Last Updated : 07 Jan, 2019 08:59 AM

 

Published : 07 Jan 2019 08:59 AM
Last Updated : 07 Jan 2019 08:59 AM

காவிரிக் கதைகளை எழுத விரும்புகிறேன்!- தங்க.ஜெயராமன் பேட்டி

தங்க.ஜெயராமன். தமிழகம் அதிகம் அறிந்திராத, ஆனால் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமை. ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் முக்கியமான பங்களிப்பாளர், விவசாயி என்றெல்லாம் இவருக்குப் பல முகங்கள் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக எழுத்தாளராகவும் அவதாரமெடுத்துள்ளார். தமிழுக்கு, சமீப காலத்தில் கிடைத்த மிக அழகான மொழிநடையைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயராமன். ‘காவிரிக் கரையில் அப்போது’ புத்தகத்தைத் தொடர்ந்து தற்போது அவரின் ‘காவிரி என்பது நீரல்ல’ என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. அவருடன் பேசியதிலிருந்து…

ஆங்கிலப் பேராசிரியரான நீங்கள் தஞ்சையின் கலாச்சார வரலாற்றெழுத்தாளராக மாறியது எப்படி?

இப்படி ஒரு பட்டம் எனக்கு வாய்த்திருந்தால் மகிழ்ச்சிதான். ஆங்கிலப் பேராசிரியர் தஞ்சையின் கலாச்சார வரலாற்றெழுத்தாளராவது ஒரு மாற்றமல்ல. பின்னது முன்னதன் தொடர்ச்சி. கலாச்சாரம்பற்றி எழுதுவது ஆங்கில ஆசிரியராக இருந்ததன் விளைவு என்றுகூட சொல்வேன். ஆங்கிலம் நம் மண்ணிலிருந்து நம்மை விலகி நிற்கச் சொல்வதில்லை. மாணவனாக நான் இங்கிலாந்தின் சமூக வரலாறு படித்தபோதும், அதை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தபோதும் நம் சமூக, கலாச்சார வரலாறு இவ்வளவு விவரமாக எழுதப்படவில்லையே என்று தோன்றியது. நவீன காலத்துக்குச் சற்று முந்தைய காலத்தின் தமிழகக் கலாச்சார வரலாற்றில் இந்தக் குறை அதிகம் உண்டு. நான் ஆராய்ச்சியாளனல்ல. என் அனுபவத்தில் இருப்பதையாவது எழுத வேண்டும் என்று நினைத்தேன். சிறுகதைகள், நாவல்கள், ஆய்வறிக்கைகளில் வரும் நம் கலாச்சாரம் பற்றிய விவரங்கள் எனக்கு நிறைவளிக்கவில்லை என்பது இன்னொரு காரணம்.

உங்கள் பின்னணி உங்கள் எழுத்துக்கும் உங்கள் வளர்ச்சிக்கும் எந்த அளவில் உறுதுணையாக இருக்கிறது?

வேடிக்கையாகச் சொல்வதென்றால் நான் அசலான மண்ணோடு நெருக்கமான தொடர்பு உள்ளவன்! மண்பாண்டம் செய்வது எங்கள் தொழில். இன்றைக்கு இதைச் சொல்லும்போது இடுப்பு வேட்டி நழுவிப்போய் அம்மணமாகிவிட்ட உணர்வு எனக்கு. ஆனால், அப்போது எனக்கு அப்படிக் கூசியதில்லை. சமுதாயம் கூச்சத்தைக் கற்பித்துவிட்டது.

சரியான சமூக முரணில் சிக்கிக்கொண்டவன் நான். வெளியே எல்லோரும் சாதியைத் தாழ்த்திப் பேசுவார்கள். வீட்டுக்குள் எங்களை நாங்கள் அப்படிப் பார்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை. கொஞ்சம் நஞ்சை இருந்தது. நான் தலைப்பிள்ளை. வானம் கறுப்பதையும், காற்று வீசும் திசையையும், தீயின், மண்ணின் தன்மையையும், வெயிலின் ஏற்றம், தணிவையும் கணித்துக்கொண்டே இருக்க வேண்டும். காவிரியின் பெரிய கிளையான கோரையாற்றின் கரையில் வீடு. அம்மா பிறந்த ஊர் காவிரியின் கடை மடை.

