Published : 02 Jan 2019 09:11 AM
Last Updated : 02 Jan 2019 09:11 AM

புத்தக இரவில் மலர்ந்த புத்தாண்டு!

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் தமிழ்நாடு முழுவதும் குவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில், ஆர்ப்பாட்டமில்லாமல் மிகப் பெரும் அறிவுத் திருவிழாவை நிகழ்த்தினார்கள் தமிழ் வாசகர்கள்.

புத்தாண்டு தினத்தைப் புத்தகங்களோடு கொண்டாடும் ‘புத்தகங்களோடு சொல்வோம் புத்தாண்டு வாழ்த்து’ இயக்கம், இந்த ஆண்டு மேலும் பிரம்மாண்டமாக நடந்தது. சென்னை மட்டுமல்லாமல், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர், தஞ்சை என்று மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ‘புத்தக இரவுக் கொண்டாட்டம்’ விடிய விடிய நடந்தது. பல லட்ச ரூபாய் மதிப்புக்கான புத்தகங்கள் நேற்று ஒரு நாளில் மட்டும் விற்றுத் தீர்ந்தன. சமூக வலைதளங்களில், ‘2018-ல் படித்த புத்தகங்கள், பிடித்த / பிடிக்காத புத்தகங்கள்’ பட்டியலிட்டுப் பகிர்ந்தனர் வாசகர்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வாசகர்களின் எண்ணிக்கை இம்முறை புதிய உச்சத்தைத் தொட்டதுதான் இந்த ஆண்டின் விசேஷம். குழந்தைகள், பெண்கள், இளைஞர்களோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்றார்கள். இந்து தமிழ் திசை, பாரதி புத்தகாலயம், என்சிபிஹெச், காலச்சுவடு, உயிர்மை, டிஸ்கவரி, எதிர், தேசாந்திரி, விஜயா, நற்றிணை என்று தமிழின் முன்னணிப்பதிப்பகங்கள் பலவும் 10% முதல் 50% வரையிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்திருந்தன. இதனால், வாசகர்கள் புத்தகங்களை மூட்டை கட்டி வாங்கிச் சென்றனர்.

புதிய எழுத்துருக்கள் வெளியீடு: இந்த ஆண்டு நடந்த ‘புத்தக இரவு’ நிகழ்ச்சிகளிலேயே விசேஷமானது என்றால், கிட்டத்தட்ட 2102 புதிய தமிழ் எழுத்துருக்களை ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டதைச் சொல்லலாம். இவை அத்தனையையும் தமிழ்ச் சமூகத்துக்குக் கட்டணமின்றி பயன்பாட்டுக்கு வழங்கப்படுவதாக அந்தப் பதிப்பகம் தெரிவித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் செயலர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ‘பாரதி யூனிகோடு’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த எழுத்துருக்களை https://freetamilfonts.com/ என்ற இணையதளத்தில் தரவிறக்கிக்கொள்ளலாம்.

புத்தகங்கள் வாங்கிய இளம் வாசகர்கள் பலரும் புத்தாண்டு தினத்தில் வாசிக்கத் தொடங்கிய புதிய புத்தகங்களின் படங்களைச் சமூக வலைதளங்களில் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். பல்வேறு விஷயங்களைக் காரணம் காட்டி வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதான புலம்பல்கள் ஒருபுறம் கேட்கையில், இந்தப் புதிய வாசிப்பு இயக்கம் அந்தப் புலம்பல்களுக்கு ஒரு முடிவு கட்டட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x