Last Updated : 04 Jan, 2014 12:00 AM

 

Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

தமிழ்ப் பதிப்புலகமும் உலகப் பதிப்புச் சூழலும்

தமிழகப் பதிப்புச் சூழல் உலகமயமாதலின் தாக்கத்தில் உலகச் சூழலுடன் இணைந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக தமிழர்கள் இலங்கையிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் பெருமளவுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இந்தப் புலப் பெயர்வு தமிழ்ச் சமூகத்தை உலகச் சூழலுடன் மேலும் நெருங்கச் செய்திருக்கிறது. கணினியின் யுகம் ஏற்பட்ட காலத்தில் தமிழைப் புதிய தொழில் நுட்பங்களுடன் இணைத்தவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்பது நினைவுகூரப்பட வேண்டிய செய்தி.

1990களில் இந்தியாவில் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கை அமுலாகித் தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கியது. கணினி சார் தொழில் நுட்பங்கள் அச்சுக்கோர்த்து இயக்கப்பட்ட பொறிகளை ஓரங்கட்டின. தொலைதொடர்புப் புரட்சி ஏற்படத் தொடங்கியது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இணையமும் கைபேசிகளும் தமிழகத்தை எட்டின.

அக்காலகட்டத்தில் பொதுவாக உலக அளவில், பதிப்பகம் வேறாகவும் ஊடகங்கள் வேறாகவும்தான் செயல்பட்டு வந்தன. தமிழில் சில முன்னுதாரணமான விதிவிலக்குகள் உண்டு. ‘சக்தி’ பதிப்பகம் வை.கோவிந்தன் சக்தி இதழையும் சிலகாலம் நடத்தினார். ‘எழுத்து’ இதழுடன் சி.சு.செல்லப்பா நூல்களையும் பதிப்பித்தார். அவை காலத்திற்கு முந்தைய முயற்சிகளாக அமைந்தமையால், வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நின்று நிலைபெறவில்லை.

இது உலக அளவில் மீடியா ஒன்றிணையும் காலகட்டம். அதாவது இதழ்கள், பதிப்பகங்கள், தொலைக்காட்சி, திரைப்படத்துறை போன்ற தனித்தனி வகைமைகள், ஒன்றுடன் ஒன்று நெருங்கி, கதை கூறலின் பல முகங்களாக, ராவணன் தலைகள் போன்று இணையத் துவங்கியிருக்கின்றன.

தமிழகத்தில் காலச்சுவடுக்குப் பின்னர் இதழ்களும் பதிப்பகங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்கின. இன்று பல மாற்றுப் பதிப்பகங்களின் இதழ்களை வெளிக்கொணருகின்றன. பல இதழியல் நிறுவனங்கள் பதிப்பகங்களைத் துவக்கியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்ப் பதிப்புலகம் கண்டுவரும் வளர்ச்சியை வெகுஜன இதழ்கள் பெருமளவுக்குப் புறக்கணித்து வருகின்றன. நூல் விமர்சனம், எழுத்தாளர்களுடன் உரையாடல், பதிப்புலகச் செய்திகள் என்பனவற்றிற்கு வெகுஜன ஊடகங்கள் அளித்துவரும் இடம் ஆகக் குறைவானது. தமிழ்த் திரைப்படத்துறை ஊடகங்களில் பெறும் கவனத்துடன் ஒப்பிட்டால் இது தெளிவுபெறும். இந்நிலையில் மாற்றுப் பதிப்பகங்கள் வாசகரைச் சென்றடையத் தமக்கான மாற்று ஊடகங்களை ஏற்படுத்திக்கொள்கின்றன.

தமிழகப் பதிப்புலகம் தொடர்பான தெளிவான புள்ளிவிபரங்கள் எதுவும் இல்லை. பதிப்பகங்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் வெளிவரும் புத்தகங்களின் எண்ணிக்கை, தமிழ்ப் புத்தகச் சந்தையின் ஒட்டுமொத்த ஆண்டு விற்பனை போன்றன எல்லாமே உத்தேசக் கணக்குகள்தான். இந்நிலையில் அதன் வளர்ச்சியையும் காரணிகளையும் ஆதாரப்பூர்வமாக முன்வைப்பது சாத்தியமல்ல. இருப்பினும் சில அனுமானங்களை விவாதிக்கலாம். அதே நேரம் தமிழக அரசு தமிழ்ப் பதிப்புலகம் பற்றிய ஒரு விரிவான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இங்கு வலியுறுத்துவோம்.

தமிழ்ப் பதிப்புலகம் கண்டுவரும் வளர்ச்சி என்பது பெரும் பாய்ச்சல் அல்ல. ஆனால் தெளிவான அழுத்தமான முன்னகர்வு. இது சில தருக்கங்களும் சில விசித்திரங்களும் கொஞ்சம் மர்மங்களும் கலந்தது.

