Published : 23 Mar 2019 10:02 AM
Last Updated : 23 Mar 2019 10:02 AM

360: சொற்களின் ஓராண்டுக் கொண்டாட்டம்

சொற்களின் ஓராண்டுக் கொண்டாட்டம்

கவிதைகளுக்கென்றே பிரத்யேக வடிவமைப்பில் வெளிவந்து, தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் கவனம் பெற்ற ‘சொற்கள்’ இதழ் தனது முதல் பிறந்தநாளை இளம் கவிகளோடு கொண்டாடவிருக்கிறது. ஒரு ஆண்டை வெற்றிகரமாக நிறைவுசெய்திருக்கும் ‘சொற்கள்’, நாளை காலை 10 மணிக்கு சேலம் காசி விஸ்வதாதர் கோயில் அருகேயுள்ள வித்யா பீடம் மழலையர் பள்ளியில் றாம் சந்தோஷ், பெரு.விஷ்ணுகுமார், ச.துரை ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளுக்கு விமர்சனக் கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறது. மூவருக்குமே முதல் தொகுப்புகள். இளம் கவிகளை வழிநடத்துகிறார்கள் மூத்த கவிகள்!

சென்னை, காரைக்குடி, தேனியில் புத்தகக்காட்சி

சென்னை: ஸ்டார் நெட், ஆர்யா கவுடா ரோடு, மேற்கு மாம்பலம்.

நாள்: 23.03.19 முதல் 23.04.19 வரை

காரைக்குடி: சரஸ்வதி மஹால், 100 அடி ரோடு.

நாள்: 20.03.19 முதல் 31.03.19 வரை

தேனி: என்.ஆர்.டி மக்கள் மன்றம்

நாள்: 22.03.19 முதல் 01.04.19 வரை

10% தள்ளுபடியில் புத்தக வேட்டையாடலாம்!

வெளிரங்கராஜன், யூமா வாசுகிக்கு கௌரவம்

மறைந்த எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவாக 2018 முதல் ஆண்டுதோறும் அவரது நினைவுநாளான ஏப்ரல் 16 அன்று ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்படுகின்றன. ‘முன்றில்’ இலக்கிய அமைப்பு சார்பில் அரங்கநாதனின் மகன் நீதிபதி அரங்க. மகாதேவன் விருது அளித்து கௌரவிக்கிறார். நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான வெளி ரங்கராஜனுக்கும், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியரான யூமா வாசுகிக்கும் இந்த ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருவருக்கும் வாழ்த்துகள்!

பா.வெங்கடேசன், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு விளக்கு விருது அளிப்பு

இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களுக்கு 1996 முதல் புதுமைப்பித்தன் நினைவாக ‘விளக்கு விருது’ வழங்கி கௌரவிக்கிறது அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு. அசாத்தியமான கற்பனையாற்றலோடும் கட்டுக்கடங்காத மொழி வீரியத்தோடும் இலக்கியத்தில் தனித்துவமான முத்திரை பதித்த பா.வெங்கடேசனுக்கும், தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், வரலாற்று ஆளுமைகள் என வரலாற்றிலிருந்து பல புதையல்களைத் திரட்டித் தந்த ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும் 2017-ம் ஆண்டுக்கான ‘விளக்கு விருது’ சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்வில் வழங்கப்பட்டது. இருவருமே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து உத்வேகத்தோடு செயலாற்றிவரும் பன்முக ஆளுமைகள். விருதுகளால் கௌரவிக்கப்படாதவர்கள். இருவரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது ‘விளக்கு’ அமைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x