Published : 16 Mar 2019 10:07 am

Updated : 16 Mar 2019 10:07 am

 

Published : 16 Mar 2019 10:07 AM
Last Updated : 16 Mar 2019 10:07 AM

அன்பு மொழி பேசும் சிறார் கதைகள்

பேரன்பின் பூக்கள்

சுமங்களா, தமிழில்: யூமா வாசுகி


வெளியீடு: சித்திரச் செவ்வானம்-புக்ஸ் ஃபார் சில்ரன்,

 044 - 24332924

அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன.

தமிழில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான நேரடிச் சிறார் இலக்கியத்தைவிடவும், மொழிபெயர்ப்பின்வழி தமிழுக்கு வந்த மலையாளச் சிறார் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்கிறது. யூமா வாசுகி, உதயசங்கர் உள்ளிட்ட எழுத்தாளர்களின்வழி மலையாளச் சிறார் இலக்கியம் தொடர்ச்சியாகத் தமிழுக்கு வளம் சேர்த்துக்கொண்டிருக்கிறது.

மலையாளச் சிறார் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களான கே. சிவதாஸ், பாப்புட்டி, சிப்பி பள்ளிப்புரம் உள்ளிட்டவர்களது படைப்புகள் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் மலையாளச் சிறார் இலக்கியத்தின் 'கதைப் பாட்’டியான சுமங்களாவின் கதைகள் 'பேரன்பின் பூக்கள்' என்ற தொகுதியாக யூமா வாசுகி மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. சுமங்களாவின் முக்கியக் கதைத் தொகுதியான 'மிட்டாய்ப் பொதி', மலையாளத்தில் 40 ஆண்டுகளுக்குமுன் வெளியானது. மொத்தம் 29 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுதியே 'பேரன்பின் பூக்க'ளாகி உள்ளது.

உணர்வுள்ள உயிரினங்கள்

பொதுவாகச் சிறார் இலக்கியம் என்றாலே விலங்குகளைப் பேச வைப்பது, நீதி போதனை செய்வதுதான் 'ஈசாப் கதைகள்' தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொகுதியில் கதாபாத்திரங்களாக வரும் உயிரினங்கள் மனிதர்களைப் போன்ற குணாதிசயங்களுடன் இல்லை. வீட்டைச் சுற்றி வாழும் உயிரினங்கள் அவற்றுக்கே உரிய குணாதிசயங்களுடன் பேசும் வகையில் தொடக்கக் கதைகள் அமைந்துள்ளன.

காட்டு உயிரினங்கள் எப்படி வீட்டு விலங்குகளாக மாறின என்பது குறித்த 'விலங்குகளின் கிராமம்' என்ற கதையில் உயிரினங்களின் உணர்வுகளும் சொல்லப்பட்டிருப்பது, மேம்பட்டதொரு உணர்வைக் கடத்துகிறது. பொம்மைகளை உயிரற்றவையாகவும் செயற்கையானவையாகவும் கருதும் மனநிலையை 'பொம்மை வீடு', 'நீலாவின் கதை' போன்றவற்றில் ஆசிரியர் வெற்றிகரமாக மாற்றிக் காட்டியிருக்கிறார். அதேநேரம் 'பாம்பும் பாலும்', 'முருகேசனும் புலியும்' போன்ற கதைகள் முன்வைக்கும் கருத்துகள் சற்றே பிற்போக்குத்தனத்துடன் அமைந்துள்ளன. இந்தக் கதைகள் கடத்தும் சேதி முக்கியமானது என்றாலும், சொல்லப்பட்ட முறை நெருடலாக உள்ளது.

நன்னம்பிக்கை விதைகள்

பொதுவாகக் குழந்தைகளை பயமுறுத்தவே பேய், பூதம் போன்ற கதாபாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். கதைகளிலும் அவை அச்சுறுத்துபவையாகவே பொதுவாக உருவகிக்கப்படுகின்றன. ஆனால், 'தம்பிப் பயலும் பூதங்களும்' கதையில் வரும் பொடியன் பூதங்களை நையாண்டி செய்து, அவற்றைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்துவிடுகிறான். இதேபோல 'அப்ப மரம்' என்ற 'மாய யதார்த்த' பாணிக் கதையும் மாறுபட்டு அமைந்துள்ளது. பேய் வீட்டைத் தேடி ஐந்து குழந்தைகள் போகும் சாகசம் நிறைந்த 'நதிக்கரை வீடு', பிச்சையெடுக்க சிறார்களை கடத்திச் செல்லும் கும்பல் குறித்த 'விடுமுறைக் காலம்' போன்ற சுவாரசியமும் திருப்பங்களும் நிறைந்த நெடுங்கதைகளும் இத்தொகுப்பில் உண்டு.

'யானைக்கு ஏன் தும்பிக்கை வந்தது?', ஆங்கில எழுத்தாளர் எனிட் பிளைடனின் 'ஃபேமஸ் ஃபைவ்' போன்றவற்றை சில கதைகள் லேசாக நினைவுபடுத்தினாலும், சுமங்களாவின் கதைகள் அனைத்தும் நம் மண்ணில் ஆழ வேரூன்றியவையாகவும் அன்பையும் மேம்பட்ட மதிப்பீடுகளையும் குழந்தைகளுக்கு உணர்த்தக்கூடியவையாகவும் திகழ்கின்றன.

தமிழில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட மலையாளச் சிறார் இலக்கியத்தில், இந்த நூல் நிச்சயமாக ஒரு மைல்கல். ஒரு கதைத் தொகுப்பாக முக்கியமாக உள்ள அதேநேரம், மொழிபெயர்ப்பிலும் இந்தத் தொகுதி தொட்டுள்ள உயரம் நிச்சயமாக பெரிதுதான். தமிழில் சிறார் இலக்கியம் எந்த திசைநோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்கான திசைகாட்டியாக இந்தப் புத்தகத்தைக் கொள்ளலாம்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x