

முடி திருத்துவதற்காக வெளிநாடொன்றில் கடை தேடி அலைவதில் தொடங்கி பால்ய காலத்தில் சந்தித்த நாவிதர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்பதாக அமைந்திருக்கிறது க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல். நான்கு வேறு வேறு இடங்களில் நாயகனுக்கு அறிமுகமான நாவிதர்கள், அவர்களின் கடந்தகால வாழ்க்கை, முடி திருத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நிபுணத்துவம், அன்றாடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என விவரித்துச் செல்கிறது. நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் பெரும் வியாபாரமாகிப்போன மாடர்ன் சலூன்களுக்கும், வாழ்க்கைப்பாட்டுக்காகத் தொழில் செய்பவர்களுக்கும் இடையேயான போட்டியும், சமூகக் கண்ணோட்டங்களும் நாவலில் நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது. வாசிப்பின் முடிவில், நாவிதர்கள் குறித்த வாசகரின் எண்ணங்கள் திருத்திக்கொள்ளப்படும் என்பது இந்நாவலின் வெற்றி.
சலூன்
க.வீரபாண்டியன்
யாவரும் பதிப்பகம்
சென்னை-42.
விலை: ரூ.140
90424 61472
உவேசா வழித்தடத்தில்
நாட்டுடமையான தமிழறிஞர்களின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகம், ரா.இராகவையங்காரின் படைப்புகளை ‘இராகவம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சங்கத் தமிழ் ஆய்வின் முன்னோடிகளான உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை இருவராலும் பாராட்டப்பட்டவர் ரா.இராகவையங்கார். ‘இராகவம்’ இரண்டாம் பாகத்தில் அவர் எழுதிய குறுந்தொகை உரைவிளக்கமும் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகளும் இடம்பெற்றுள்ளன. 1946-1951 காலகட்டத்தில் வெளியான முதல் பதிப்புகளின் அடிப்படையில் இத்தொகுப்பைத் தொகுத்திருக்கிறார் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும் கா.அய்யப்பன். இரண்டாம் பதிப்புகளில் இடம்பெற்ற சேர்க்கைகளைக் கவனமாகத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள், உவேசா வழித்தடத்தில் பின்தொடர்ச்சி இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
- அரசன்
இராகவம்- தொகுதி 2
தொகுப்பும் பதிப்பும்: கா.அய்யப்பன்
காவ்யா வெளியீடு
சென்னை-24
விலை: ரூ. 900
044 23726882