

சமீப காலங்களில் தமிழ்ப் பதிப்புலகில் முன்னணி எழுத்தாளர்களெல்லாம் பதிப்பாளர்களாக மாறிவருகிற ஒரு விசித்திரச் சூழல் உருவாகியுள்ளது. எழுத்தாளர்கள் சொல்லும் முக்கியக் காரணம், தாங்கள் எழுதிய புத்தகங்களுக்குச் சரியான அளவில் ராயல்டி கிடைப்பதில்லை. பதிப்பாளர்கள், எத்தனை புத்தகங்கள் அச்சடிக்கிறார்கள், எவ்வளவு விற்பனையாகிறது, மீதம் எவ்வளவு உள்ளது போன்ற தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. எழுத்தாளர்களைப் பதிப்பாளர்கள் விலைபொருளாகப் பார்ப்பதாகவும், உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்றும் எழுத்தாளர்கள் தரப்பில் மனம் குமுறுகின்றனர்.
சமீபத்தில், பதிப்பாளராக உருமாறிய ஒரு எழுத்தாளரிடம் பேசினேன். “தன்னுடைய புத்தகம் ஆறு ஆண்டுகளாக ஒரு பதிப்பாளரிடம் உள்ளதாகவும், எப்போது சென்று கேட்டாலும் முதல் தடவை அச்சடித்தது அப்படியே உள்ளது என்று கூறுகிறார். அதே நேரத்தில் பல சிற்றூர்களில்கூட புத்தகம் விற்பனைக்கு வைத்து இருப்பதாக அங்குள்ள கடைக்காரர்கள் கூறுகிறார்கள். பல நண்பர்கள் தாங்கள் புத்தகம் வாங்கியதாகவும் கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால், குறைந்தது 3,000 புத்தகங்களாவது விற்றிருக்க வேண்டும். ஆனால், பதிப்பாளர் முதலில் அச்சடித்த 500 பிரதிகளே மீதி உள்ளதாகக் கூறுகிறார். அது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னால் அரசு பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியபோது அதில் என்னுடைய புத்தகமும் வாங்கப்பட்டது. ஆனால், பதிப்பாளர் அதற்கு ராயல்டி கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். அரசு குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்ததாகவும், கமிஷன் கொடுத்து ஆர்டர் பெற்றதாகவும் காரணம் கூறுகிறார்” என்றார். இதுவே பலரது வாதமும்கூட.
எந்த ஒரு காலகட்டத்திலும் இல்லாத அளவுக்குப் புதிய எழுத்தாளர்கள் இப்போது பெருகிவருகிறார்கள். பதிப்புத் துறை இன்றைக்கு வெகுவாக முன்னேற்றம் கண்டுவிட்டது. மாதக்கணக்கில் உழைத்து புத்தகங்கள் தயாரிக்கப்படுவது மாறி, வாரங்களில் தயாரிக்கப்படும் நிலைக்கு வந்து, ஒரு சில மணி நேரங்களில் புத்தகம் அச்சடிக்கக்கூடிய வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதன் காரணமாகவும், பதிப்பாளர்களாக எழுத்தாளர்கள் மாறுவது எளிதாகிறது.
பல ஆண்டுகள் எழுத்துலகில் தடம்பதித்த எழுத்தாளர்கள் பதிப்பாளர்களாக மாறுவது ஒருபுறம் என்றால், முதல் புத்தகத்தைத் தாங்களே பதிப்பித்துக்கொள்ளும் சூழலும் உருவாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் எழுதுபவர்களை ஒருங்கிணைத்து இணையதளம், பேஸ்புக் போன்றவற்றில் எழுதியவற்றைப் புத்தகமாக்கும் போக்கு இன்னொருபுறம். பல வருட காலம் பதிப்புத் துறையில் கோலோச்சிய பதிப்பகங்களும்கூட மோசமான முறையில் புத்தகங்களைத் தயாரித்து வெளியிடுவது. இப்படி இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது. ஆக, ஒட்டுமொத்த வாசிப்புச் சூழலையே ஒருவகையில் காவுவாங்கியிருக்கிறது எனலாம். யார் வேண்டுமானாலும் பதிப்பாளர்களாகலாம். ஆனால், தரமான எழுத்துகளை, தரமான முறையில் பதிப்பிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது.