Published : 11 Jan 2019 06:35 PM
Last Updated : 11 Jan 2019 06:35 PM

புத்தகத் திருவிழா: மாயாஜாலங்கள் மட்டும் தான் குழந்தைகள் புத்தகமா?

 

 

இலக்கியவாதிகள், இடதுசாரிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள்  என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவாறு நாவல்கள், கதை, கவிதைகள், சமையல், கலைகள் என அவரவர் ஆர்வத்துக்குத் தீனிபோடுகிறது நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகத் திருவிழா.

 

இதில் குழந்தைகள் மிகவும் ஸ்பெஷல். கதைகளை விரும்பாத குழந்தைகளே இல்லை. அவர்களின் உலகமே கதையோடுதான் தொடங்குகிறது. எனில் சிறார்களுக்கு என்ன புத்தகங்கள் வாங்கலாம்?

 

குட்டி இளவரசன்- க்ரியா வெளியீடு

உலகப் புகழ்பெற்ற சிறுவர் நூல் இது. கோடிக்கணக்கானோரால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது. குழந்தைகளின் உலகுக்கே உரித்தான மாயாஜாலங்களையும் கற்பனைகளும் குட்டி இளவரசன் கொண்டிருப்பான்.

 

புத்தக பரிசுப் பெட்டி- புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு

பாரதி புத்தகாலயத்தின் அங்கமான புக்ஸ் ஃபார் சில்ரன், புத்தக பரிசுப் பெட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 15 தலைப்புகளில் 15 கதைகள், வண்ண வண்ணப் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறு புத்தகக் கொத்தாக வெளிவந்துள்ளது.

 

கானகத்து கீதங்கள் - நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

காடுகளின் மேன்மையும் அதில் வாழும் உயிர்களின் உன்னதத்தையும் சொல்லும் நூல். அவற்றை எளிமையாக விளக்கி இருப்பது சிறப்பு.

 

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - வானம் வெளியீடு

இன்றைய நவீன காலகட்டத்தில் பாலியல் வன்முறைகள் தவிர்க்கமுடியாத நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு. அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, உறுத்தாத வகையில் உபாயங்களைச் சொன்ன நூல்.

 

சாரி பெஸ்ட் ஃபிரெண்ட் - புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு

ஷாமா ஃப்யூட்டேஹல்லி, சாவித்ரி நாராயணன், கீதா ஹரிஹரன், ஹேமாங்கினி ராணடே போன்ற புகழ்பெற்ற ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. அ.குமரேசனின் மொழிபெயர்ப்பு, கதையுடன் நம்மை ஒன்றவைக்கிறது.

 

என்ன புத்தகம் வாங்கலாம் என்பது சரி, எப்படிப் புத்தங்களை வாங்கவேண்டும்?- சிறார் எழுத்தாளர் விழியனிடம் பேசினேன்.

 

’’முதலில் பெற்றோர், தங்களின் குழந்தைகளைப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். போனவுடனே புத்தகங்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து அரங்குகளையும் முழுமையாகச் சுற்றிப்பார்த்து விட்டு, குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களை குறித்துக் கொள்ளச் சொல்லலாம்.

 

அதில் குழந்தைகளே புத்தகத்தின் பேர், விலையைக் குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டைக் கொடுத்து, அதற்குள்ளாகப் புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொல்ல வேண்டும். புத்தகங்களை, முழுக்க குழந்தைகளின் தேர்வுக்கே விட்டுவிட வேண்டும். அதில் பெற்றோரின் 20 சதவீத தலையீடு இருக்கலாம்.

ஏனெனில், குழந்தைகளின் தேர்வில் தலையிட்டால், வாசிப்பில் அவர்களுக்கு ஈடுபாடு மறையலாம், குறையலாம். புத்தகத்தின் அட்டையோ, படங்களோ, எழுத்து வடிவமோ அவர்களுக்குப் பிடித்திருக்கலாம். அதனால் அவர்களின் விருப்பத்துக்கு விட்டுவிடுவது நல்லது. அதுவே அவர்களின் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும்’’ என்றார் விழியன்.

 

புத்தகங்கள் தவிர்த்து...

புத்தகத் திருவிழா அரங்கில், புத்தகங்கள் தவிர்த்து குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் ஏராளமான பொருட்கள் காணக் கிடைக்கின்றன. அழித்து அழித்து மீண்டும் எழுத முடிகிற நோட்டுப் புத்தகங்கள், தண்ணீரைக் கொண்டே வண்ணம் தீட்டும் மேஜிக் பெயிண்டிங் புத்தகம், ஹெலிகாப்டர் பலூன்கள், பொம்மைகள் உள்ளிட்டவை புத்தகத் திருவிழாவை அலங்கரிக்கின்றன.

 

நம் குழந்தைகள் விளையாடுகிறார்களோ, இல்லையோ விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறோம். அதேபோல புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்து வாசிக்கப் பழக்கலாமே!

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x