

காலம் காலமாகச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த பட்டியலின, பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உழைத்தவர்களின் போராட்டங்கள் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்துவந்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அரசு இயந்திரத்தின் மிக முக்கியக் கண்ணியான இந்திய ஆட்சிப் பணியில் இருந்துகொண்டே சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபட முடியும் என்பதை நிரூபித்துவருபவர் பி.எஸ்.கிருஷ்ணன். இந்த ஆண்டுக்கான வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ள வேளையில் மற்றும் இடஒதுக்கீடு குறித்து நிலவிவரும் சமகாலச் சூழலில், கிருஷ்ணன் குறித்து வெளியாகியுள்ள நூலை அறிமுகப்படுத்துவது அவசியம் எனக் கருதுகிறேன்.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, பி.எஸ்.கிருஷ்ணனிடம் கேட்ட 50 கேள்விகளுக்கான பதில்களின் ஊடாகவே அவர் தன் வாழ்க்கை சரிதத்தை விளக்கியிருக்கிறார்.
சமூக அவலங்கள் பற்றிய தெளிவுடைய ஓர் இளைஞராக, 1956-ல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த கிருஷ்ணன், நில அளவை அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். அப்போது கிராமங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்களை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அங்குள்ள நிலமற்ற ஏழைகளுக்கு, குறிப்பாக பட்டியலின மக்களுக்கு, வழங்குவதற்கு முன்னுரிமை அளித்தார். அவர்களுக்குக் குடிமனைப் பட்டாக்களை வழங்குவது, கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்வது என அரசு விதிகளை முறையாக அன்றைய ஆந்திரபிரதேசத்தில் அமல்படுத்திய முதல் அதிகாரியாகத் திகழ்ந்தார்.
அதிகார வர்க்கத்திடமிருந்தும், ஆதிக்க சக்திகளிடமிருந்தும் எழுந்த எதிர்ப்புகள் எதற்கும் அஞ்சாது, தொடர்ச்சியான பணியிட மாறுதல்களையும் எதிர்கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டரீதியான தன் தெளிவான செயல்பாட்டின் மூலம் மத்திய அரசின் செயலாளர் என்ற தகுதி (இந்தத் தகுதியும்கூட அவருக்குக் காலம் தாழ்ந்தே கிடைத்தது) வரையில் உயர்ந்தார் கிருஷ்ணன். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு அவர் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை.
பட்டியலின, பழங்குடி மக்களுக்கான தேசிய கமிஷனுக்கு அரசியல் அமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கிய 1990-ம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்; புத்த மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு பட்டியலின அந்தஸ்தை வழங்குவது; பட்டியலின, பழங்குடி மக்களின் மீதான கொடுமைகளைத் தடுப்பதற்கான 1989-ம் ஆண்டு சட்டம் (இது 2015-ம் ஆண்டில் திருத்தம் பெற்றது); 1993-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கைகளால் மலம் அள்ளுவோருக்கு வேலையளிப்பதைத் தடைசெய்வது மற்றும் உலர் கழிவறை அமைப்பதைத் தடைசெய்வது ஆகியவற்றுக்கான சட்டம் (இது 2013-ம் ஆண்டில் கைகளால் மலம் அள்ளுவோருக்கு வேலை தருவதைத் தடுப்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டம் என்பதாக மாற்றம் பெற்றது); சமூக - கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைத் தேசிய அளவிலானதாக மாற்றியது என நடைமுறைப்படுத்தத் தக்கச் சட்டங்களை அரசியல் அமைப்புச் சட்டரீதியாக உருவாக்குவதில் அவரது பங்கையும் எதிர்கொண்ட சவால்களையும் இந்த நூல் விரிவாக விளக்குகிறது.
அதைப் போன்றே, ஆந்திரபிரதேச அரசின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக கல்விரீதியாகப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உருவாக்குவதிலும், அதை எதிர்த்த சட்டப் போராட்டங்களில் ஆலோசகராக இருந்து உச்ச நீதிமன்றத்தில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருவதிலும் கிருஷ்ணனின் ஆழமான அனுபவங்கள் உதவியுள்ளன. சமூகத்தினால் முற்றாகக் கைவிடப்பட்டுள்ள கைவினைஞர்கள், நாடோடி இனத்தவரின் மேம்பாட்டுக்கான அவரது முயற்சிகளும் தனித்தன்மை வாய்ந்தவை.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், சமூக அமைப்பில் உயர்ந்த நிலையில் இருக்கும் பிரிவினருக்கு சமதையான நிலையை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முழுமையான திட்டங்கள் குறித்து இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இன்றளவும் இந்தச் செயல்திட்டத்தைத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பெயரளவுக்குக்கூட இணைத்துக்கொள்ள முன்வரவில்லை என்பதே கிருஷ்ணனோடு இணைந்து நடைபோட வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. சமூகநீதிக்காக நிற்கும் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஆவணம் இது. சீக்கிரமே தமிழில் இந்நூல் வர வேண்டும்!
- வீ.பா.கணேசன், தொடர்புக்கு: vbganesan@gmail.com