பொருளாதார தாராளவாதம் தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தை விரிவுபடுத்தியது. நகரமயமாதல் வேகமடைந்தது. பணப்புழக்கம் அதிகரித்தது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ் மொழிக்கும் பிழைப்பின் சாத்தியங்களுக்குமான பிளவு மேலும் விரிவடைந்தது. ஆங்கிலத்தின் இடமும் இருப்பும் வலுப்பெற்றன. இன்று கல்வி அதிகமும் ஆங்கிலவழிக் கல்வி ஆகிவருகிறது. தமிழில் எழுதப் படிக்க முடியாத இளையர்களின் தொகை நகர்ப்புறங்களில் பெருகிவருகிறது. பொருளாதார வளர்ச்சியும் கல்வியும் இதழ்களைப் புத்தகங்களை வாங்கும் சாத்தியமுடைய மக்கள் பரப்பை அதிகரித்த அதே வேளையில் பொதுவாழ்வில் தமிழுக்கான இடம் பின்னடைவு கண்டது. இந்தப் பின்னணியால்தான் தமிழ்ப் பதிப்புலகில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன.

தமிழ்ப் பதிப்புலகம் கண்ட வளர்ச்சிக்குச் சென்னைப் புத்தகச் சந்தை ஒரு குறியீடு. 1990களில் சென்னைப் புத்தகச் சந்தையில் ஒரு வாசகர் ஒய்யாரமாக நடைபயில முடியும். நண்பர்களுடன் கூடியமர்ந்து இலக்கியப் பேச்சுகளை ஊதிப்பெருக்க முடியும். அக்காலத்தில் சென்னைப் புத்தகச் சந்தையை அனுபவித்த ஒருவர் இன்று திரும்பி வந்தால் பண்பாட்டு அதிர்ச்சிக்கு உள்ளாவது நிச்சயம். இன்று ஜனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது ‘பாப்பாசி’. தென் தமிழகத்தில் நெல்லையிலும் நாகர்கோவிலிலும் இவ்வாண்டு நடந்த புத்தகச் சந்தைகளில் பெருங்கூட்டத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அங்கு நூல்கள் வாங்கியவர்கள் பலரும் வாழ்வில் முதல்முறையாகப் பாடபுத்தகம் அல்லாத ஒரு நூலை வாங்கினர் என்பது உண்மை.

உலகமயமாதல் சூழலில் பல லட்சம் தமிழ் இளையர்கள் கார்ப்ரேட் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். புதிய நடுத்தரவர்க்கமாக உருவாகி வருகின்றனர். அதே நேரம் இந்த மாற்றம் மண்ணிலிருந்தும் மொழியிலிருந்தும் அவர்களை அந்நியப்படுத்துகிறது. புதிய தலைமுறையின் ஊடக, இணைய ஈடுபாடும் புத்தகங்களிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துகின்றது. இதற்கு எதிர்வினையாக மொழியையும் பண்பாட்டையும் அதே தொழில்நுட்பங்களின் வழி மீட்டெடுக்கும் எதிர்வினை ஏற்படுகிறது. இணையம் தமிழின் புதிய திணையாகிறது. தமது குழந்தைகளைத் தமிழுடன், புத்தகங்களுடன் இணைக்கும் ஆர்வம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. உயர் வருமானம் பெற்றுச் செழிப்படையும் இளையர்களின் விழிப்புணர்வுடைய பகுதியினர் தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்தவும் பண்பாட்டைச் செழுமைப்படுத்தவும் விழைகின்றனர். இவர்கள் பதிப்பகங்களில் முதலீடு செய்கின்றனர். புத்தகக் கடைகள் நடத்துகின்றனர். தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையில் பாலங்கள் அமைக்கின்றனர். இணையம் வழி உலகெங்கும் தமிழ் நூல்கள் கிடைக்க வழிதேடுகின்றனர்.

