ஆங்கிலம் சென்ற ப.சிங்காரம்

ஆங்கிலம் சென்ற ப.சிங்காரம்
Updated on
1 min read

ஒரு புத்தகத்தை அந்தக் கதை நடந்த களத்திலேயே படிப்பது என்பது சுவராசியமான அனுபவம். எனது ஆவணப்படம் ‘யாதும்’ திரையிடுவதற்காக மலேசியாவில் உள்ள பினாங்கு தீவுக்கு 2014-ல் சென்றபோது அப்படியொரு அருமையான அனுபவம் வாய்த்தது. தமிழின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவரான ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ படித்து முடித்திருந்த நான் எதேச்சையாக ‘கடலுக்கு அப்பால்’ நாவலைக் கையிலெடுத்துச் சென்றிருந்தேன். சிங்காரத்தின் இரண்டு நாவல்களும் இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழரை மையமாகக் கொண்டவை. நாட்டுக் கோட்டை செட்டிமார்களின் வட்டிக்கடை, ராவுத்தர், சீனன், ஜப்பானியப் படைகள், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் என்று நாவல் நகரும்.

இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து போர் முடிந்தவுடன் பினாங்கு திரும்பிய செல்லையாவுக்கும் அவருடைய முதலாளி மகள் மரகதத்துக்கும் இடையேயான காதல் போராட்டத்தைப் பற்றியது ‘கடலுக்கு அப்பால்’. செல்லையாவை மருமகனாக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த செட்டியார், தன் சொல்லை மதியாது போருக்குப் போய்வந்த காரணத்தால் மரகதத்தை வேறொருவருக்கு மணம் முடிக்க முடிவெடுக்கிறார். E&O ஓட்டல் போன்ற பினாங்கின் கேளிக்கை விடுதிகள், வீதிகள், செட்டியார் கிட்டங்கி, புகழ்பெற்ற தண்ணி மலையான் கோயில் என்று பினாங்கு நகரின் பல்வேறு இடங்களில் கதை நகர்கிறது. கதையில் வரும் இடங்களைத் தேர்ந்தெடுத்தது, அங்கு அமர்ந்து படிக்க ஆரம்பித்தபோது, அதில் வரும் பல நிகழ்வுகள் உண்மைச் சம்பவங்கள் என்று புரிந்தது. ஒரு கட்டத்தில் கதையில் வரும் செல்லையாவும், மரகதமுமே உண்மையான காதலர்களாகக் இருந்திருக்கக் கூடும் என்று நம்பும் அளவுக்குக் கதையில் வரும் வரலாற்றுச் சம்பவங்கள், நிகழ்வுகள் காணப்பட்டன.

துரதிர்ஷ்டம் என்னவென்றால், பினாங்கு நகரை மையமாக வைத்து 1950-களில் எழுதப்பட்ட நாவலைப் பற்றி பினாங்கில் நான் பேசியபோது அங்கேயுள்ள தமிழர்கள் யாருக்குமே நாவல் குறித்துத் தெரிந்திருக்கவில்லை. இந்த நாவல் பற்றி பேசியபோது தமிழர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள், சீனர்கள் என்று பினாங்குவாசிகள் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘கடலுக்கு அப்பால்’ ஒரு வரலாற்று ஆவணம் என்பது தெளிவாகவும், நாவல் மொழிபெயர்க்கப்பட்ட வேண் டும் என்ற என் கோரிக்கையை அரீக்கா புத்தகங்கள் ஏற்று, பேராசிரியர் ஆர்.கார்த்திகேசு உதவியுடன் அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். நாவல் இப்போது இந்தியாவில் ‘Beyond the Sea’ என ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்து இலக்கியத் திருவிழாவில் ஜனவரி 14 அன்று மாலை 5 மணிக்கு ‘Beyond the Sea’ வெளியிடப் பட்டவுடன் ‘இலக்கியம் மூலமாகப் புலம்பெயர்ந்த தமிழர் வரலாறு’ என்ற தலைப்பில் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, கவிஞர் சேரன் மற்றும் நான் மூவரும் கலந்துரையாடினோம். சிறந்த தமிழ் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் காரணமாக இருந்தோம் என்பதே மகிழ்வளிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in