Last Updated : 24 Jan, 2019 10:01 AM

 

Published : 24 Jan 2019 10:01 AM
Last Updated : 24 Jan 2019 10:01 AM

75 மணித்துளிகள்.. 4 நாடகங்கள்

ஒரு நல்ல கதையைப் படிக்கும் போது, அதன் காட்சிகள் நம் மனத்திரையில் ஓடும். ஒரு நல்ல நாடகத்தைப் பார்க்கும்போது, நாமும் அந்த நாடகத்தில் ஒரு பாத்திரம் ஆகிவிடுவோம். இப்படிப்பட்ட அனுபவத்தை நமக்கு வழங்கியது ‘தியேட்டர் மெரினா’ அரங்கேற்றிய ‘நேற்று இன்று நாளை’ நாடகம். இது, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் கீர்த்தி மாரியப்பன் தயாரித்து, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் அரங்கேற்றப்பட்ட நாடகம்.

புராணமோ, சமூகக் கதையோ, அதை அறிவியல் கோட்டிங் கொடுத்து வழங்கியவர் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய ‘நச்சுப் பொய்கை’, ‘தீபாவளி’, ‘கடவுள் பெட்டி’ ஆகிய 3 சிறுகதைகளுக்கும் உரிய முறையில் காட்சி வடிவம் கொடுத்து நாடகமாக்கியுள்ளனர்.

அதோடு, ஜெயராமன் ரகுநாதனின் ‘இரண்டாம் கதவு’ சிறுகதையையும் சேர்த்து, ஒண்ணேகால் மணி நேரத்தில் மொத்தம் 4 நாடகங்களை ஒரே மாலையில் தொடுத்த இயக்குநர் ஜவஹர் சேகரின் திறமையையும், நாடகமாக்கிய ஆர்.கிரிதரனின் சாமர்த் தியத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு டீக்கடை பெஞ்ச் காட்சியில் தொடங்கி, அதிலேயே முடியும் இந்த நாடகப் பயணத்தில் சிறிதுகூட தொய்வும் இல்லை, அலுப்பும் இல்லை. அரசியல்வாதி குஞ்சிதபாதமாக நடிப்பிலும் ஜொலிக்கிறார் நாடகத்தின் இயக்குநர் ஜவஹர் சேகர். நடப்பு அரசியலும் நாடகத்தில் சுடச்சுட விமர்சிக்கப்படுகிறது.

‘நச்சுப் பொய்கை’ நாடகம், ரசாயனத் தின் துணையோடு சுஜாதாவின் குறுக்குவெட்டுப் பார்வையை தரிசனப் படுத்துகிறது. பொய்கை, நச்சாக மாறியதன் காரணத்தை அறிவியல் பாதி, அவல நகைச்சுவை பாதி என்ற பாணியில் அலசுகிறது.

எவ்வளவுதான் அறிவியலின் உச்சத்தில் பறந்தாலும் மனித மனம் விரும்புவது உறவுகளைத்தான் என் பதை நெகிழ்ச்சியோடு ரசிகர்களுக்கு புரியவைத்தது ‘தீபாவளி’ நாடகம்.

‘இரண்டாம் கதவு’ நாடகம், மனைவியை கொடுமைப்படுத்தும் கணவனுக்கு நரகத்தில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது. ஆனால் அதில் படைப்புத் திறன் என்பது அவ்வளவாக இல்லை.

‘கடவுள் பெட்டி’ நாடகம் ஒரு சுவாரஸ் யமான பெட்டி. கடவுள் பெட்டியை உருவாக்கிய விஞ்ஞானியாக நடித் திருக்கும் கிரிதரனின் உடல்மொழியும், வசன உச்சரிப்பும் அசாத்தியம். பெட்டியைப் பரிசோதித்துப் பார்க்கும் இளைஞனின் நடிப்பும் கச்சிதம்.

ஒரே பொருளையே பலவிதமாகப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடகத்துக்கும் ஏற்ற சூழலை மேடையில் கொண்டுவந்திருந்தனர். சூழலுக்கு ஏற்ற தக் ஷினின் இசை, காட்சிகளை மேலும் சுவாரஸ்யப்படுத்தியது.

பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளையும் கவர்ந்த இந்த ‘நேற்று இன்று நாளை’ நாடகம், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பிப்ரவரி 16, 17 தேதிகளில் மீண்டும் நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x