Published : 30 Mar 2019 08:18 AM
Last Updated : 30 Mar 2019 08:18 AM

கலாச்சார அமைச்சகத்தின் தமிழ் நாடகத் திருவிழா

நாடக மேதை ந.முத்துசாமியின் கூத்துப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களில் ஒருவர் ஸ்ரீதேவி கங்கையா. நவீன நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் ஸ்ரீதேவியின் ‘ஆனந்தக்கூத்து' அறக்கட்டளை, கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து இன்றும் நாளையும் அலையன்ஸ் பிரான்கைஸ் அரங்கில் தமிழ் நாடகத் திருவிழாவை நடத்துகிறது.

கலைத் துறையில் முத்திரை பதிக்க வருபவர்களின் கனவை நனவாக்கும் பணியில் கடந்த 9 ஆண்டுகளாக ‘ஆனந்தக் கூத்து' அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. நாட்டுப்புறக் கலைகள், சாலை பாதுகாப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு, பெண்ணியம், சுகாதாரம், பொதுநலம் போன்ற கருத்துகளை தங்களின் பல நாடகங்களுக்கான கருவாகக் கொண்டு பல நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறது இந்த அறக்கட்டளை.

இந்த நாடகத் திருவிழாவில் தேவிரிக்ஷா நடிப்புப் பயிற்சி மையம், கூத்துப்பட்டறை, மாற்று நாடக இயக்கம், தியேட்டர் நிஷா, யாழ் ஆர்ட் அகாடமி, அழகம்மை தியேட்டர் மற்றும் குருகுலம் ஆகிய நாடகக் குழுக்கள் பங்கேற்கின்றன.

ஸ்ரீதேவி, 2001-ல் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் சேர்ந்து அவருடைய வீதி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகங்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு ‘பரமார்த்த குரு’, ‘சப்தங்கள்’ ஆகிய நாடகங்களும், நாளை காலை 10 மணி தொடங்கி மாலை 7 மணி வரை 'காலம் காலமாக’, ‘முயல்’, ‘விறகு வெட்டிகள்’, ‘வல்லமை தாராயோ’, ‘கழுமரம்’ ஆகிய நாடகங்களும் அரங்கேற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x