Published : 12 Jan 2019 09:08 am

Updated : 12 Jan 2019 09:08 am

 

Published : 12 Jan 2019 09:08 AM
Last Updated : 12 Jan 2019 09:08 AM

4 எழுத்தாளர்கள்.. 6 கேள்விகள்.. கவித்துவமான பதில்கள்!

4-6

புத்தகங்களைப் பதிப்பிப்பது மிக எளிதாக மாறிவிட்ட சூழலில், பெருந்திரளான கூட்டத்தில் தொலைந்துபோய்விடாமல் தமது தனித்துவமான அணுகுமுறையால் பரவலான கவனம் பெற்ற இளம் படைப்பாளிகளில் தூயன், சுனில் கிருஷ்ணன், பெரு.விஷ்ணுகுமார், அனோஜன் பாலகிருஷ்ணன் நால்வரும் குறிப்பிடத்தக்கவர்கள். தூயனின் ‘இருமுனை’, சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப்படுக்கை’, பெரு.விஷ்ணுகுமாரின் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’, அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ என ஒரே ஒரு தொகுப்பின் மூலமாகவே இலக்கியவுலகின் பார்வையைத் தங்கள் பக்கம் திருப்பியவர்கள். நால்வரோடும் ஒரு ஜாலியான பேட்டி...

உங்கள் புத்தகம் குறித்து அதன் உள்ளடக்கம், கதைச் சுருக்கம் சொல்லாமல் அறிமுகப்படுத்துங்கள்...


தூயன்: காமம், தொன்மக்கதை, உருமாற்றம், கோழைகள்.

சுனில் கிருஷ்ணன்: மரணத்தின் அபத்தம், மரணமின்மையின் கனவு, எல்லா சுவரிலும் விசையுடன் முட்டி மோதி அலைந்து அமைவது, அதிகாரம் மற்றும் அதன் நுண்ணிய வடிவங்கள்.

பெரு.விஷ்ணுகுமார்: தூக்குதண்டனை நிறைவேற்றும் முன்பு கவிஞன் உச்சரிக்க நினைத்த சொற்கள் அனைத்தும் நாக்கு தள்ளிய சமயத்தில் சொட்டுச் சொட்டாக ஒலிக்கின்றன. அவை கச்சிதமான கவிதையா என்பதை அறியேன். ஆனால், நிச்சயம் வெற்று உளறலல்ல.

அனோஜன் பாலகிருஷ்ணன்: மானுடத்தின் அறவீழ்ச்சி, வன்முறை எச்சங்களின் தொடர்ச்சி, மானுட மேன்மையில் உறைந்திருக்கும் பொய்மை என்பவற்றைத் துழாவிப்பார்க்கும் கதைகள். காமத்தைத் தாண்டி உடல் இச்சைகளை மீறிய அன்பு, அன்பின்மை அல்லது அன்புக்கான ஏக்கம் போன்றவற்றை உசாவிச் செல்கின்றன. இன, மொழிக்குப் பின் தோன்றும் லட்சியவாதங்கள் மானுட அறத்தைக் கலைத்துச்செல்லும் பிளவுகளை விரித்துப்பார்க்கவும் விரும்புகின்றன.

வாசகர்களும் விமர்சகர்களும் உங்கள் புத்தகத்தை எத்தகைய வார்த்தைகளால் தூற்றுகிறார்கள்?

தூயன்: யாரும் இன்னும் துாற்றவில்லையென்பதே படைப்பின் மீதான விமர்சனம்தான். கதாபாத்திரத்தைச் சாகடிப்பவர் என்று சிலர் சொல்வதுண்டு. ‘கில் யுவர் ஃபாதர்ஸ்’ என்பதை ஏற்கிறேன்.

சுனில் கிருஷ்ணன்: விமர்சனங்களைத் தூற்றுதல்களாகக் காண வேண்டியதில்லை. ‘மரபானவன்’ எனும் பார்வை அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. ‘புதிதாக ஏதுமில்லை’, ‘அப்படி என்ன இருக்கிறது’, ‘ஜெயமோகன் பள்ளி’, ‘அறிவியல் விரோதி’ - அதிகமாக இல்லையென்றாலும் அவ்வப்போது கேட்ட சொற்கள் இவை.