பொருளாதாரக் காரணிகளாலும் சாதி மதக் காரணிகளிலும் கல்வியற்றிருந்த சமூகத்தினர் கல்வி பெற்று பொதுச் சமூகத்தில் இணைந்து வருகின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் ஆங்கிலவழிக் கல்வி கற்றாலும் நடைமுறையில் பெரும்பான்மையோருக்கு தமிழ்தான் கற்கும், விளங்கிக் கொள்ளும், பகிர்ந்துகொள்ளும் மொழியாக இருக்கிறது. கல்விப் பரவலாக்கத்தால் தமிழ் நாளிதழ்கள், வார/மாத இதழ்கள், நூல்களின் விற்பனை பெருகுகிறது. சென்னையில் ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் பணியாற்றுபவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டை உயிர்ப்புடன் அறிய வேண்டிய அத்தியாவசியம் ஏற்படுகிறது. சக்கையான பாடநூல்களில் கற்காதவற்றை நூல்கள் வழி அறிவது முக்கியமாகிறது. தமிழ் ஊடகங்களின் தாக்கத்தால், கல்விச் சூழலையும் மீறித் தமிழ் பரவுகிறது. உலகெங்கும் புத்தகக் கடைகள் மூடப்படும் சூழலில் சென்னையில் புதிய தமிழ்ப் புத்தகக் கடைகள் திறக்கப்படுகின்றன. ஆங்கில நூல்கள் மட்டுமே விற்பனை செய்த கார்பரேட் புத்தகக் கடைகள் தமிழ் புத்தகச் சந்தையின் வீச்சை உணர்ந்து இப்போது தமிழ் நூல்களையும் விற்பனை செய்கின்றன. சுமார் பதினைந்து இணைய தளங்களில் தமிழ் நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் தமிழ் நூல்களை விற்பனை செய்யும் மையங்கள் கையளவு. இன்று அதன் எண்ணிக்கை பத்து மடங்காக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தொலைக்காட்சி பரவத்தொடங்கிய பின்னர் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. புதிய நாளிதழ்கள் உருவாகின்றன. தமிழ் இதழ்களின் தொகையும் பெருகி வருகிறது. மேற்கத்தியச் சூழலில் தொலைக்காட்சியின் வரவு அச்சு ஊடகங்களைப் பாதித்தது. அமெரிக்காவில் இதே காலகட்டத்தில் நாளிதழ்களின் எண்ணிக்கையும் விற்பனை அளவும் பெரும் சரிவைக் கண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொலைக்காட்சியின் ஊடுருவல் 100 சதவீதத்தை எட்டிய காலத்தில்தான் அச்சு ஊடகங்களும் வளர்ச்சி காண்கின்றன. நம் சூழலின் தனித்தன்மைக்கு இவை சான்று.

வரும் ஆண்டுகளில் தமிழ் நூல்கள் மின் நூல்களாக வெளிவரும் சாத்தியம் கூடிவருகிறது. இந்தப் புதுவரவு முக்கியமானது. குறிப்பாகத் தமிழர்கள் உலகெங்கும் வசிக்கும் சூழலில் இது மேலும் முக்கியத்துவமுடையதாகிறது. இந்த எல்லா நாடுகளிலும் தமிழ் நூல்கள் விநியோகம் செய்யும் அளவுக்கு தமிழ் புத்தகச் சந்தை இன்னும் வளர்ச்சி பெறவில்லை. தமிழ் சினிமா குறுந்தகடுகளும் தேங்காய்ப் பாலும் உலகளாவ விநியோகம் பெறும் தேவை தமிழ்ச் சமூகத்தில் தமிழ் நூல்களுக்கு இல்லை. எனவே தமிழ் வாசகருக்கு மின்நூல்கள் வடிகாலாக முடியும். தொழில்நுட்பத்தின் மைந்தர்களாக வளரும் புதிய தலைமுறையை எட்டவும் தமிழ் மின் நூல்கள் வழிசெய்யும்.

புதிய தொழில்நுட்பங்களின் தாக்கத்தால் நூலின் வரையறை மாறிவருகிறது. ஒரு நூல் என்பது அச்சடிக்கப்பட்ட தாள்களுக்கு அட்டைபோட்டுத் தயாரிக்கப்படும் சாதனம் என்ற பார்வை மாறி, நூல் என்பது அதன் உள்ளடக்கம்தான் என்ற பார்வை ஏற்பட்டிருக்கிறது. அதன் வடிவம் அச்சு நூலாகவோ, ஒலிப்பேழையாகவோ, மின் நூலாகவோ இருக்கலாம்.

