Published : 31 Mar 2019 08:40 AM
Last Updated : 31 Mar 2019 08:40 AM

திராவிட இலக்கியம் எனும் கலக இலக்கியம்

மிகவும் பவித்திரமானவற்றுக்கு எதிரானது சிரிப்பு என்பார் பக்தின். ரொம்பவும் சீரியஸானது, பவித்திரமானது என்று உயர்த்திப் பிடிக்கிற பண்பாட்டில் அச்சம், மடமை, பலவீனம், ஒடுக்குமுறை, பொய், கபடம், வன்முறை, எச்சரிக்கை, தணிக்கை, தடை, அச்சுறுத்தல் ஆகிய அம்சங்கள் உள்ளூர உறைந்திருக்கும். இவை அதிகாரத்தைக் கட்டமைப்பவை. இவை கபட வேஷ முகமூடியை அணிந்திருக்கும் என்பார் பக்தின்.

இந்த முகமூடியைக் கிழித்துவிடும் ஆற்றல் கொண்டவை: சிரிப்பு, வசை, முட்டாள்தனம், இங்கிதமின்மை, கேலி, கிண்டல், பகடி. இவற்றால் கும்மாளமிடுகிற சிரிப்பு, ஒருக்காலும் மக்களை ஒடுக்காது; குருடாக்காது. இந்தச் சிரிப்புதான், என்றைக்கும் மக்களின் கைகளில் ஒரு சுதந்திரமான ஆயுதமாக இருக்கும். அதிகாரபூர்வமான, பவித்திரமான, புனிதமான, ‘சீரியஸான’ பண்பாட்டால் விலக்க, பழிக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் தொகுதியின் சிரிப்பு, அவர்களைப் புறவயமான தணிக்கையிலிருந்து மட்டுமின்றி, அதற்கு முந்தி மாபெரும் அகவயமான தணிக்கையிலிருந்தும் விடுவிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புனிதம், விலக்கு, அதிகாரம் பற்றி அம்மக்களிடம் வளர்ந்துவந்த ‘அச்சத்திலிருந்து’ அவர்களை விடுவிக்கிறது.

பக்தின் மேற்கோளிடுகிற ஹெர்சன் என்பவர் சிரிப்பைப் பற்றிக் கூறும்போது, ‘சம அந்தஸ்துடையவர்களே தமக்குள் சிரிக்கத் தகுதி உள்ளவர்கள்; உயர்ந்தவர்களுக்கு முன் தாழ்ந்தவர்கள் சிரித்தால், சிரிக்க அனுமதிக்கப்பட்டால், உயர்ந்தவர்களின் மரியாதை விடைபெற்றுவிடும்’ என்பார். ‘எபிஸ்’ கடவுளுக்கு முன் மனிதர்கள் சிரிக்கிறபோது அந்தக் கடவுளின் புனிதப் பெறுமதி அகன்றுபோகிறது, அதோடு, அந்த ‘எபிஸ்’ கடவுள் ஒரு சாதாரண மாடாக இறங்கிவிடுகிறது என்பார் ஹெர்சன்.

உன்னதமானவற்றை உன்னதமில்லாதவர்கள் கேலிசெய்து சிரிக்கிறபோது, உடன் நிகழ்ச்சியாக உன்னதங்கள் தலைகீழாகப் புரட்டப்படுகின்றன. சர்வ வல்லமை பெற்றவையாக உள்ளவை இந்தப் பகடியின் மூலமாக சாமானியமானவையாக ஆக்கப்படுகின்றன. உயர்ந்தவற்றின் அசாதாரணத்தன்மைகள் அகற்றப்படுகின்றன. மாற்றத்துக்காகக் குரலிடும் சாமானியர்களின் மருகிப்போன தன்னிலைகள் களிப்படைகின்றன. மனச்சுமை, குத்தல், குற்றஉணர்வு, பயம் எல்லாம் கழன்று, தன்மானமும் சுயமரியாதையும் ஏற்படுகின்றன. குழு உணர்வும் போர்க் குணமும் இணக்கமும் கைகூடுகின்றன.