பெரு.விஷ்ணுகுமார்: தனித்தனி கற்பனை எறும்புகளால் உண்டானது ழ என்னும் பாதை. வாசகர்கள் சிலர் எறும்புகளின் உருவம், நிறம் மற்றும் அதன் வாசனை பிடிக்கவில்லையென்றும், விமர்சகர்கள் சிலர் அவை பாதி தூரத்திலேயே இறந்துவிட வேண்டுமெனவும் சாபமிடுகின்றனர்.

அனோஜன் பாலகிருஷ்ணன்: தமிழினத் துரோகியின் புத்தகம் என்கிறார்கள். இன்னும் உரக்க உன்னை ஈழத் தமிழனாக சேர்த்துக்க முடியாது என்பதோடு காமத்தை எழுதும் ஆணாதிக்கத் தடித்தன எழுத்தாளர் என்று சில வசைச்சொற்களையும் சேர்க்கிறார்கள்.

ஒரு காத்திரமான விமர்சகராக உருமாறி உங்கள் புத்தகத்தை நீங்களே விமர்சித்துக்கொள்ளுங்கள்.

தூயன்: நான்கு பக்கத்துக்குக் கொடுக்கலாம். எழுதிய கதைகளையே எழுதுகிறாயே சலிக்கவில்லையா? இன்னும் சொல்லப்படாதது எவ்வளவோ இருக்கிறது. முதலில் நிறைய வாசியுங்கள்.

சுனில் கிருஷ்ணன்: இவருடைய கதைகளில் புற உலகச் சித்தரிப்புகள் குறைவாக உள்ளன. சிறுகதைக்கென்று உள்ள இலக்கணங்களைப் பொருட்படுத்துவதில்லை. அதைவிட, இவர் கதை எழுதுவது இருக்கட்டும், முதலில் ஒற்றுப்பிழை இல்லாமல் தமிழ் எழுதச் சொல்லுங்கள்.

பெரு.விஷ்ணுகுமார்: அன்பு பெரு.விஷ்ணுகுமார், காலத்தை இடம் நகர்த்துவதற்கு அதன் மையத்தைக் கற்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கடிகாரத்தின் வரலாறாவது அறிந்திருக்க வேண்டும். மேலும், இதுபோல் விமர்சனம் செய்கையில் காது கேளாமை போன்ற குறைபாடுகளைத் தவிர்த்திடுங்கள்.

அனோஜன் பாலகிருஷ்ணன்: சம்பவங்கள் ஊடாக ஒரே மாதிரியான பாணியில் கதைகள் சொல்லப்படுகின்றன, சொல்லப்பட்ட சிலவற்றை சிறிய கோணத்தில் மீண்டும் மாற்றி மாற்றிக் கலைத்து எழுதுவதில் இருக்கும் இடர்பாடுகளைக் கடக்க வேண்டும்.

உங்களது முதல் புத்தகம் உருவாகிக்கொண்டிருந்தபோது இது தொடர்பாக உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை முற்றுபெறாத வாக்கியங்களால் சொல்லுங்கள்.

தூயன்: காதல், பயணம், ஏமாற்றியது, ஏமாந்தது, வயலின், ஓட்டப்பயிற்சி.

சுனில் கிருஷ்ணன்: திருமணம், பிள்ளைப்பேறு, காந்தி வாசிப்பு, அயர்ச்சி, அச்சம், பொருளின்மை, தீவிர வாசிப்பு, மீட்சி, நட்பு, அன்பு, ஜெயமோகன், பதாகை, தயக்கம், துணிவு, யாவரும், ஜீவ கரிகாலன்.

பெரு.விஷ்ணுகுமார்: சப்தமாக வைக்கப்பட்ட சாவிகள், அடித்தல் திருத்தலுமான காதல் கடிதங்கள், அடிக்கடி அறுந்துபோய்விடும் செருப்புகள், குமிழ் முளைத்த சண்முகாநதி, தேர்வறையில் பகிர்ந்துகொண்ட மறைவுத்தாள்கள், அரசியல் அச்சலாத்திகள் மற்றும் தேவையற்ற விடுமுறைகள், சித்தன்னவாசலின் கூன்விழுந்த மலைகள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நண்பனின் தற்கொலை.