மின் நூல்களின் வருகை மேற்கில் அச்சு நூல்களின் சந்தையைப் பாதிக்கிறது. ஆனால் தமிழில் இது நிகழும் சாத்தியம் இன்னும் சில பத்தாண்டுகளுக்கு இல்லை. மின் நூல்கள் தமிழில் புத்தகச் சந்தையை விரிவுபடுத்தி வலுப்படுத்துமே அன்றி அச்சு நூல்களை அழிக்கப்போவதில்லை. தொழில்நுட்ப மாற்றங்கள் அத்தனை எளிதில் தமிழ்ச் சமூகத்தில் வீச்சாகப் பரவமுடியாது. அதற்கு பண்பாட்டுக் காரணிகளும் பொருளாதாரத் தொழில்நுட்பக் காரணிகளும் உண்டு. தமிழின் முதல் அச்சு நூல் கோவாவில் 16ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டுப் பின்னர் சில நூற்றாண்டுகளுக்குத் தமிழ் ஓலைச்சுவடிகள் தொழில்பட்டன. முதல் அச்சுவடிவில் வெளிவந்த லிவிலியமும் பாரதியின் படைப்புகளும் ஓலைச்சுவடியில் நகல் செய்யப்பட்டதாக ஒரு ஆய்வாளர் என்னிடம் கூறினார். காரணம் அச்சும் தாளும் அன்று மலிவான வழிமுறைகளாகவும் ஓலைச்சுவடி உயர்குடிச் சாதனமாகவும் புனிதமானதாகவும் பார்க்கப்பட்டது. சைவ மடங்கள் 19ஆம் நூற்றாண்டு வரை அச்சு நூல்களை ஏற்க மறுத்தன.

தமிழ்ப் பதிப்புலகம் காணும் வளர்ச்சியை பொருளாதாரத் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்வது பிழையானது. தமிழ்ச் சமூகத்தின் எல்லாப் பண்பாட்டு அரசியல் மாற்றங்களிலும் தமிழ்ப் பற்றுக்கு முக்கிய இடமுண்டு. தமிழ் ஒரு மதமாகவும் செயல்படுவதாகப் பார்த்தால்தான் தமிழ்ப் பற்றை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். திருவள்ளுவர் தமிழரின் இறைவனார். திருக்குறள் புனித நூல். தொல்காப்பியர், கம்பர், இளங்கோவடிகள் துணை தெய்வங்கள். எனவே தமிழ் பண்பாட்டு மாற்றங்களில் தமிழ்ப் பற்றின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவது பிழையாக அமையும்.

அத்தோடு கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் சமூக மாற்றங்கள் துரிதம் பெற்றுள்ளன. கருத்தியல் சார்பு, சமூகப் போட்டியுணர்வு, விழிப்புணர்வு போன்றனவும் தமிழகப் பதிப்புலக மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, நெருக்கடி, விவாதங்கள், முரண்பாடுகளின் வெளிப்பாடாக இன்று சுமார் 10 இஸ்லாமிய இதழ்கள் வெளிவருகின்றன. பல பதிப்பகங்களும் உருவாகியுள்ளன.

தமிழர்களின் சில நூற்றாண்டுப் புலம் பெயர்வு தமிழை ஒரு உலக மொழியாக மாற்றியிருக்கிறது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் அப்பால் சிங்கப்பூர் மலேசியாவில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில், வட அமெரிக்காவில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இந்தப் பின்னணியில் மொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழகமே பதிப்பக அடிப்படையாக இருப்பது ஆரோக்கியமானது அல்ல. தமிழ்ப் பதிப்பகங்கள் பிராந்திய அடிப்படையில் உருவாக வேண்டும். தமிழகத்தில் அச்சாகும் நூல்களை பெரும் செலவில் ஏற்றுமதி செய்வது பொருத்தமான வழிமுறை அல்ல. மாறாகக் கிழக்காசியாவிலும் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தமிழ்ப் பதிப்பகங்கள் உருவாக வேண்டும். தமிழகத்தில் வெளியாகும் நூலுக்கு வட அமெரிக்காவில் விற்பனைச் சாத்தியம் இருந்தால் அதற்குப் பிராந்திய உரிமை பெற்று வட அமெரிக்காவில் பதிப்பிக்க வேண்டும். அதேபோல ஐரோப்பாவில் வெளியாகும் தமிழ் நூலுக்கு தமிழகத்தில் விற்பனைச் சாத்தியம் இருக்கும் பட்சத்தில் அதற்கான தமிழக உரிமையை வாங்கி அச்சிட வேண்டும். ஆங்கிலம், ஸ்பானிஷ் போன்ற சில உலகமொழிகளில் இது சாத்தியப்பட்டுவருகிறது. இலங்கை மற்றும் மலேசியத் தமிழின் தனித் தன்மைகளுக்கு ஏற்ப பொருத்தமான இடங்களில் பிரதிகளை பொறுப்புணர்வுடனும் கவனத்துடனும் திருத்தி வெளியிடுவதையும் இது சாத்தியப்படுத்தும். வெகுஜன ஊடகங்களால் தமிழின் பிராந்திய வேறுபாடுகள் மழுங்கடிக்கப்படுவதை இது தவிர்க்கும். இத்தகைய வளர்ச்சி பெற்ற புத்தகச் சந்தையாக தமிழ் பதிப்புலகம் உருப்பெறும்போது தமிழ் உலக மொழியாக மேலும் தகுதி பெறும்.

கண்ணன் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர். தொடர்புக்கு kannan31@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x