Published : 14 Jan 2019 09:35 AM
Last Updated : 14 Jan 2019 09:35 AM

என்னை வளர்த்த வாசிப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரான இரா.நல்லகண்ணு சென்னை புத்தகக்காட்சிக்கு வந்திருந்தார்.

93 வயதிலும் வாசிப்பை விடாமல் தொடரும் நல்லகண்ணு, தன் வாழ்வில் புத்தகம் மிக இன்றியமையாத ஒன்றாக மாறியதன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். “என்னுடைய வாசிப்பு பாரதியார் புரட்சிப் பாடல்களிலிருந்தும் புதுமைபித்தன், வ.ராவின் எழுத்துகளிலிருந்தும்தான் தொடங்கியது. ‘ஏழை படும் பாடு’ புத்தகம் மறக்க முடியாதது. பகத் சிங், சுவாமிநாத சர்மா ஆகியோரின் எழுத்துகளோடுதான் என் இளமைக்காலம் கழிந்தது.

சமூகச் சீர்த்திருத்தம் மற்றும் மாற்றத்துக்கான கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் என்னைச் செதுக்கியது. சமுதாய மாற்றம் கொண்டுவர நினைக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த வாசிப்பு அவசியமானது. வாசிப்பும் அதைப் பற்றிய விவாதமும் தெளிவான சிந்தனைக்கு வழிவகுக்கும். இன்றைய இளைஞர்கள் புரட்சிகரமான செயல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரிய  விஷயம். அரசியலுக்கு நல்ல கொள்கைகள் உள்ள அனைவரும் வரலாம்.

அரசியல் களம் மக்களின் வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதையே லட்சியமாகக் கொள்பவர்கள்தான் சமூக மாற்றங்களை உருவாக்க முடியும். அவர்கள்தான் சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும். பெண்கள் அனைத்து துறையிலும் வளர்ந்துவருவதுபோலவே அரசியலிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அது அவசியமும்கூட. நன்னூல் கூற்றுபோல பழையன கழிந்து புதியன புகுதல் வேண்டும். அரசியலில் மாற்றுக் கட்சியோ, இளைஞர்களோ வருவது வரவேற்கத்தக்கது!” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x