அனோஜன் பாலகிருஷ்ணன்: இடங்கள் மாறிக்கொண்டே இருந்தமை, நிலையாக எங்கே வசிக்கப்போகிறேன் என்பதில் நிலையின்மை, ஐரோப்பாவுக்குள் நுழையும் சந்தர்ப்பம், இதுவரை நெருக்கமாக இருந்த நண்பர்கள் காரணமின்றி வன்மச் சுழலுக்குள் வீழ்ந்து புண்படுத்தத் தனிமை, புதிய நண்பர்களின் நெருக்கம்.

எப்படி என விளக்காமலும், பிற எழுத்தாளர்களின் அல்லது புத்தகங்களின் பெயர்களைச் சொல்லாமலும் உங்கள் எழுத்தில் நிகழ்ந்த தாக்கங்கள் குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்...

தூயன்: அந்தியைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு தெரிவை, தடதடவென ஓடும் ரயில், கல்லறைகள், நாட்டுபுறப் பாடல்கள், எரியாத குப்பை, தொலைந்தவை.

சுனில் கிருஷ்ணன்: நரோபாவும் அஜிதனும் காலாதீதத்தின் ருசியைக் காட்டினார்கள் என்றால் செகந்திராபாத் சந்திரசேகரன் அன்றாடத்திலிருந்து துழாவி வாழ்வுக்குப் பொருள் தேடும் அயர்ச்சியை உணர்த்தினார். பிறகு, பொக்கைவாய்த் தாத்தா, “எந்நிலையிலும் மனிதர்களின் மீது நம்பிக்கை இழக்காதே” என்று சொல்லித் திரும்பியதும் சுடப்பட்டார்.

பெரு.விஷ்ணுகுமார்: ஒருமுறை அபத்தமாக, மலையேறிக்கொண்டிருந்த ஒரு நூதனக் கிறுக்கன் காலி குளிர்பானப் புட்டிக்குப் பதிலாகக் கையிலிருந்த குழந்தையை வீசிவிட்டான். பிறகு, அந்தக் குழந்தை தரையில் விழுவதற்கு முன்பாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி உடைக்கப்படாத புது குளிர்பானப் புட்டியாகப் பிறப்பெடுக்க நேர்ந்தது.

அனோஜன் பாலகிருஷ்ணன்: தெருக்களைக் கடக்க நேரும்போது எதிர்ப்பட்ட சடலங்கள் அகத்தை உடைத்தன. இறப்பு, பிறப்பு அதன் சூச்சுமங்களைத் தொட்டு, ‘இதாண்டே வாழ்க்கை.. இம்புட்டுதான்’ என்று காட்டினார்கள் ஆசான்கள். ‘உண்மையாக அவ்வளவுதானா?’ என்று என் கைகளை அதன் தொடர்ச்சியாக உள்ளேவிட்டுப் பார்த்தேன். குளிர்ந்தது. விசைப்பலகையில் தொடும் என் விரல்களில் இன்னும் குளிர்விட்டுப் போகவில்லை.

எழுத்தாளர்கள் பணம் சம்பாதிப்பதற்காக வேறு வேலை எதுவும் பார்க்கக் கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டால் என்ன செய்வீர்கள்?

தூயன்: வேறுவழியேயில்லை சம்பாதிப்பதுபோல் எழுத வேண்டியதுதான்.

சுனில் கிருஷ்ணன்: மனைவி காப்பாற்றுவார். வேறுவழியில்லை என்றால், சட்டத்தை மீற வேண்டியதுதான். ஒருவேளை அதற்காகச் சிறை சென்றால் சோறும் தங்குமிடமும் சும்மா கிடைக்குமே. அதைவிட எழுத பாதுகாப்பான இடம் வேறு உண்டா என்ன?

பெரு.விஷ்ணுகுமார்: சட்டத்துக்குப் புறம்பாக சம்பாதித்துக்கொண்டிருப்பேன்.

அனோஜன் பாலகிருஷ்ணன்: இன்னும் சுதந்திரமாக அமர்ந்து எழுதுவேன். ஐரோப்பா அதற்காக ஆசிர்வதிக்கப்பட்டது.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.inSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x