Last Updated : 29 Sep, 2014 10:01 AM

 

Published : 29 Sep 2014 10:01 AM
Last Updated : 29 Sep 2014 10:01 AM

ஆடுபுலி ஆட்டம் நடக்கும் பெரிய மந்தை

மந்தை என்பது ஊரின் பொதுஇடமாகும். கரிசல் வட்டாரத்தில் இன்று மந்தையை மடம் என்று அழைக்கின்றனர். சங்க காலத்தில் மந்தையை மன்றில், அவை, மன்று, பொதியில், இல், அம்பலம், கூடல் என்னும் பெயர்களால் அழைத்தனர். மன்ற அவைகள் பிற்காலத்தில் மருவி மந்தைகள் ஆயின.

மதுரையில் சமணர் வாழ்ந்த சமணப் பள்ளியின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. சங்க காலத்தில் சித்திரங்கள் எழுதப்பட்ட மாடத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் மாண்டான். நன்மாறன் என்னும் பெயர்பூண்ட அம்மன்னன் சித்திரமாடத்தில் துஞ்சியதால் ‘பாண்டியன் சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறன்’ என்று அழைக்கப்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. குற்றாலத்தின் மற்றொரு பெயர் பொதிகை என்பது அனைவரும் அறிந்ததே. இது பொதியில் என்னும் சொல்லின் மரூஉ ஆகும். பொதி என்பது கூட்டத்தைக் குறிக்கும். மக்கள் கூட்டம், இல் என்னும் அவையில் கூடுவதால் குற்றாலத்தின் திருச்சித்திரக்கூடம் பொதியில் எனப்பட்டது. இதுவே பொதிகை எனத் திரிந்தது. எனவே, பழந் தமிழகத்தில் மன்றில், அவை, மன்று, பொதியில், இல், அம்பலம், கூடல் என்றெல்லாம் மந்தை அழைக்கப்பட்டது.இன்று மக்கள் வழக்கில் மந்தை என்று வழங்கப்பட்டாலும் மந்தையில் ஒவியம் வரையும் மரபு மட்டும் சங்க காலத்திலிருந்து நாயக்கர் காலம்வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அழிந்துவரும் சுவரோவியங்கள்

நரசிங்கம்பட்டி என்னும் ஊர், மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந் துள்ளது. யானைமலை அடிவாரத்திலுள்ள நரசிங்கம் என்னும் நரசிங்கமங்கலம் வேறு ஊராகும். பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் நிறைந்த மாங்குளம், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களின் அருகே அமைந்துள்ள இவ்வூர் பெருமலை (பெருமாள் மலை) என்று அழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மக்கள் வழக்கில் பெருமாள் மலை என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள பெரிய மந்தையின் சுவர்களில் நாயக்கர் பாணி சுவரோவியங்கள் காணப்படுகின்றன.எட்டுக் கல்தூண்களைக் கொண்ட மண்டபத்திலும் அதன் முன்னுள்ள தாழ்வாரத்திலும் உள்ள சுவர்களில் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.மண்டபத்தின் நடுப்பகுதியில் உள்ள விரிசலின் வழியே, மழைநீர் உள்ளே புகுந்து, இருபக்கச் சுவர்களில் உள்ள ஓவியங்களை முற்றிலும் அழித்துவிட்டன.இப்போது எஞ்சியிருப்பது ஒரு பக்கச் சுவரில் உள்ள ஓவியங்கள் மட்டுமே. ஊர் அவைகள் நடக்கும்போது ஏற்றப்படும் கல் விளக்கு ஒன்று மந்தையில் கிடக்கிறது. இந்த விளக்கை நரசிங்கம்பட்டி பெரிய மந்தைக்கு அளித்தவர் சிக்கந்தர் என்பவர்; இந்தச் செய்தி அந்தக் கல்விளக்கில் உள்ள கற்பொறிப்பால் அறியவருகிறது. ஊரின் பொதுப்பணத்தைப் பாதுகாக்க, இரும்பினால் செய்யப்பட்ட ஒழுக்கறைப் பெட்டி ஒன்று நகர்த்த முடியாத அளவு கனத்தோடு மந்தையில் கிடக்கிறது. இதுபோன்ற இராமாயண ஓவியங்கள் அழகர் கோயில் சுவரில் இருப்பினும் அந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் வேறு; நரசிங்கம்பட்டி ஓவியங்களை வரைந்த ஓவியர் வேறு. இவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கு திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் ஆலயத் தேரோட்டத்தின் போது பாரம்பரியமாக வடம்பிடிக்கும் உரிமை உள்ளது.

இராமாயணக் காட்சிகள்

இங்குள்ள ஓவியங்களில் இராமாயணக் காட்சிகளும், தசாவதாரக்காட்சிகளும் காணப்படுகின்றன. சுவரை நான்காகப் பிரித்து தொடர்சித்திர பாணி அமைப்பில் வரையப்பட்ட இந்த ஓவியங்களின் அடிப்பகுதியில் தேர்ச்சக்கரங்கள் உருள்வதுபோல தீட்டப்பட்டுள்ளன.

இராமர், இலக்குவன், சீதை, குகன் ஆகியோர் பரிசலில் அமர்ந்து கங்கையைக் கடப்பது, களிறும் பிடியும் செல்வது, இராமன் வளைக்கும் வில்லை வீரர் பலர் தூக்கி வருவது, காடேகும்போது, இராமன் கைகேயியின் காலில் விழுந்து வணங்கி விடைபெறுவது, தசரதன் அவையில் வீற்றிருக்க, சீதையின் முன் வீரர் பலர் வில்லை முறிப்பது, பச்சை வண்ணம் பூசப்பட்ட இராமன் வில்லை வளைப்பது ஆகிய காட்சிகளை இன்றும் கண்டு சுவைக்கும் வண்ணம் நல்ல நிலையில் உள்ளன. அரசர்கள் சூடியுள்ள கிரீடங்களிலும், மாந்தர்கள் அணிந்திருக்கும் அணி களிலும், உடைகளிலுள்ள பூ வேலைப் பாடுகளிலும், மகளிரின் கூந்தல் ஒப்பனைகளிலும் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகள் ஓவியரின் திறனை வெளிப்படுத்துகின்றன. ஓவிய வரைமுறை நாயக்கர் காலத்தைச் சார்ந்ததாகும். இப்போது மீதியிருக்கும் ஓவியங்களையாவது தொல்பொருள் துறை காப்பாற்றுமா?

இன்று மந்தைகளில் ஆடுபுலி ஆட்டம் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றது.

கட்டுரையாளர், தொடர்புக்கு: writerchiththaanai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x