Published : 14 Jan 2019 09:28 am

Updated : 14 Jan 2019 09:28 am

 

Published : 14 Jan 2019 09:28 AM
Last Updated : 14 Jan 2019 09:28 AM

லத்தீன் அமெரிக்காவை வாசித்ததால்தான் எழுதுகிறேன் மொழிபெயர்க்கிறேன்!- அமரந்த்தா பேட்டி

தமிழ் இலக்கியச் சூழலில் 1980-90-களில் நிகழ்ந்த லத்தீன் அமெரிக்க அலையில் அமரந்த்தாவின் பங்களிப்பு மிகப் பெரியது. அமரந்த்தா மொழிபெயர்த்த மொத்த சிறுகதைகளின் தொகுப்பு ‘சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்’ என்ற தலைப்பில் ‘காலக்குறி’ பதிப்பக வெளியீடாக மிகச் சிறந்த தயாரிப்பில் வெளிவந்துள்ளது. கூகி வா தியாங்கோவின் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’, மார்த்தா த்ராபாவின் ‘நிழல்களின் உரையாடல்’ உள்ளிட்ட முக்கியமான நாவல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். சுற்றுச்சூழல், பெண்ணியம், கியூபப் புரட்சி என இவரது சமூகம் சார்ந்த அக்கறைகள் ஏராளம். ஆரவாரமின்றி தொடர்ந்து அக்கறையோடு செயல்படும் அமரந்த்தாவோடு உரையாடியதிலிருந்து...

மொழிபெயர்ப்புக்குள் எப்படி வருகிறீர்கள்? லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் பக்கம் உங்கள் கவனம் குவிந்ததன் காரணம் என்ன?


‘கணையாழி’யில் ஒரு குறுநாவல் எழுதினேன். அப்படித்தான் அறிமுகமானேன். 1982-ல் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் நோபல் பரிசு பெற்றபோது அவரது சிறுகதைகளை வாசித்தேன். அவரது எழுத்து பாணியால் கவரப்பட்டு மொழிபெயர்க்கத் தொடங்கினேன். லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் வேறெங்கும் நான் வாசித்திராத புனைவு பாணி, வரலாற்றுத் தொடர்ச்சியாக இலக்கியம், தொன்மங்களையும் இலக்கியத்தையும் இணைக்கும் சங்கேத விவரிப்பு, கவித்துவமான கதை மொழி எனப் பல சிறப்புகள் உள்ளன. அசலான உணர்வுகளையும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தும் நனவோடை, வாக்குமூலம் போன்ற இலக்கிய வகைகள் என்னை ஈர்த்தன. லத்தீன் அமெரிக்காவை வாசித்ததால்தான் எழுதுகிறேன், மொழிபெயர்க்கிறேன்.

உங்களது மொழிபெயர்ப்பு பாணி என்ன?

மொழிபெயர்ப்பில் சொல் பயன்பாட்டையும் வாக்கிய அமைப்பையும் இலக்கிய வகைக் கேற்ப மாற்றிக் கொள்வேன். கூடுமானவரை ‘இது ஒரு மொழிபெயர்ப்பு’ என்ற நெருடல் இல்லாதவாறு பார்த்துக்கொள்வேன்.

லத்தீன் அமெரிக்கப் படைப்புகள் தமிழ் இலக்கியச் சூழலில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியதாக நினைக்கிறீர்கள்?

1990-கள் முதலாகத் தமிழ் எழுத்தாளர்களின் புனைவுகளில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தாக்கம் உள்ளது. வரலாறு, தொன்மம், சமூகத்தின் பொருளாதார-பண்பாட்டு நிலை, எழுத்தாளரின் அரசியல்/பண்பாட்டுச் சார்பு எனப் பல செய்திகளை ஒரு லத்தீன் அமெரிக்க சிறுகதை சூசகமாகத் தெரிவிப்பதை வாசகர்கள் உணர முடியும். இந்தப் புதுவரவால் கிடைத்த புத்துணர்ச்சி, அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் நிலவிய இறுகிய, தேங்கிய நிலைமை மாறி புது வீச்சில் படைப்புகள் உருவாகக் காரணமாயிற்று.

நேரடியாக அரசியலைக் கையாள முடியாத சூழலில்தான் அங்கே ‘மாய யதார்த்தம்’ போன்ற வகைமைகள் உருவாகின. ஆனால், லத்தீன் அமெரிக்கப் படைப்புகளால் தாக்கம் பெற்ற நாம் வடிவத்தை மட்டும் சுவீகரித்துக்கொண்டு உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தவில்லை எனத் தோன்றுகிறது...

