Published : 03 Mar 2019 09:32 AM
Last Updated : 03 Mar 2019 09:32 AM

உண்மையை உரக்கச் சொல்லும் குறும்படம்!

தமிழ் நாவல்களின் தொடக்க காலம்

இன்றைய தலைமுறைக்குத் தமிழ் நாவல் உலகம் கடந்துவந்த பாதையைக் கைகாட்டிவிடும் நோக்கத்தில் ‘மேன்மை’ இதழில் தொடராக வெளியான கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, ‘பிரேமகலாவத்யம்’, கமலாம்பாள் சரித்திரம்’ தொடங்கி ‘இதய நாதம்’ வரை என 25 நாவல்களை அறிமுகப்படுத்துகிறார் இரமேஷ். தமிழில் முதல் நாவல் எழுதப்பட்டு 140 ஆண்டுகள் ஆகியிருக்கும் வேளையில், முதல் பாதி எப்படி இருந்திருக்கும், எதையெல்லாம் நாவலாக்க முயன்றிருக்கிறார்கள், தொடக்க கால நாவல்கள் இன்றைய நாளில் எப்படி அர்த்தப்படுகின்றன, அங்கிருந்து இன்றைய நாளுக்கு நகர்ந்துவந்திருக்கும் நீண்ட பயணம் என ஒரு விரிவான பார்வையைத் தருகின்றன கட்டுரைகள். தமிழ் நாவல்களின் போக்குகள் பற்றிய பார்வையைத் தரும் வழிகாட்டி இது!

- ரா.பாரதி

உண்மையை உரக்கச் சொல்லும் குறும்படம்!

உதட்டில் புன்னகையோடு உள்ளத்தில் விஷத்தோடு பழகுபவர்கள், செய்யும் வேலையை வைத்து சக மனிதனை மரியாதைக் குறைவாக நடத்துபவர்கள், தலைமைப் பொறுப்பில் இருப்பவரை எப்போதும் சக ஊழியர்களிடம் விமர்சித்துப் பேசுபவர், அடுத்த கணமே அவருடைய மேலதிகாரி சொல்லும் எந்த விஷயத்தையும் உடனே எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆமோதிப்பவர், நுகர்வோர்களின் நிலையை யோசிக்காமல் தரம் இல்லாத சரக்கையும் அவர்களின் தலையில் கட்ட, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவோர்கள் என நம்மைச் சுற்றி தினம் தினம் வீட்டில், அலுவலகங்களில், பொது இடங்களில் எல்லா இடங்களிலும் இருக்கும் மனிதர்களின் முகத் திரையை கிழித்து எறிகிறது ‘பாரதியின் கூற்று’ குறும்படம். ஒரு அலுவலகச் சூழலில் தொடங்கும் கதையில் ஒவ்வொரு பாத்திரத்தின் முகமூடியையும் அந்த அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைபார்க்கும் ஓர் இளைஞன், பாரதியின் கவிதைகளைக் கொண்டு எப்படி அகற்றுகிறான் என்பதைப் பொட்டில் அடித்தால்போல சுவாரஸ்யமாக விளக்குகிறது. பாரதியின் பிறந்தநாளை ஒட்டி யூடியூபில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. கார்த்திக் மோகன் எழுதி இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம், பார்க்கும் ஒவ்வொருவரையும் சுய விமர்சனத்துக்கு உள்ளாக்கும்.

குறும்படத்தைக் காண:

https://www.youtube.com/watch?v=Zqj1AdoST2o

- யுகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x