Published : 23 Mar 2019 09:59 AM
Last Updated : 23 Mar 2019 09:59 AM

நூல் நோக்கு: அரிராம்சேட்டின் கதை

அருந்தவச் செல்வர் அரிராம்சேட்

சின்னராசு – முத்தப்பா

யூகே பப்ளிகேஷன்ஸ்

முக்கூடல், திருநெல்வேலி – 627601

விலை: ரூ.200

  04634-274647

அரிராம்சேட் வடநாட்டுக்காரர் அல்ல; நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கூடல்காரர். இவரை ஒதுக்கிவிட்டு தியாகராஜ பாகவதரின் வரலாற்றை எழுதிவிட முடியாது. அந்த அளவுக்கு பாகவதர் மீது ஈடுபாடு கொண்டு, இசை கற்றுத் தேர்ந்து, பின்பு பாகவதரோடு இணைந்து இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். எம்.ஆர்.ராதா, கலைவாணர், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், திருவாவடுதுறை ராஜரத்தினம் ஆகியோரின் திறமையையும் கொண்டாடியிருக்கிறார். அவரது இந்த வரலாற்று நூலில் உள்ள செய்திகள் வியப்பூட்டுகின்றன. அவர் வளர்த்த யானைகளின் பாதங்கள் பழுதுபடக் கூடாது என்று அதற்குக் காலணி தைத்துப் போட்ட செய்தி வியப்பளிக்கிறது. ‘நல்ல நேரம்’ படத்தில் நடிப்பதற்காக சில வாரங்கள் அரிராம் சேட் வீட்டில் தங்கியிருந்து அவர் வளர்த்த யானைகளுடன் நெருங்கிப் பழகினாராம் எம்.ஜி.ஆர். இது போன்ற செய்திகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.

- மானா பாஸ்கரன்

தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

ஆர்.நல்லகண்ணு

பத்மா பதிப்பகம்

21/10, லோகநாதன் நகர், 2-ம் தெரு,

சூளைமேடு, சென்னை-94.

விலை: ரூ.190

 99413 85795

நீரின்றி அமையாது உலகு

தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக உருவாகியிருக்கும் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மூலவராகத் திகழ்ந்தவரும் இளம் பருவத்திலிருந்தே பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு சமூக அர்ப்பணிப்போடு செயலாற்றிவருமான  நல்லகண்ணுவின் முதிர்ந்த அனுபவப் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு அனுபவமும் வரலாறும் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளது. 1977-ன் புயல் வெள்ளச் சேதம் தொடங்கி காவிரி நீர்ப் பிரச்சினை, தாமிரபரணிப் பிரச்சினைகளோடு சமகாலச் சிக்கல்களையும் இப்புத்தகம் விவாதிக்கிறது. நல்லகண்ணுவின் கட்டுரைகளோடு அ.சேவியர், பி.கே.முருகேசனும் எழுதியிருக்கிறார்கள். உலக தண்ணீர் தினத்தை இப்புத்தகத்தோடு கொண்டாடுவோம்!

- அருள் பிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x