Published : 24 Feb 2019 12:56 PM
Last Updated : 24 Feb 2019 12:56 PM

நித்தியத்தின் நுழைவாயில்

ஓவியர் வான்கோவின் வாழ்க்கை குறித்து இதுவரை ஐந்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள படம் ‘அட் எட்டெர்னிடிஸ் கேட்’ (At Eternity’s Gate). வான்கோ என்ற ஒப்பற்ற கலைஞனின் கண்கள் வழியாக உலகைக் காட்டுகிறது இப்படம். அற்புதமான காட்சிக்கோணம்; வான்கோவின் மனதைப் போலவே கேமராவும் அலைபாய்கிறது. வான்கோவின் தீவிரம், பதற்ற நிலை, வியப்பு, கோபம், இயலாமை, தனிமை என அத்தனையிலும் அவரது உடலைப் போலவே கேமரா செயல்படுகிறது. எப்படி இது போன்ற காட்சிகளைப் படமாக்கினார்கள் என்ற வியப்பு மறையவேயில்லை. ஓவிய உலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரல்ல; அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஓவியங்கள் உலகமே பற்றி எரிவதுபோலவே காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.

கௌதம புத்தர் தனது முதல் சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான்பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில், “உலகம் முழுவதும் நெருப்பு இடையறாமல் எரிந்துகொண்டேயிருக்கிறது. அதை எவராலும் அணைக்க முடியாது. அந்த நெருப்பின் பெயர் காலம். அதை நீங்கள் காண முடிகிறதா?” என்று கேட்கிறார். காலத்தின் சுடர் தீண்டாத பொருளே இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் உலகுக்கு வயதாகிறது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் காலநெருப்பில் எரிந்துகொண்டிருக்கின்றன. அந்த அனுபவத்தை முழுமையாக உணர்ந்த மனிதரைப் போலவே இருக்கிறார் வான்கோ. அவரது ஓவியத்தில் கோடுகள் நெருப்பு பற்றிக்கொள்வதுபோலவே மேல்நோக்கி எழுகின்றன. அடர்ந்து பரவுகின்றன.

நுண்ணுணர்வுகள் கொண்ட கலைஞர்களுக்கு வாழ்க்கை எப்போதும் துயரமே. அதிலும் மனம் நிறைய படைப்பாற்றல் பொங்கி வழியும் சூழலில் கையில் காசில்லாமல், இருக்க இடமில்லாமல் அவதிப்படும் வாழ்க்கை இருக்கிறதே அது பெருந்துயரம். அப்படியொரு வாழ்க்கைதான் வான்கோவுக்கு  விதிக்கப்பட்டிருந்தது. குளிர்காலத்துக்குத் தேவையான உடைகள் அவரிடமில்லை. கணப்பு அடுப்பு கொண்ட அறையில்லை. தகுதியான காலணிகள்கூடக் கிடையாது. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்குக்கூட அவரிடம் பணம் இல்லை. ஆனால், மனதில் நெருப்பு பீறிட்டுக்கொண்டேயிருந்தது.

இயற்கையைப் புரிந்துகொள்ள முயன்ற கலைஞன்

வான்கோ இயற்கையை நகல் எடுக்கவில்லை. மாறாக, புரிந்துகொள்ள முயன்றார். எது இயற்கையாக உருவெடுத்துள்ளது என்பதை அறிந்துகொண்டிருந்தார். சூரிய ஒளியை அவரைப் போல நேசித்தவரில்லை. அவரே ஒரு சூரியகாந்திச் செடியைப் போலத்தானிருந்தார். மோனே நிலக் காட்சிகளை வரைவதில் விற்பன்னர். அவர் நீரின் இயக்கத்தைத் துல்லியமாக வரைந்திருக்கிறார். பூக்கள் அவரது கித்தானில் நேரடியாகப் பூத்திருந்தன. மோனேயிடமிருந்து வான்கோ இயற்கையை அவதானிக்கும் முறையைக் கற்றுக்கொண்டார். ஆனால், மோனேயின் தியான நிலையோ நிசப்தமோ வான்கோவிடமில்லை.

