Published : 16 Feb 2019 09:23 am

Updated : 16 Feb 2019 09:23 am

 

Published : 16 Feb 2019 09:23 AM
Last Updated : 16 Feb 2019 09:23 AM

சாதியும் தமிழ்ச் சமூகமும்: விவாதத்தைத் தூண்டும் ஓர் ஆய்வு

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்,

பக்தவத்சல பாரதி


பாரதி புத்தகாலயம்,

சென்னை-18.

044-24332924.

விலை : ரூ.60

தமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு எவ்வாறு உருவாகியிருக்க வேண்டும் என சங்க இலக்கியப் பாடல்களை முதன்மைத் தரவாகக் கொண்டு ஆராய்கிறது, 72 பக்கங்கள் கொண்ட இந்த நூல். குடி என்னும் தன்னாட்சி சமூக முறையிலிருந்து, சுற்றுவட்ட சமூக முறையின் ஊடாக செங்குத்து படிநிலை சமூக முறைக்கு தமிழ்ச் சமூகம் மாறி வந்திருப்பதாக இந்த நூலில் விளக்கியுள்ளார் பக்தவத்சல பாரதி.

சங்க காலச் சமூகம் குடி அடிப்படையிலான சமூகமாக இருந்தது என்பதை பூங்குன்றனின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு விவரிக்கின்றார் பக்தவத்சல பாரதி. சங்க இலக்கியத்தில் சிறுகுடி என்னும் சொல் 68 இடங்களில் வந்துள்ளது என்று லேமன்& மால்டன் எழுதிய நூலில் கூறப்பட்டுள்ள தகவலை வழிமொழிந்துள்ள இந்நூலாசிரியர் அப்படியான குடிகளிடம் காணப்பட்ட 15 வகையான பழங்குடிப் பண்புகளைப் பட்டியலிட்டுள்ளார். சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழ்ச் சமூகம் வேந்தனை மையமிட்ட சமூகமாக உருவெடுத்தது எனக் குறிப்பிடும் பக்தவத்சல பாரதி, அதை சுற்றுவட்டச் சமூகம் என அடையாளப்படுத்துகிறார்.

சுற்றுவட்டச் சமூக முறையில் அனைத்து வளங்களும் வேந்தனின் உடைமையாக இருந்ததாகவும், ஒரு சிறு பகுதி நிலத்தை அனுபவிக்க வேண்டும் என்றாலும் வேந்தனின் அனுமதி பெற்றாக வேண்டும் என்ற நிலை காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். வேந்தர்களின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து சீறூர் மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், குறுநில மன்னர்கள் முதலானோர் அடங்கிய தரநிலை சமூகம் உருப்பெற்றது என்கிறார்.

வேந்தர் ஆட்சி முறை ஏற்பட்ட பின்னர் சமூக முறை சாதியாக மாறத்தொடங்கியது எனக் கூறும்போது சங்ககாலத்தின் பிற்பகுதியிலேயே சாதி அமைப்பு தெளிவாக உருப்பெற்றுவிட்டது என அவர் கருதுவது தெரிகிறது. ஆனால், அது 4 - 5 நூற்றாண்டுகள் வரை நீர்மைத் தன்மையுடன் தொடர்ந்து கொண்டு இருந்ததாக அவர் சொல்கிறார். அதற்கு அடுத்ததாக சாதிப் படிநிலை இறுக்கமடைந்த நிலையைக் காட்டும் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டைப் பற்றி சுப்பராயலு, கராஷிமா ஆகியோர் கூறியிருப்பதை எடுத்துக்காட்டுகிறார். இதற்கிடையில் செங்குத்துப் படிநிலைச் சமூகம் உருவாகியிருக்க வேண்டும் என்பது அவரது யூகமாக உள்ளது.

இந்தியாவின் பிற பகுதிகளில் சாதியின் உருவாக்கமும் இறுக்கமும் தமிழ்ச் சமூகத்தில் சாதியின் உருவாக்கம் மற்றும் இறுக்கத்திலிருந்து பெருமளவில் வேறுபட்டதாக இருக்கிறது. அதுகுறித்து மேலைநாட்டு ஆய்வாளர்கள் கவனம் செலுத்திய அளவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கவனம் செலுத்தவில்லை. சுப்பராயலு, கராஷிமா முதலான கல்வெட்டியல் அறிஞர்கள் இதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர். அதையொட்டி ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டியது இன்றைய ஆய்வாளர்களின் கடமையாகும். பக்தவத்சல பாரதி அந்தத் திசையில் செய்திருக்கும் சிறிய பங்களிப்பு இந்த நூல். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.

இத்தகைய ஆய்வை முன்வைக்கும்போது அது புதிய வினாக்களை எழுப்புவதாகவும், திறப்புகளைக் காட்டுவதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அந்த விதத்தில் ‘சுற்றுவட்டச் சமூக அமைப்பு’ என்ற ஒரு கருத்தாக்கத்தை பக்தவத்சல பாரதி இதில் முன்வைத்துள்ளார். முதல் வாசிப்பில் அது ஒரு எளிமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கமாகத் தோன்றினாலும் அதை விவாதிப்பதன் மூலமாக புதிய கருதுகோள்களை நோக்கி நாம் நகர முடியும். அந்த விவாதத்தில் செங்குத்து நிலைக்கு மாறாக சமூகத்தை கிடைநிலையில் பாகுபடுத்திய வலங்கை இடங்கை பிரிவினை எப்படி உருவானது, அது எப்படி மறைந்தது என்பதைப் பற்றிய விவாதமும் முக்கியமானதாக அமையும்.

தமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு உருவானதைப் பற்றிய கேள்விக்கு இந்த நூல் விடை கூறிவிட்டது என்று கருதாமல், அந்த விடையைத் தேடுமாறு நம்மைத் தூண்டுகிறது என்று கருதினால்தான் இந்த நூலுக்கு நாம் நியாயம் செய்தவர்கள் ஆவோம். ஆய்வாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் ஒரு ஆய்வுப் பொருளை எடுத்துக்கொண்டு அதை எளிதில் புரியும் விதமாக ஒரு சிறு நூலை எழுதியிருக்கும் பக்தவத்சல பாரதி பாராட்டுக்குரியவர்.

- ரவிக்குமார்,

‘மணற்கேணி’ ஆய்விதழின் ஆசிரியர்

தொடர்புக்கு: adheedhan@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

neelam-idhazh

நீலம் இதழ்

இலக்கியம்

More From this Author