Published : 05 Jan 2019 09:00 am

Updated : 05 Jan 2019 09:00 am

 

Published : 05 Jan 2019 09:00 AM
Last Updated : 05 Jan 2019 09:00 AM

தொடங்கியது அறிவுக் கலாச்சாரக் கொண்டாட்டம்!- 800 + அரங்குகள் | 10,00,000 தலைப்புகள் | 25,00,000 வாசகர்கள் | 2,00,000 மாணவர்கள்

800-10-00-000-25-00-000-2-00-000

புத்தாண்டுக் கொண்டாட்டத்தோடு புத்துணர்வுடன் தொடங்கியிருக்கிறது புத்தகக்காட்சி. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 42-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சி, நேற்று (ஜனவரி 4) மாலை தொடங்கியது. இம்முறை, நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தப்படுகிறது. 820 அரங்குகள் (தமிழ் அரங்குகள் 487, ஆங்கில அரங்குகள் 294, மல்டிமீடியா 13, பொது அரங்கு 26), 428 பங்கேற்பாளர்கள் (தமிழ் 259, ஆங்கிலம் 132, மல்டிமீடியா 13, பொதுவானவர்கள் 24) எனப் பிரம்மாண்டமாக வாசகர்களை வரவேற்கத் தயாராகியிருக்கிறது.

எதுவரை நடக்கிறது?


ஜனவரி 4 முதல் 20 வரை என இந்த ஆண்டு 17 நாட்கள் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. இந்தப் பதினேழு நாட்களில் 10 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பது கூடுதல் சிறப்பு. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.

 10% கழிவில் புத்தக வேட்டையாடலாம்.

நிகழ்ச்சிகள்

நேற்று (ஜனவரி 4) மாலை நடந்த நிகழ்ச்சியில் புத்தகக்காட்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்புரை வழங்கினார். மேனாள் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் சிறப்புரையாற்றினார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி நிகழ்வுக்குத் தலைமை ஏற்றார்.

விருதுகள்

இந்த ஆண்டு முதல் முறையாகச் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் அம்சவேணி பெரியண்ணன் பெயராலான அவ்விருது திலகவதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது முல்லை பதிப்பகம் பழநியப்பனுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது காயத்ரி பிரபுவுக்கும், சிறந்த விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெளினியப்பன் விருது ஹிக்கின் பாதம்ஸ் சந்திரசேகருக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது கோவி பழநிக்கும், பபாசி - சிறந்த நூலகர் விருது இளங்கோ சந்திர குமாருக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது சபீதா ஜோசப்புக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது க.ப.அறவாணனுக்கும் வழங்கப்படவுள்ளது.

‘இந்து தமிழ் திசை’ அரங்கு 65 – 66

புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ அரங்கு (எண்: 65 & 66) வாசகர்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது. இந்து குழுமத்திலிருந்து முதல் முறையாக ‘இந்து இயர்புக் - 2019’ வெளிவந்திருக்கிறது. பிரபஞ்சனின் ‘எமதுள்ளம் சுடர்விடுக’, வெ.இறையன்புவின் ‘காற்றில் கரையாத நினைவுகள்’, தமிழச்சி தங்கப்பாண்டியனின் ‘சொட்டாங்கல்’, அ.வெண்ணிலாவின் ‘மரணம் ஒரு கலை’, சக்திஜோதியின் ‘ஆண் நன்று - பெண் இனிது’, ஷபிமுன்னாவின் ‘யு.பி.எஸ்.சி தேர்வில் வென்றவர்கள்’, நாகூர் ரூமியின் ‘சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்’, சோம வீரப்பனின் ‘சபாஷ் சாணக்கியா’, என்.சொக்கனின் ‘வெல்லுவதே இளமை’, கு.சிவராமனின் ‘இனிப்பு தேசம்’, வினோத் ஆறுமுகத்தின் ‘டிஜிட்டல் போதை’, ஜி.ராமானுஜத்தின் ‘நலம் தரும் நான்கெழுத்து’, ஆர்.சி.மதிராஜின் ‘காலமெல்லாம் கண்ணதாசன்’ போன்ற புதிய வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன.

புத்தகக்காட்சியின் சிறப்பம்சங்கள்

சுற்றுச்சூழல், கட்டடத் துறை, உணவு மற்றும் உடல்நலன், திரைப்படத் துறை, இசை சார்ந்த புத்தகங்களுக்கான தனி அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சாகித்ய அகாதமி, யுனிவர்சிடி ஆஃப் மெட்ராஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேசியப் புத்தக நிறுவனம்(என்பிடி), செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், பப்ளிகேசன் டிவிசன்,

உ.வே.சா நூல் நிலையம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் போன்ற அமைப்புகளும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெங்குயின், ஹாப்பர்காலின்ஸ் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

புத்தகக்காட்சி வளாகத்தில் பிரம்மாண்டமான தமிழன்னை உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஜனவரி 16 அன்று நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

முதல் முறையாக பபாசியின் இணையதளத்தில் (bapasi.com) புத்தகக்காட்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்கிக்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான மேடை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, குறும்படம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாசகர்கள் - எழுத்தாளர்கள் சந்திப்புக்குத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் வாசகர்களுடன் முன்னணி எழுத்தாளர்கள் உரையாடவிருக்கிறார்கள்.

இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள். ரொக்கப் பிரச்சினை இருக்காது. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இலவச வைஃபை உண்டு. செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

மாற்றுத்திறனாளிகள் அரங்குகளுக்குச் செல்ல சக்கர நாற்காலிகள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகளுக்காக சுமார் 5 லட்சம் இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை புத்தகக்காட்சியில் வெளியாகும் புதிய புத்தகங்கள் குறித்த தகவல்களும், நூல் குறித்த குறிப்புகளும், பதிப்பகம் மற்றும் அரங்கு எண் விவரங்களும் பபாசியின் ஃபேஸ்புக் மற்றும் இணையதளத்தில் அறிந்துகொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 50 பேர் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்ற முறைபோலவே வழிகாட்டும் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி எந்த பதிப்பகத்தின் அரங்கு, எந்த வரிசையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கென சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. ரூ.100-க்கு சீசன் டிக்கெட் வாங்கினால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரோ அல்லது நண்பர்கள் நான்கு பேரோ எப்போது வேண்டுமானாலும் வந்துசெல்லலாம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x