மண்பாண்டங்கள் வாங்கவரும் சாதாரண மக்களோடு பழகியுள்ளேன். அருமையான கிறித்துவப் பள்ளிகளில் படித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், பிரெஞ்சு இலக்கியம் பயின்றேன். ஆசிரியர் ஒருவரிடம் ஓவியம் கற்றிருக்கிறேன். அங்கு மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தேன். எனது மாமனாரும், தாய்வழி மாமா ஒருவரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள். அவர்கள் வழியாக எனக்கு காங்கிரஸ் கட்சியின் பழைய தலைவர்கள் சிலர், அவர்கள் குடும்பங்கள் பழக்கம். பழைய அரசியல் சம்பவங்களை அவர்களிடமிருந்து அறிந்திருக்கிறேன். அவர்களுள் இருவர் பத்திரிகையாளர்கள். இந்தத் தொடர்புகள் எனக்குப் பெரிய கல்வியாக இருந்தன. எனது மாமனார் ‘சங்கநாதம்’ என்ற மாதப் பத்திரிகைகூட நடத்தினார்.

 ‘தினமணி’யில் வேலைபார்த்திருக்கிறார். மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு அவர் மாநிலச் சங்கம் ஒன்று நடத்திவந்தார். அதற்கான கடிதப் போக்குவரத்துக்கு உதவியே எழுதக் கற்றுக்கொண்டேன். பல்கலைக்கழகத்தில் எனக்கு சிறந்த ஆசிரியர்கள் வாய்த்தார்கள். சென்னையில் இருந்தபோது மாலைக் கல்லூரியில் சட்டம் பயின்றேன். பள்ளியிலும் பல்கலைக்கழகத்திலும் நல்ல நண்பர்கள். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை என் எட்டாம் வகுப்புத் தோழர் சித்தேரி விஜயராகவன் கொடுத்துப் படித்து முடித்திருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பின்னாளில் கொஞ்சம் நிலம் சம்பாதித்துத் தீவிரமான விவசாயம் செய்திருக்கிறேன். கவலையும் கஷ்டமுமாகவே இருந்தபோதும் எதையும் நான் வெறுக்காமல் அனுபவித்துக் கழித்துள்ளேன். நான் உயரப் பறந்தாலும் ஊர்க்குருவிதானே என்று பேசியவர்களையும் நண்பர்களாக்கிக்கொண்டிருக்கிறேன். மனதில் குறை வளர்த்துக்கொண்டதில்லை. அனுபவத் திரட்சிதான் என் உறுதுணை.

தஞ்சையில் உங்களை மிகவும் ஈர்த்த பிரதேசம் எது?

மார்கழிக் காலையில் மயிலாடுதுறையிலிருந்து திருவையாறுவரை பயணிக்கப் பிடிக்கும். பருவகாலத்தை ஒட்டி காவிரிக்கரை வெவ்வேறு பொலிவைக் காட்டும். அடைமழையில் பட்டுக்கோட்டையிலிருந்து நாகைவரை பயணிக்கும் ஆனந்தம் அலாதி. பெரிய ஆறுகளின் கரை எப்போதுமே ஈர்ப்புடையவை. சித்திரை நிலவில் பட்டக்காலாகக் கிடக்கும் பரந்த வயல்வெளி கண்கள் நிலைப்பதற்கென்று அங்கு எதுவும் இல்லையென்றாலும் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும் அற்புதம்.

காவிரிதான் தஞ்சை எனும்போது இன்றைய நீர்வளத்தின் வீழ்ச்சியைத் தஞ்சை எப்படி எதிர்கொண்டிருக்கிறது?

அதை யாரும் எதிர்கொள்வதாகத் தெரியவில்லை. துளைக் கிணறு என்ற தொழில்நுட்பத்தை அரசும் மக்களும் பெரிதாக நம்புகிறார்கள். அவ்வப்போது இயலும் வழியைக் கண்டு அப்போதைக்கு மீண்டுகொள்கிறார்கள். நீடித்த தீர்வுக்கு, எல்லா விவசாயிகளுக்கும் பயன்தரும் தொடர் முயற்சிக்குத் திட்டமிட்ட நடவடிக்கை இல்லை. கிராமங்களின் தலைமைப் பண்பு அவ்வப்போது வரும் ஆளும் கட்சியின் உள்ளூர்த் தலைமையில் கரைந்துவிடுவது பெரிய வீழ்ச்சி. அவ்வாறே பாசனம், நீராதாரம் பற்றிய மக்களின் தன்முனைப்பும் அரசு நிர்வாக நடவடிக்கைக்குக் காத்திருந்து அலுத்துப்போகும். ஆற்றுப் பாசனத்தில் நடந்த இரண்டு போகம் ஒரு போகமானது. நிலத்தடி நீரை ஓய்வில்லாமல் உறிஞ்சுகிறார்கள். மணல் அள்ளுவதைப் பார்த்தால் இந்த ஆறெல்லாம் இருந்து இனி என்ன பயன் என்ற விரக்தியில் விழுந்துவிட்டதாகத் தெரிகிறது.