படத்தின் இயக்குநர் ஜுலியன் ஒரு ஓவியர். வான்கோ பயணித்த இடங்களுக்கெல்லாம் முழுமையாகப் பயணித் திருக்கிறார். வான்கோவின் படைப்பாளுமையைப் புரிந்துகொண்டிருக்கிறார். படத்தின் சிறப்பு வான்கோவாக நடித்துள்ள வில்கெம் டீபோ. அவரது நடிப்பு வாழ்வில் இது ஒரு மைல்கல். இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். வான்கோவாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தருணத்தில் அவர் வான்கோவேதான்.

திரைப்படம் வான்கோவின் இறுதி நாட்களைத்தான் முதன்மைப்படுத்தியுள்ளது. ஓவியம் வரைவதற்காகப் பிரான்ஸின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை நோக்கிச் செல்கிறார் வான்கோ. அங்கே ஒரு சிறிய அறை எடுத்துத் தங்குகிறார். போதுமான வசதியில்லை. விடுதி உரிமையாளர் அவர் மீது இரக்கம் கொண்டு யாரும் உபயோகிக்காத மஞ்சள் அறையை அவருக்காக ஒதுக்குகிறார். அந்த அறை அவரது ஒவியத்தில் பின்னாளில் இடம்பெற்றது. மஞ்சள் அறையில் தங்குகிறார் வான்கோ.

ஆறுபோல ஓடும் மஞ்சள் நிறம்

‘அட் எட்டெர்னிடிஸ் கேட்’ முழுப் படமும் மஞ்சள் நிறத்தில் செய்யப்பட்ட அர்ப்பணிப்பே. மஞ்சள் அடர்வண்ணமாகும். அது வெறும் நிறமல்ல; தீவிரமான மனநிலையின் அடையாளம். படம் முழுவதும் மஞ்சள் நிறம் பீறிட்டுக்கொண்டேயிருக்கிறது. மஞ்சள் வெளிச்சத்தில் பொருட்கள் மின்னுகின்றன. மஞ்சள் ஒரு ஆறுபோல ஓடிக்கொண்டிருக்கிறது. மஞ்சள் மலர்களான சூரியகாந்திப் பூக்கள் வாடிக் கருகியுள்ளன. ஆனால், வானெங்கும் மஞ்சள் நிறம். சூரியன் மஞ்சள் தெய்வமாக அறியப்படுகிறான். மஞ்சள் கீற்றுகள் ஒளிர்கின்றன. மஞ்சளின் களியாட்டமே உலகம் என்பதுபோலக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடர்நீலமும் மஞ்சளும் சிவப்பும்  வான்கோவுக்குப் பிடித்தமான வண்ணங்கள். அந்தக் கலவையைப் படம் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் ஆளரவமற்ற நிலப்பரப்பில் பெருவிருட்சம் ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறார் வான்கோ. பள்ளி மாணவர்களை இயற்கை வனப்பைக் காண அழைத்துக்கொண்டு வருகிறாள் ஒரு பள்ளி ஆசிரியர். மாணவர்கள் ஓவியரைக் கண்டதும் ஆரவாரமாக ஓடிவருகிறார்கள். அவர் என்ன வரைந்துகொண்டிருக்கிறார் என்று கேட்கிறார்கள். மரத்தின் வேர்களை வரைந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார் வான்கோ. “ஏன் மரத்தை வரையவில்லை?” என ஒரு மாணவன் கேட்கிறான். “எதற்காக மரத்தை வரைய வேண்டும்? வேர்கள்தானே மரத்தின் ஆதாரம்?” என்று கேட்கிறார் வான்கோ. அவரைப் புரிந்துகொள்ளாமல் மாணவர்கள் கூச்சலிடுகிறார்கள். இடையூறு செய்கிறார்கள். கோபம் கொண்டு அவர்களைத் துரத்தியடிக்கிறார். அந்த மாணவர்கள் அவரை நோக்கிக் கல்லெறிகிறார்கள்.

