Published : 22 Dec 2018 09:52 AM
Last Updated : 22 Dec 2018 09:52 AM

ராஜ் கௌதமனுக்கு அங்கீகாரம்

நவீனத் தமிழ் இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்த படைப்பாளுமைகளைக் கௌரவிக்கும் விதமாக 2010 முதல் விருது வழங்கிவருகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். தமிழகத்தின் முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான ராஜ் கௌதமனுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படவுள்ளது. நாளை (டிசம்பர் 23) மாலை 6 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள ராஜஸ்தானி சங் அரங்கத்தில் விழா நடைபெறுகிறது.

சமத்துவ ஆசிரியர் விருது

வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் ‘நிகரி’ எனும் விருதளித்து கௌரவித்துவருகிறது. விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி ஆசிரியர் இரா.மோகனசுந்தரம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைப் பேராசிரியர் சு.இராசவேலு இருவரும் இந்த ஆண்டுக்கான விருது பெற்றிருக்கிறார்கள்.

வாசகசாலையின் முப்பெரும் விழா

வாசகசாலையின் 5-ம் ஆண்டு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கிய விருதுகள் வழங்கும் விழா என இன்று மாலை 3 மணிக்கு சென்னை தி.நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நடக்கிறது. வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கிய விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ‘வில்லா 21’ சிறுகதைத் தொகுப்புக்காக கணேசகுமாரன், ‘நொதுமலர்க் கன்னி’ கவிதைத் தொகுப்புக்காக மௌனன் யாத்ரீகா, ‘உங்கள் மனிதம் ஜாதியற்றதா?’ கட்டுரைத் தொகுப்புக்காக ஜெயராணி, ‘கடவுளின் பறவைகள்’ மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்காக பாலகுமார் விஜயராமன், ‘இரும்புக் குதிகால்’ மொழிபெயர்ப்பு நாவலுக்காக அ.சி.விஜயதரன், ‘பூனைக்கதை’ நாவலுக்காக பா.ராகவன், ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறார் இலக்கியத்துக்காக யெஸ்.பாலபாரதி, ‘மூப்பர்’ நாவலுக்காக ஜெயன் மைக்கேல் ஆகியோர் விருது பெறுகிறார்கள்.

செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, புதுச்சேரியில் புத்தகக்காட்சிகள்

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் நடத்தும் 3-வது புத்தகக்காட்சி செங்கல்பட்டிலுள்ள கிருஷ்ண மஹாலில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை நடக்கிறது.

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விதைகள் அமைப்பு நடத்தும் புத்தகக்காட்சி கிருஷ்ணகிரியிலுள்ள எஸ்விவி திருமண மண்டபத்தில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை நடக்கிறது.

 புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தக சங்கம் நடத்தும் 22-வது புத்தகக்காட்சி புதுச்சேரியிலுள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் டிசம்பர் 21-30 வரை நடக்கிறது.

அ.வெண்ணிலாவின் முதல் நாவல்

கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல்வேறு வடிவங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் வெண்ணிலா, இப்போது நாவல் உலகிலும் அடியெடுத்துவைத்திருக்கிறார். பிற்காலச் சோழ அரசர்களில் பெரும் வெற்றிகளைக் குவித்த ராஜேந்திர சோழன் பற்றிய 500 பக்க நாவலான ‘கங்காபுரம்’, டிசம்பர் 28 அன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நீதிபதி

ஆர்.மகாதேவன் வெளியிடுகிறார்.

தொகுப்பு: மானா பாஸ்கரன்,  ரா.பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x