அதற்கொரு வரலாறு இருக்கிறது. வெனிசுவேலாவில் பிறந்து, வெறும் 47 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த சைமன் பொலிவார், ஸ்பானிய காலனீய ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்க, லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் தான் பற்றவைத்த விடுதலை நெருப்பை சூறாவளிபோல விசிறியும் விட்டார். எந்நேரமும் தென் அமெரிக்க கண்டத்தை (லத்தீன் அமெரிக்கா) விழுங்கக் காத்திருக்கும் வடக்கே உள்ள பூதத்தை (வட அமெரிக்கா) எதிர்த்து வெல்ல பலம் வாய்ந்த ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்கா உருவாக வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். தனது சிறிய கொரில்லா படையைக் கொண்டே ஆறு நாடுகளை விடுவித்து, அடிமை முறையை ஒழித்து, குடியரசுகளாக நிறுவினார்.

பொலிவார் மறைந்த 1830-ல் தான் பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், நாடு கடத்தப்பட்டவர்கள், உயர் கல்விக்காக பாரீஸ் வந்தவர்கள் எனப் பலதரப்பட்ட படைப்பாளிகள் பாரீஸில் சந்தித்தனர். அஸ்டெக், மயன், இன்கா, குவாரனி போன்ற இனங்களின் பாரம்பரிய கலை வடிவங்கள், பைபிள் இலக்கியங்கள், இந்தோ-ஐரோப்பிய மரபிணைவு ஆகியவற்றை உள்ளடக்கிய வாய்மொழி மரபின் தொடர்ச்சியாக உருவான லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் உலகத்தரத்தை எட்டியிருந்தும், அவை காலனீய ஒடுக்குமுறை யதார்த்தத்தை வெளிப்படுத்த இயலாமல் செய்தது கத்தோலிக்க மதபோதனையே என்பதை இவர்களது விவாதம் தெளிவுபடுத்துகிறது.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் அரசியல் அக்கறைகளைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகமாக இலக்கியம் மாற்றமடைந்ததே 19-ம் நூற்றாண்டில் பல இலக்கியப் பத்திரிகைகள் தோன்றக் காரணமாயிற்று. காலனீயக் கடந்தகாலத்தைக் காட்சிப்படுத்தும் பழங்குடியினரின் கதைகள், அற்புதங்கள் மீதான மரபான நம்பிக்கைகள், இனச் சண்டைகள் ஆகியவையே அரசியல் இயக்கங்களைச் சார்ந்த அறிவுஜீவிகளின் எழுத்தில் ‘மாய யதார்த்தம்’ என்ற வகை தோன்றக் காரணமாயின. காலனீய மரபிலிருந்து நவீன தேசியப் பண்பாட்டு அடையாளம் கொண்டதாக மாற்றமடைந்த லத்தீன் அமெரிக்க எழுத்தின் ஒரு கூறுதான் ‘மாய யதார்த்தம்’. ஆக, விஷயம் இதுதான் - பானை வனைய யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். மண்ணை நன்றாகப் பிசைந்தால்தானே பானை வரும்?

கூகி வா தியாங்கோவின் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவல், தீவிரமான ஒரு சிறிய வட்டத்துக்குள் கவனம் பெற்றது. இந்நாவல் பொது வாசக கவனம் பெற வேண்டிய தேவை இருக்கிறதல்லவா?

ஆமாம், இருக்கிறது. உலகமயம், பன்னாட்டு நிதி மூலதனம், சந்தைப் பொருளாதாரம், தேசிய முதலாளியம் ஆகியவற்றை அனைவரும் அறிய எளிமையாக நகைச்சுவையோடு கூகி எழுதியுள்ளார். அதில் ஒரு நாடகார்த்தமான காதல் கதையும், மோட்டார் வாகனம் பற்றிய வகுப்பும், ஒரு மர்மக் கொலையும், தமிழ் சினிமா போன்ற முடிவும், வயிறு குலுங்கிச் சிரிக்கவைக்கும் நடையும் உள்ளன.

‘நிழல்களின் உரையாடல்’ நாவலை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் கொண்டுவந்திருக்கிறீர்கள். இந்தக் காலக்கட்டத்துக்கு இந்த நாவல் எவ்வளவு பொருத்தப்பாட்டோடு இருக்கிறது?