கால மாற்றத்தில் நீங்கள் எந்தெந்த மாற்றங்களை எண்ணி வருந்துகிறீர்கள்? எந்தெந்த மாற்றங்களை எண்ணி மகிழ்கிறீர்கள்?

விதி என்று இருந்துவிடாமல் படிக்க, தொழில் செய்ய, வாழ்க்கை வசதிகளைச் சம்பாதிக்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். எல்லாப் பெண்களுமே ஆண்பிள்ளைகளைவிட பொறுப்போடு படிக்கிறார்கள். உழைப்பால் நேரும் உடல் சிரமத்தைத் தொழில்நுட்பம் குறைத்துள்ளது. அறிவியலால் உற்பத்தி பெருகியுள்ளது. தொழில் வளர்ந்துள்ளது. லட்சியம் என்ற நிலையில் இருந்த சுதந்திர உணர்வு மக்களின் சுபாவமாகவே மாறியுள்ளது. சமத்துவத்தைக் கருத்தளவிலாவது ஏற்றுக்கொண்டார்கள். அரசியல் அதிகாரம் பரவலாகியுள்ளது. இந்தச் சமூகப் போக்குகள் இன்னும் வலுப்பெறும். இவை குறித்து எனக்கு மகிழ்ச்சி.

தொழில்நுட்ப வளர்ச்சியில் பழைய கைத்திறமைகள் மறைந்தது இழப்பு. சாதாரணமான நூல் புடவையை, மரத்தாலான அகப்பைக் கூட்டைப் பார்த்தால் வெறும் கைகளும், பத்தாம்பசலிக் கருவிகளுமா இவற்றைப் படைத்தன என்று வியப்போம். பொருட்களில் இருந்த படைப்புத் தன்மையும், கைகளின் படைப்புத் திறனும், அவற்றை வியக்கும் ரசனையும் ஒருசேர மறைந்தன. கால மாற்றம் என்று தவிர்க்க இயலாதவையாக இவற்றை நியாயப்படுத்தலாம். ஆனால், நம் கருத்தும் கோட்பாடும் கால மாற்றத்தின் போக்கை நிர்ணயிக்க வல்லவை என்பதையும் மறக்கக் கூடாது.

உங்களுடைய அரசியல் பார்வை என்ன?

எனக்கு அரசியல் சிந்தனையில் ஆர்வம் உண்டு. கட்சி அரசியலில் ஈடுபாடில்லை.

பொதுவாக, திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் காங்கிரஸ் இயக்கத்தை இங்கே எப்படிப் பார்க்கிறீர்கள்?

திராவிடச் சிந்தனையைப்  பலர் இனவாதமாகச் சுருக்கிப் புரிந்துகொள்வதைப் பார்த்துள்ளேன். அப்படியல்ல. ஆனால், அது அரசியல் சிந்தனை மட்டுமல்ல என்பது பரவலானதாகத் தெரியவில்லை. இதைத் தெளிவுப்படுத்தவோ, திராவிடச் சிந்தனையை ஒரு மாற்றுச் சிந்தனை என்ற அளவில் வளர்த்து முழுமையாக்கவோ அதன் தலைவர்கள் முனைப்புக் காட்டுவதில்லை. பொதுவுடைமைக் கட்சிகள் ஐரோப்பியக் கருத்தாக்கங்கள் வழியே இங்குள்ள நிலைமையைப் புரிந்துகொள்ள முயல்கின்றன. அவற்றின் பெரிய பிரச்சினையே இதுதான். காங்கிரஸ் கட்சி மக்களைக் கைவிட்டுவிட்டது. எதிர்க் கட்சியாகும் வாய்ப்புள்ள காங்கிரஸ் தனக்கு அந்தப் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டது.

உங்களுக்கு முன்னோடி எழுத்தாளர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?

வ.ரா., ந.முத்துசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், பூமணி.

‘கரிசல்’ மண்ணுக்கு பூமணியின் ‘அஞ்ஞாடி’ போல் கீழத்தஞ்சைக்கு ஒரு பிரம்மாண்டமான நாவலை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

காவிரிப்படுகை அருமையான படைப்புகளுக்கான களம். அதைப் பற்றி கதை எழுத எனக்கு ஆசைதான். மிகவும் காலப் பிற்பாடாகிவிட்டது. சந்தேகம் கேட்பதற்குக்கூட பழையனவற்றைத் தெரிந்தவர்கள் அதிகம் இல்லை. செறிவான வரலாறு நிகழ்ந்த இடம். சிறியதாகவாவது ஒன்று எழுதுவேன்.

எழுத்துப் பணியில் அடுத்த திட்டம் ஏதும் இருக்கிறதா?

திட்டம் எதுவும் இல்லை. தோன்றியதை எழுதுவேன்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x