Published : 22 Jan 2019 08:37 AM
Last Updated : 22 Jan 2019 08:37 AM

நிறைவுற்றது சென்னை புத்தகக்காட்சி!

‘சென்னை புத்தகக்காட்சி - 2019’ நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ கல்லூரியில் ஜனவரி 4 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி ஜனவரி 20 வரை நடந்தது. இம்முறை 17 நாட்கள்! இந்தப் புத்தகக்காட்சி பல லட்சம் வாசகர்களை ஒன்றுதிரட்டியிருக்கிறது. பல்வேறு புகார்களைக் கடந்தும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. மாபெரும் கொண்டாட்டமாக நடந்து முடிந்த புத்தகக்காட்சியைக் கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்...

சாதித்தார் பதிப்பாளர் ராமகிருஷ்ணன்

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது ‘தேசாந்திரி’ பதிப்பக அரங்கில் கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் வந்திருந்து வாசகர்களோடு கலந்துரையாடினார். இந்தப் புத்தகக்காட்சியில் அதிக எண்ணிக்கையில் கையெழுத்திட்ட எழுத்தாளர் இவர்தான்! எவ்வளவு கூட்டமிருந்தாலும், எத்தனை புத்தகங்களில் கையெழுத்திடச் சொன்னாலும் மிக நிதானமாக, ‘மிக்க அன்புடன் எஸ்.ராமகிருஷ்ணன்’ என்று கையெழுத்திட்டு செல்ஃபிக்குப் போஸும் கொடுத்துக்கொண்டிருந்தார். எஸ்.ராமகிருஷ்ணனுக்குக் கடுமையாகப் போட்டிபோட்டுக்கொண்டிருந்தவர் சாரு நிவேதிதா. ‘ஸீரோடிகிரி’ பதிப்பகமும் வெற்றிகரமாக ஒரு ஆண்டை நிறைவுசெய்திருக்கிறதாம். ‘உயிர்மை’யில் வழக்கம்போல் மனுஷ்யபுத்திரன் வாசகியர் சூழ இருந்தார். நான்கு மூர்த்திகளில் ஜெயமோகன் மட்டுமே பாக்கி. அடுத்த வருடத்தில் ஜெயமோகனும் ‘விஷ்ணுபுரம்’ பதிப்பகம் தொடங்கப்போவதாக ஒரு வதந்தி உலாவருகிறது.

கொள்கைப் பெரியார் கோடி கைகளில்

பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்துக்காக மட்டுமே ஒரு அரங்கு அமைத்திருந்தார்கள்.  ‘லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு, பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ல் ஆரம்பித்த இலக்கு, பெரியாரின் நினைவுதினத்துக்கு முன்பாகவே நிறைவேறியது. அதைத் தொடர்ந்து, ‘கொள்கைப் பெரியார் கோடி கைகளில்’ என மந்திரத்தை மாற்றிக்கொண்டு புத்தகக்காட்சியில் களம் இறங்கியிருந்தார்கள்!

அடுத்த முறையாவது யோசியுங்கள்

சிறார் புத்தகங்கள், ஆன்மிகம், சுயமுன்னேற்றம், இலக்கியம் என வகைமைப்படுத்திப் புத்தகக்காட்சியின் அரங்குகளை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் புத்தகக்காட்சி தனது அரங்கு வடிவமைப்பையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மிக நீண்ட வரிசைகளில் ஒரே மாதிரியான புத்தகங்களை எல்லா அரங்குகளிலும் பார்ப்பது சலிப்பூட்டும் அனுபவமாக இருந்தது.

இந்தப் புத்தகக்காட்சியிலும் வழக்கமான கழிப்பிடப் பிரச்சினை தொடர்ந்தது. கூட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் இருப்பது ஒருபுறம் என்றால், தண்ணீர் இல்லாமல் சுகாதாரக்கேடுக்கு வழிவகுக்கும்படி இருந்தது. இது நிச்சயம் களையப்பட வேண்டும்.  அடுத்த முறை நவீன வசதிகளை மேற்கொள்வது குறித்து யோசிக்க வேண்டும்.

ஸ்வைப்பிங் இயந்திரங்கள் வைத்திருக்கும் அரங்குகளும்கூட நெட்வொர்க் சரியாகக் கிடைக்காததால் கணிசமான அளவில் புத்தக விற்பனை பாதிக்கப்பட்டதாகவும், அட்டையை ஸ்வைப்பிங் இயந்திரத்தில் தேய்த்துக்கொண்டு பல நிமிடங்கள் காத்திருப்பதால் தேவையில்லாத மனவுளைச்சலுக்கு ஆளாவதாகவும் வருத்தம் தெரிவித்தார்கள்.

காபி, தேநீர், சாப்பாடு, நொறுக்குத் தீனிகளை மிக அதிக அநியாய விலையில் விற்கும் அவலம் இந்த ஆண்டும் தொடர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x