பகடி மூலம் தலைகீழாக்கிய பெரியாரின் சொல்லாடல்இந்தியச் சூழலில், திராவிடர்கள், தலித்துகள், பெண்கள் ஆகியோரின் கேலிக்கு உள்ளாக்கப்படுகிற புனிதங்கள் யாவும் ஒற்றுமை கொண்டவையாக இருக்கின்றன. மூன்று தரப்பினரும் மனுதர்மம், பௌராணிக வைதீகம், ஆணாதிக்கப் பார்ப்பனியம் ஆகியவற்றைத் தங்களது குறியிலக்காகக் கொண்டு தாக்குகின்றனர். அதாவது, பெரியார் செய்த பகடிக்கு இலக்கானவர்களும் - இலக்கானவையும், தலித் மற்றும் பெண்ணியவாதிகளின் பகடிக்குள்ளாகக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். பார்ப்பனியத்தையும் வைதீக இந்து மதத்தையும் அதன் வருணாசிரமத்தையும் பகடி மூலம் தலைகீழாக்கிய பெரியாரின் சொல்லாடலில் தவிர்க்க முடியாதபடி, பெண்ணியத்துக்கும், தலித்தியத்துக்குமான கூறுகள் இடம்பெற்றுள்ளன.

தங்களை ஒடுக்கப்பட்ட சூத்திரர் என்றும் (வேசையின் புத்திரர்கள்), திராவிடர் என்றும் (மொழிக் குடும்பம்), தமிழர் என்றும் (தேசிய இனம்) அணி திரட்டிய இயக்கத்தாரின் (வேளாளர் குறிப்பாக) இலக்கியத்தில் கௌரவமும் புனிதமும் பவித்திரமும் கொண்ட பார்ப்பனக் கடவுள், வேதம், மடாதிபதி, தம்பிரான், பூசாரி, இதிகாச மாந்தர் அனைவரும் பகடியின்மூலம் பலத்த நகைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்துப் பண்பாட்டில் சீரியஸானவையாகக் கருதி, மதிக்கப்பட்ட அனைத்தையும் அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கும் கலகத்தைத் திராவிட இலக்கியமே தொடங்கிவைத்தது. இதற்கு முன் தமிழகத்தில் சித்தர்கள் இதனைச் செய்தார்கள்தான். ஆனால், இவர்களின் பகடி, மதத்துக்குள்ளேயே மற்றொரு மாற்று மதத்தை உண்டாக்கும் இலக்கினையே கொண்டிருந்தது. ஆனால், திராவிட இலக்கியத்தின் பகடி, இந்து மதத்தையே நிர்மூலம் ஆக்கும் இலக்கைக் கொண்டிருந்தது, ஆட்சி அதிகாரம் என்ற மதத்தைக் கைப்பற்றும் வரை.

அண்ணாவின் இலக்கியக் கலகம்அண்ணாவின் ‘வேலை போச்சு’ என்ற சிறுகதையில் வைதீகம், புரோகிதம், சந்நியாசம் முதலான பவித்திரங்கள், ஒரு திருமண அழைப்பிதழில் கவனக்குறைவாக நேர்ந்துவிட்ட அச்சுப்பிழைகளின்மூலமாக நக்கல் செய்யப்படுகின்றன. ‘சாமி காவடியானந்தா’ என்பது ‘காமி சாவடியானந்தர்’ என்றும், ‘வேதம்’ ‘பேதம்’ என்றும், பிழையாக அச்சாகின்றன. இந்தப் பெயர்களில் புனையப்பட்டுள்ள பெருமைகளெல்லாம், எழுத்துகளை இடம்பெயர்த்துவைத்த மாத்திரத்தில் தலைகீழான பண்பை அடைந்துவிடுகின்றன. கனம் ஏற்றப்பட்ட வார்த்தைகளின் அமைதியை - ஒழுங்கை - வரிசையை - இலக்கணத்தை நையாண்டித்தனமாகச் சீர்குலைக்கிறபோது, அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கும் அதிகாரத்துக்கும் (இந்த வார்த்தை இன்று பழுத்துப் பழசாகிவிட்டது) இடையில் கட்டமைக்கப்பட்ட சம்பந்தம் துண்டிக்கப்படுகிறது. கூடவே, இவற்றால் கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களும் அவிழ்க்கப்படுகின்றன. கலக இலக்கியத்தின் பிரதானப் பணி இதுதான்.

கதாபாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுவதிலும் அண்ணா உன்னதங்களைத் தலைகீழாக்கியுள்ளார். புவனேஸ்வரி, கல்யாணி, தமயந்தி, திலகா, கோகிலம், ரமாமணி முதலிய வடமொழிப் பெயர்கள், வைதீகப் பெண் கடவுள் மற்றும் பதிவிரதையைக் குறிப்பன. புனிதம், தெய்வீகம், அழகு, மேன்மை போன்ற உன்னதங்களைக் குறிக்கும் இப்பெயர்களை அண்ணா, வேசைகளுக்கு இட்டுள்ளார். ‘வேலை போச்சு’ கதையில் வரும் ‘வியாசர்’ பத்திரிகை ஆசிரியர் அனுமந்தராவ், இவர் மனைவி சீதை, துணை ஆசிரியர் கருடாழ்வார். அனுமந்தராவ் உண்மையில் எதைக் குறிக்குமோ தெரியாது. ஆனால், படித்ததும் அனுமனை உணர்த்திவிடுகிற பெயர். இவ்விதத்தில் அனுமன், சீதை, கருடன் என்பவை வைணவ இதிகாசப் பாத்திரங்கள். ராமன் என்ற அவதாரப் புருஷனுக்கு (புருடன் - தனித்தமிழ்) தர்மபத்தினி சீதை. ஆனால், அண்ணாவின் கதையில் இவள், ராமனின் சேவகன். அனுமனின் ‘பத்தினி’.

