூக்கோ, தெலூஸ் - கத்தாரி, ரொலாண் பார்த், லக்கான், தெரிதா ஆகியோரைப் பற்றிய அறிமுக நூல் வரிசையொன்றை எம்.ஜி.சுரேஷ் எழுதினார். ஒவ்வொருவரைப் பற்றியும் 60 பக்கங்களில் சிறு புத்தகமாக இந்த நூல்வரிசை வெளிவந்தது. ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூல்களை மீண்டும் மறுபிரசுரம் செய்திருக்கிறது அடையாளம் பதிப்பகம். ஒரு புத்தகத்தின் விலை ரூ.60.

ஓர் இளம் பிரிட்டிஷ் எழுத்தாளர்

லண்டனைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் எம்மா க்ளாஸ் தனது முதல் நாவலோடு களம் இறங்கியிருக்கிறார். ‘பீச்’ (Peach) எனும் இந்நாவல் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. மிகக் கொடூரமான முறையில் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எதிர்கொள்ளும் மனப்போராட்டம்தான் நாவல். உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான ஓர் உரையாடலாக அமைந்திருக்கும் இந்நாவல் பரவலான கவனம் பெற்றுவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x