Published : 21 Mar 2019 07:36 AM
Last Updated : 21 Mar 2019 07:36 AM

புதிய நாடகம்: ஷ்ரத்தாவின் ‘ஹோம் மேக்கர்’

புதிய கதை வடிவத்திலும் நாடகமாக்கத்திலும் புதிய முயற்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக நிகழ்த்திவரும் அமைப்பு ஷ்ரத்தா. கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டம், மாணிக்கவாசகர், ராமானுஜர் போன்ற மகான்களின் வரலாற்றைத் தழுவிய ஆன்மிக நாடகங்கள் முதல் நவீன நாடகங்கள், கட்டை கூத்து போன்ற பல நாடக முயற்சிகளையும் உள்ளடக்கி ஏறக்குறைய 32 நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறது ஷ்ரத்தா.

ஆனந்த் ராகவ் எழுதி, டி.டி.சுந்தரராஜன் இயக்கியிருக்கும் `ஹோம் மேக்கர்’ தமிழ் நாடகம் ஷ்ரத்தாவின் இந்த ஆண்டு முதல் தயாரிப்பு.

எத்தனையோ வேலைகளை வீட்டில் செய்து கொண்டிருக்கும் மனைவியை, ‘‘வீட்டில் மனைவி சும்மாதான் இருக்கிறாள்” என்று கூசாமல் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் எத்தனையோ கணவர்களை சமூகத்தில் பார்க்கிறோம். அவர்களைப் போன்றவர் களுக்கு ஒரு படிப்பினையாக, இல்லத்தரசி என்பவள் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் எப்படியெல்லாம் தன்னுடைய அன்பை, பாசத்தை தன்னுடைய அன்றாடச் செயல்களின் மூலம் அளிக்கிறாள்? இல்லத்தரசியின் தன்னலம் கருதாத சேவையை வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் புரிந்துகொள்கிறார்களா? கணவன் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்கும் வேண்டியதை பார்த்துப் பார்த்துச் செய்யும் ஓர் இல்லத்தரசிக்கு தன் மீது குடும்ப உறுப்பினர் களுக்கு உண்மையிலேயே பாசமும் அன்பும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு உத்தியை கையாள்கிறாள். அந்த உக்தி, ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஓர் இல்லத்தரசி தன்னுடைய குடும்பத்திடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை ஓர் இல்லத்தரசியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்ளைக் கொண்டு காட்சிப்படுத்தும் நாடகம்தான் `ஹோம் மேக்கர்’.

இந்நாடகம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் நாரத கான சபா, பிரம்ம கான சபா, பார்த்தசாரதி சுவாமி சபா ஆகியவற்றின் ஆதரவில் மார்ச் 23, 24 ஆகிய 2 நாட்கள் நாரத கான சபாவில் மாலை 7 மணிக்கு அரங்கேறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x