திராவிட இலக்கியத்தின் உதயத்தோடுதான் இலக்கியச் சொல்லாடலுக்குள், விபச்சாரிகள், விடன், திருடன், மில் தொழிலாளி, வண்டிக்காரன், வேலைக்காரி, கூலிக்காரன், ஏழை ஆகியவர்கள் வந்தார்கள். அங்கீகரிக்கப்பட்டவற்றையே ஏற்றுப் பழகிப்போனவர்களுக்கு அங்கீகரிக்கப்படாதவர்களாக, தரமற்றவர்களாக, திறனற்றவர்களாக, ஒழுங்கற்றவர்களாக இவர்கள் தோன்றுவார்கள். இவர்களும் இவர்களைப் பற்றிப் பேசுபவர்களும் அதிகாரபூர்வமானவர்களின் பார்வையில் போக்கிரிகளாக, கிறுக்கர்களாக, ஒழுங்கீனர்களாகத் தோன்றுவார்கள். பண்டித ஜவாஹர்லால் நேருவுக்குப் பெரியார் எப்படித் தோன்றினார்? அன்று பெரியார், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன் போன்றவர்கள், அக்கால காங்கிரஸார் - பார்ப்பனர்கள் பார்வையில் நீசர், ஒழுங்கீனர், கீழ்ச்சாதியர், கண்ணியக் குறைவானவர் என்றுதான் பட்டார்கள்.

இவர்களின் படைப்புகள் தரமற்றவை, தகுதியற்றவை, வெறும் பிரச்சாரம் என்ற உன்னதக் கலை இலக்கியப் பீடத்தார்களால் தீர்ப்பிடப்பட்டன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் குந்தகமாகிவிட்டன; இதனால், தரமான இலக்கியம் வளர முடியாமல் போய்விட்டது என்ற ஒப்பாரி எழுந்தது; இது இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

உன்னத இலக்கியம் எனும் ஒடுக்குமுறைகடவுள், அரசன், புரோகிதன், பதிவிரதை போன்ற உன்னதங்களின் வரிசையில் இலக்கியம் என்ற ஒன்றும் இடம்பிடித்துக்கொண்டது. இது இன்னொரு விக்கிரகம்போல வழிபடப்படுகிறது. அதிகாரபூர்வப் பண்பாட்டில் வகை வகையாகத் தரம் பிரிக்கப்பட்டு, ஒரு ஏறுவரிசையில் நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு வகைக்கும் ஓர் இலட்சிய உன்னதம் முன்மாதிரியாக நிறுத்தப்படுவதைப் போல, அதிகாரபூர்வத்தை எதிர்க்கிறவர்களின் பண்பாட்டில் வகைபாடுகளைக் காணவியலாது. இவர்களின் இயக்கத்தில் அரசியல், பண்பாடு, கலை இலக்கியம் முதலானவை தனித்தனியாக வகையுறாமல் கலவையாகவே இருக்கின்றன. எனவே, அதிகாரபூர்வ இலக்கியத்தைக் கொண்டு கலக இலக்கியத்தை அளக்க முடியாது. அதிகாரபூர்வ இலக்கியத்தை நோக்கி வளர்வது கலக இலக்கியம் அல்ல; உன்னத - விக்கிரக - இலக்கியங்களை எள்ளி நகையாடி குப்புற வீழ்த்துவது ஒருபுறமும், அப்படிச் செய்வதன்மூலமாக உரிமையைப் பெறும் பொருட்டு, அங்கீகரிக்கப்படாதவர்களிடம் மறுபடைப்பையும் புத்தாக்கத்தையும் ஏற்படுத்துவது ஒருபுறமும் கலக இலக்கியங்களால் சாத்தியமாகின்றன. அத்துமீறுதலும் ஐக்கியப்படுதலும் ஒருசேர நிகழ்கின்றன. உன்னத இலக்கியமும் ஒடுக்குமுறையின் ஓர் அங்கம்தான். பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், சக்தி வழிபாடுபோல இது மிகுந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சமத்காரங்களையும் புனித மதிப்பீடுகளையும் சாத்திரக் கட்டுப்பாடுகளையும் தணிக்கை முறைகளையும் கொண்டு மாபெரும் விக்கிரகமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தை உடைப்பதிலிருந்தே பாதிக்கப்பட்ட தொகுதியினருக்கான கலக இலக்கியம் தொடங்குகிறது. திராவிட இயக்கத்தின் படைப்பாளிகள் குறிப்பிட்ட வரையறைகளோடுதான் உன்னத இலக்கிய விக்கிரகத்தை உடைத்துள்ளார்கள்.