எண்பதுகளில் கமுக்கமாக வெளியிடப்பட்ட, எதேச்சையாகக் கிடைத்த நூல் அது. 1983-ல் கொழும்பு வெளிக்கடை சிறைப் படுகொலைகளும், 1987-ல் ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களும், இவற்றின் விளைவாகக் கூட்டங்கூட்டமாகப் படுகொலைசெய்யப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட, பாலியல் வன்கொடுமைகளால் சின்னாபின்னப்பட்ட எண்ணற்ற இளைஞர்களின் கதைகளும் காதில் விழுந்தன. சொல்லொணா வேதனையளித்தன. அங்கு என்ன நடந்திருக்கும் என்று புரியவைப்பதுபோல ‘நிழல்களின் உரையாடல்’ நாவல் இரு பெண்களின் வாக்குமூலமும், நிகழ்வுகளைப் பின்னி கதையை முன்னகர்த்தும் ஒரு மூன்றாவது சரடும் கொண்டது. Trilogy (மூன்று கதைகளின் பின்னல்) என்ற முற்றிலும் புதிய பாணி. உணர்வுகளின் எழுத்து வடிவம், கோரமான காட்சிகளின் எழுத்தோவியம். மொழிபெயர்ப்பாளருக்கு அது ஒரு சவால். ஈழப்போரின் ரத்தம் தோய்ந்த சாட்சியங்களாகப் பல நூல்கள் எழுதப்படும் என்ற நம்பிக்கையோடுதான் இப்போது அதன் மறுபதிப்பைக் கொண்டுவந்திருக்கிறோம்.

சமீப காலங்களில் இங்கே நடந்த போராட்டங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன்/மீத்தேன் திட்ட எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆகியவை வீரியமான, தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள். இந்த அறப்போராட்டங்களில் பங்கேற்ற மக்களை அரசின் நடவடிக்கைகள் ஆறாத்துயரில் தள்ளியது கொடுமை. இவை அனைத்துமே தமிழ் இனத்தின் உரிமைகளை, வளங்களைக் காப்பதற்கான போராட்டங்கள். அரசு அடக்குமுறையை மீறி மக்களின் போராட்டங்கள் தொடரும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பது தவிர வேறெந்த உரிமைகளுமற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்க, சுரண்டலை எதிர்க்க, தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பதிப்புரிமைச் சிக்கல்களுக்குள் சே குவேராவும் சிக்கிக்கொண்டிருக்கிறாரே?

சே குவேரா என்ற சர்வதேசியவாதி, புதிய பன்னாட்டு வர்த்தக நியதிக்கேற்ப வியாபார சரக்காக மாற்றப்பட்டது வரலாற்று முரண்நகை. ஆனால், சிற்பியின் உளிதான் சிலை வடிக்கும்.

உங்களது கனவு இந்தியா எப்படிப்பட்டது?

தமிழ்நாட்டையே முழுமையாக நான் பார்த்ததில்லை. என் கனவில் இந்தியா எப்படி வரும்? ஆனால், என் கனவில் செந்தமிழ் நாடு வருவதுண்டு. அதில் ஆர்ப்பரித்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் குறுக்குத்துறையில் மக்கள் ஆனந்தமாய்க் குளிக்கிறார்கள்; ரசாயனங்களைக் கொண்டு மண்ணையும் நீர் ஆதாரங்களையும் நஞ்சாக்கிய பசுமைப் புரட்சியை நிராகரித்துவிட்டு, பொருளியல் அறிஞர்

ஜே.சி.குமரப்பாவின் வழிகாட்டலில் தமிழகத்து கிராமங்களில் விவசாயமும் தொழில்களும் ஓங்கி செல்வம் கொழிக்கிறது; வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கூற்றுப்படி இயற்கை உரங்களால் உணவு உற்பத்தி உயருகிறது; தேர்தல்கள் க்யூப மாதிரியில் நடைபெற்று கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உணவு ஆகியவை அடிப்படை உரிமைகளாக அரசால் மக்களுக்கு அளிக்கப்படுகின்றன; அனைத்துத் துறை பாடங்களையும் தமிழ் மொழியில் கற்று இளைய தலைமுறை அறிவில் செம்மாந்திருக்கிறது; அரசவைக்கவி முத்துப் பழனியைப் போல பெண்கள் யாவரும் பல்துறை வித்தகர்களாய் மதிப்புமிக்க குடிமக்களாய் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்; நறுமண மலர்ச் சோலையில், நல்ல நிலாவினில், நன்னீர்க் கேணியில் தென்னங்கீற்று நிழல் அசைந்தாட ‘காற்று வெளியிடை கண்ணம்மா...’ என்று பாரதி ராகத்தோடு பாடுகிறார்!Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x