அன்றிரவு வீடு திரும்பும் வான்கோ மீண்டும் கல்லெறிபடுகிறார். தன் மீது கல் வீசிய மாணவன் ஒருவனைத் துரத்திப்பிடிக்கிறார். அவனது தந்தையும் மற்றவர்களும் ஒன்றுசேர்ந்து வான்கோவை அடிக்கிறார்கள். எதற்காக ஒரு கலைஞன் இப்படி அடிபடுகிறான். என்ன தவறு செய்துவிட்டான். உலகம் ஏன் இப்படி இரக்கமற்று நடத்துகிறது. அந்த வன்முறை, கலைகளைப் புரிந்துகொள்ளாத உலகின் வெளிப்பாடு. கலைஞர்களை உலகம் ஒதுக்கிவைக்கிறது. சித்ரவதை செய்கிறது. முடக்கிப்போட முயல்கிறது. ஆனால், கலைஞர்கள் முடங்குவதில்லை. மீண்டும் எழுச்சியோடு செயல்படவே செய்கிறார்கள்.

தீவிர மனநிலையின் வெளிப்பாடே கலை

“நீ ஓவியம் வரையும்போது பதற்றமாகிவிடுகிறாய். நிதானமாக, பொறுமையாக, தியானத்தில் இருப்பதுபோல ஓவியம் வரையப் பழகிக்கொள்” என்று அறிவுரை கூறுகிறான் காகின். ஆனால், “ஓவியத்தை அப்படி வரைய முடியாது. அது தீவிரமான மனநிலையின் வெளிப்பாடு. சீற்றத்தைத் தானே வெளிப்படுத்தவே செய்யும்” என்கிறார் வான்கோ. பால்காகின் தன்னைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காகத் தனது இடது காதைத் துண்டித்து அதை ஒரு காகிதத்தில் சுற்றி வாசகம் ஒன்றை எழுதி அனுப்பிவைக்கிறார் வான்கோ. நட்புக்காகக் காதை அறுத்துக் கொடுத்த ஒரே கலைஞன் வான்கோ மட்டுமே! இச்செய்கையை உலகம் மனநலமற்றவனின் செயல் என்று புரிந்துகொள்கிறது. மனநலச் சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்படுகிறார் வான்கோ. மனநல மருத்துவமனையில் இருந்தபோதும் ஓவியம் வரைவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த நாட்களில் அவர் வரைந்த ஓவியங்கள் துர்கனவின் சித்திரங்களைப் போலவே இருக்கின்றன.

சூரியகாந்திப் பூவை வான்கோ வரைந்துள்ள விதம் நிகரற்றது. படத்தில் கருகிப்போன சூரியகாந்தித் தோட்டம் முதலில் வருகிறது. பின்பு, மலர்ந்த சூரியகாந்திகள் தோன்றுகின்றன. கோதுமை வயல்களை வான்கோ வரைந்துள்ள விதம் காற்றின் லயத்தைக் காட்சிப்படுத்துவதாக உள்ளன. தனது நோட்புக்கில் அவர் விருப்பமான காட்சிகளை ஓவியமாக வரைந்துவைத்துக்கொள்கிறார். பின்பு, அதிலுள்ள சில காட்சிகளை முழு ஓவியமாக வரைகிறார்.

‘வான்கோ தற்கொலை செய்துகொள்ளவில்லை. முடிவு வேறுவிதமானது’ என்கிறது இந்தத் திரைப்படம். அவரது வாழ்க்கை வரலாற்றைப் புதிதாக எழுதியுள்ள ஸ்டீவன் நைபே, கிரெகோரி ஒயிட் ஸ்மித் புதிய தகவல்களைக் கூறுகிறார்கள். அதையே படமும் எதிரொலிக்கிறது. கவிதை என்பது காகிதத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை. அது திரைச்சீலையில் வண்ணங்களாலும் எழுதப்படுகிறது. அப்படி எழுதப்பட்ட கவிதைகளே வான்கோவின் ஓவியங்கள். இப்படமும் அத்தகைய ஒரு கவிதையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது!

- எஸ்.ராமகிருஷ்ணன்,    ‘துணையெழுத்து' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x