Published : 09 Feb 2019 09:02 AM
Last Updated : 09 Feb 2019 09:02 AM

360: 44 ஆண்டுகள்... 306 கவிதைகள்...

சோ.தர்மன், ரவிக்குமாருக்கு சுந்தரனார் பல்கலை விருது!

தமிழில் மொழி, இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களில் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘பேராசிரியர் சுந்தரனார் விருது’ கரிசல் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையுடன் இந்த விருது வழங்கப்பட்டது. ‘மணற்கேணி’ ஆய்விதழின் ஆசிரியரான து.ரவிக்குமார் திறனாய்வுச் செம்மல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற 11-ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் ஒடிஸா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் இந்த விருதை வழங்குகிறார்.

தீவிர எழுத்தாளர்களின் சிறார் படைப்புகள்!

பால்ய நினைவுகளை அசைபோட வைக்கும் எழுத்துகள் என்றென்றும் சுவாரஸ்யமானவை. சிறார் இலக்கியம் சிறாருக்கானவையாக மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கானவையாகவும் இருப்பதன் அடிப்படை அதுதான். தீவிர இலக்கிய ஆளுமைகள் எழுதிய சிறார் படைப்புகள் என்று வரும்போது, சிறார் இலக்கியத்துக்கு இன்னொரு பரிமாணமும் கிடைத்துவிடும். அந்த வகையில், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, வண்ணதாசன், கோணங்கி என்று 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் சிறார் படைப்புகளை ‘வானம்’ பதிப்பகம் வெளியிடுகிறது. நடந்து முடிந்த புத்தகக்காட்சியில் சில புத்தகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், மற்ற புத்தகங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன!

புத்தக செல்ஃபி கார்னர்

திருப்பூரில் 16-ஆவது ஆண்டாக நடைபெற்றுவரும் புத்தகக்காட்சியில் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது ‘புத்தக தற்பட முனையம்’. புத்தகக்காட்சியின் நுழைவாயிலிலேயே புத்தகங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட பல நூறு மாதிரிப் புத்தகங்களை அழகாக அமைத்திருக்கிறார் திருப்பூர் ஆனந்த். வாசகர்கள் அதன் முன் நின்று தற்படம் எடுத்துக்கொண்டே புத்தகக்காட்சிக்குள் நுழைகிறார்கள்.

44 ஆண்டுகள்... 306 கவிதைகள்...

தமிழின் மூத்த எழுத்தாளர்கள், நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் என இரண்டு தலைமுறைகளுக்கும் இலக்கியப் பாலமாக ‘நவீன விருட்சம்’ இதழை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகிறார் அழகியசிங்கர். சமீபத்தில், தனது சிறுகதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்ட அழகியசிங்கர், அடுத்து தனது கவிதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை 306 கவிதைகளை எழுதியிருக்கிறார். எடுத்துக்கொண்ட ஆண்டுகள் 44. சொந்தமாக இலக்கிய இதழ் நடத்தியும் இவ்வளவு கவிதைகள்தான் எழுதியிருக்கிறார் என்பதே இந்தக் காலத்தில் ஆச்சர்யமான செய்திதான்.

தொகுப்பு: மானா பாஸ்கரன், மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x