திராவிடக் கலக இலக்கியம் வித்தியாசமானது. கதை, கட்டுரை, பிரச்சார வேகம், அத்துமீறல், அங்கீகரிக்கப்படாதவற்றின் ஊடுருவல், மொழி உடைப்பு, இலக்கண மீறல், குசும்பு, சேட்டை, கூச்சமின்மை, ஆசிரியக் குறுக்கீடு, அபத்த வருணிப்பு, எதார்த்தமின்மை, மிகை, நளினமற்ற முரட்டுப் பேச்சு ஆகியவற்றின் கலவையாக இது அமைகிறது.

திராவிட இயக்கத்தின் உலகப் பார்வைஒடுக்குகிற உன்னத இலக்கியத்தை, வேதத்தை, அதன்மூலம் பார்ப்பனியத்தைத் தூக்கிப்பிடிப்பவர்களே, திராவிட இயக்கம், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஊறுவிளைவித்துவிட்டதாகக் கூக்குரலிடுவார்கள். அங்கீகரிக்கப்பட்டவற்றையும் அதிகாரபூர்வமானவற்றையும் எதிர்த்துப் பேச முடியும், அப்படிப் பேசுவது ஒன்றும் பாவம் அல்ல, அது குதூகலமானதுதான் என்கிற ஒருவிதப் பண்பாட்டுக் களிப்பை ஏற்படுத்தியவை திராவிட இலக்கியங்களே!அங்கீகரிக்கப்பட்டவர்களின் உன்னதங்களைக் கேலிசெய்வதன்மூலம் அவற்றைத் தலைகீழாகப் புரட்டிய திராவிட இலக்கியவாதிகள், இதன் நீட்சியாக மற்றொரு காரியத்தையும் செய்தார்கள். அங்கீகாரம் பெற்ற அதிகாரபூர்வப் பண்பாடு, எவற்றையெல்லாம் மரியாதை குறைவானவை, பாவமானவை, அருவருக்கத்தக்கவை என விலக்கிவைத்துள்ளதோ அவற்றையே, முன்வந்து ஏற்றுக் கலகப் பாங்கில் வாழ்வதன்மூலமாக, அதிகாரபூர்வப் பண்பாட்டை அதிரவைத்து, அதன் முகத்திரையைக் கிழிப்பது கலக இலக்கியத்தின் மற்றொரு பரிமாணம். ‘குமாஸ்தாவின் பெண்’ என்கிற கதைமூலம் அண்ணா இதைச் சாதித்துள்ளார்.

பார்ப்பன ஆதிக்கத்தை இறக்குவதைக் குறி இலக்காகக் கொண்ட திராவிட இயக்கத்தின் உலகப் பார்வை, இதன் இலக்கியத்தில் மிக வெளிப்படையாகவே மொழியப்பட்டுள்ளது. இந்தப் பார்வையில் நாத்திகத்தை உட்கொண்ட பகுத்தறிவு நோக்கும் கற்பனாவாத சோஷலிஸ நோக்கும் கலந்துள்ளன. அண்ணா, கொலம்பஸின் தனிமனித சாகசத்தைப் போற்றுவதிலும், பாரதிதாசன் ஜார் காலத்து ரஸ்புதீனைத் தூற்றுவதிலும் இந்த உலகப் பார்வையை இனங்காணலாம். பூர்ஷ்வாவின் தனிமனித சாகசம், சுதந்திரம், முன்னேற்றம், பொருள் சார்ந்த கருத்தியல் ஆகியவற்றுக்கு கொலம்பஸ் ஒரு பிரதிநிதிபோல காணப்படுகிறான். தமிழ்ச் சூழலில், இவன், தமிழர் - திராவிடர் - சூத்திரர் என்போரின் குறியீடுபோலப் படைக்கப்பட்டிருக்கிறான்.

-ராஜ் கௌதமன் ,எழுத்தாளர், சமூக அறிவியலாளர்

(‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...)

புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x