Published : 02 Feb 2019 09:38 am

Updated : 02 Feb 2019 09:38 am

 

Published : 02 Feb 2019 09:38 AM
Last Updated : 02 Feb 2019 09:38 AM

360: ஓமந்தூரார் ஆவணப்படம்!

360

ஓமந்தூரார் ஆவணப்படம்!

ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வர்களில் முக்கியமானவர். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஓமந்தூராரின் வாழ்க்கையை ‘ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்’ எனும் ஆவணப்படமாகப் பதிவுசெய்திருக்கிறார் எஸ்.ராஜகுமாரன். 1947-ல் எடுக்கப்பட்ட காணொளித் துணுக்குகள், சில அற்புதமான வரலாற்றுப் புகைப்படங்கள் படத்தை அலங்கரிக்கின்றன. ஓமந்தூராரை அறிந்த சில பிரமுகர்களின் நேர்காணலுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், இந்த மாத இறுதியில் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் வெளியிடப்படவிருக்கிறது!


குளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்திய விருது

பல ஆயிரம் பக்கங்களைக் கேரளத்திலிருந்து மலையாள மணம் குன்றாமல் தமிழுக்குக் கொண்டுவந்தவர் குளச்சல் மு.யூசுப். ஜி.ஆர்.இந்துகோபனின் ‘திருடன் மணியன்பிள்ளை’ நூலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது. அறம் பிறழாத ஒரு திருடனின் அற்புதமான இந்தப் புத்தகம் ஒரு புனித நூலைப் போல ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியது. வாழ்த்துகள் யூசுப்!

தமிழகத்தின் வழியில் ஒடிஷா

ஒடிஷா மாநிலத்தின் தலைமைச் செயலாளர், தகவல்தொழில்நுட்பத் துறை செயலாளர் மற்றும் அரசு ஆலோசகர் உள்ளிட்ட குழு, தமிழகத்தின் முக்கிய நூலகங்களைப் பார்வையிடுவதற்காக வந்திருக்கிறது. ரோஜா முத்தையா நூலகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆகியவற்றின் பணிகளை இந்தக் குழு பார்வையிட்டு வருகிறது. ஒரிய மொழியில் வெளிவந்த புத்தகங்களை மின்னூல்களாக்கி இணையதளத்தில் வெளியிடும்வகையில் ஒரிய இணையக் கல்விக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழகமே இதற்கு முன்னுதாரணம்.

வாசக அன்பெனும் வரம்

வாசகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பையும் வாழ்த்தையும்விட எழுத்தாளர்களுக்குப் பெரிய பேறு இருக்க முடியுமா? அந்தப் பேறை அடைந்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் ஷோபா சக்தியும் சுகாவும். இலங்கையைச் சேர்ந்த கிஷோகர் எனும் வாசகர், ஷோபா சக்தியைக் கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து பெருமிதப்பட்டிருக்கிறார் - ‘தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த கதை சொல்லிக்கு முத்தத்தைத் தவிர வேறு எது மரியாதையைச் செய்துவிட இயலும்?’ எனும் வாசகத்துடன். அதேபோல், எழுத்தாளர் சுகாவைச் சந்தித்த அவரது முதுபெரும் வாசகி அவரது கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து நிற்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் சுகா பகிர்ந்துகொண்டிருக்கிறார். இருவருக்கும் குவிகின்றன வாழ்த்துகள்!

இன்னும் தொடரும் யாப்பு மரபு

நவீனக் கவிதைகளின் காலகட்டம் இது. ஆனாலும், யாப்பு இலக்கணத்தின் அடிப்படையில், மரபுக் கவிதைகளை எழுதும் கவிஞர்களும் தங்களது பயணத்தைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மரபுக் கவிதைகளை வெளியிடுவதற்கென்றே சில இதழ்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சமீபத்திய வரவு, சென்னை பொன்னியம்மன் மேட்டிலிருந்து வெளியாகும் ‘முறுவல்’ மாத இதழ். இந்த இதழில் ஒவ்வொரு கவிதையும் நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தம் என்று பாவினங்கள் குறிப்பிடப்பட்டு வெளியாகிறது. அடுத்த இதழ், வஞ்சிப்பா இதழாக மலர இருக்கிறதாம்.

தொகுப்பு: மானா பாஸ்கரன், த.ராஜன்Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x