Published : 02 Dec 2018 11:28 am

Updated : 02 Dec 2018 11:29 am

 

Published : 02 Dec 2018 11:28 AM
Last Updated : 02 Dec 2018 11:29 AM

திருப்பூரில் இன்று பழைய முதலாளிகளும் இல்லை பழைய தொழிலாளிகளும் இல்லை பழைய திருப்பூரும் இல்லை! -  எம்.கோபாலகிருஷ்ணன் பேட்டி

சூத்ரதாரி என்ற புனைபெயரோடு எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் எம்.கோபாலகிருஷ்ணன். பள்ளிப் பருவத்தின் இறுதி நாளன்று தங்கள் எதிர்காலம் குறித்த திட்டத்தோடு விடைபெறும் ஐந்து ஆண்களின் வாழ்க்கையைத் திருப்பூரின் பொருளாதார வளர்ச்சி எப்படித் தீர்மானிக்கிறது என்பதைச் சொல்லும் ‘மணல் கடிகை’ நாவல் இவரது முக்கியமான ஆக்கம்.

வெவ்வேறு சமூகப் பின்னணிகள் கொண்ட ஆறு மணமான பெண்களின் உறவுச் சிக்கல்களைப் பேசும் ‘மனைமாட்சி’ நாவலுக்கு ‘பேசும் புதிய சக்தி’ இதழ் வழங்கும் சிறந்த நாவலுக்கான தஞ்சை ப்ரகாஷ் விருது (2018) அறிவிக்கப்பட்டிருக்கிறது. கதேயின் ‘காதலின் துயரம்’, நிர்மல் வர்மாவின் ‘சிவப்புத் தகரக் கூரை’ என எம்.கோபாலகிருஷ்ணனின் இரண்டு மொழிபெயர்ப்புகளும் மெச்சத்தக்கவை.


உங்கள் புத்தக அலமாரியின் முதல் வரிசையில் இப்போது யார் இருக்கிறார்?

தஸ்தாயேவ்ஸ்கி! மனித அகத்தின் ஊடுபாவுகளை, சிடுக்குகளை, முரண்களை, மோதல்களை அங்குல அங்குலமாகத் தொட்டுச் சொன்ன கலைஞன். ‘கரமசோவ் சகோதரர்கள்’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ தருகிற அனுபவம் வாசகனாக மிகுந்த உணர்வெழுச்சியைத் தரவல்லது. எழுத்தாளனாக நாம் முயல வேண்டிய இலக்குகளைத் தொடர்ந்து சுட்டியபடியே இருப்பவை அவரது எழுத்துகள்.

புறவுலகின் சித்திரங்களை முற்றாகப் பின்னகர்த்தி மனித உணர்வுகளின் நிறபேதங்களை மட்டும் விசாலப்படுத்தும் அவரது எழுத்துத்திறன் வியப்பைத்தருவது. தமிழில் திரும்பத் திரும்ப வாசிப்பது அழகிரிசாமியையும் ஜானகிராமனையும்.

நீங்கள் நான்கு மொழிகளில் புலமைபெற்றிருக்கிறீர்கள். பிற மொழியறிவு உங்கள் படைப்பு மொழிக்கு எத்தகைய வலுசேர்த்திருக்கிறது?

பிறமொழி அறிவு தமிழை மேலும் செழுமைப்படுத்த உதவுகிறது. சொல்வளத்தைப் பெருக்குகிறது. குறிப்பிட்ட ஒரு பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைத் தேடும்போது ஏற்கெனவே நாம் அறிந்த ஒரு சொல்லைத் தவிர, இதுவரையிலும் நாம் பயன்படுத்தாத சொற்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மொழியில் கச்சிதம் கூடுகிறது. மிகச் சரியான, பொருத்தமான சொல்லை இட வேண்டும் என்கிற முனைப்பையும் அக்கறையையும் உண்டாக்குகிறது. தவிர, வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அதனுடனான கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதுதான். புனைவெழுத்தாளனுக்கு இது மிக அவசியமானது.

கதேயின் ‘காதலின் துயரம்’ நாவலை ஆங்கிலத்தைவிட உங்கள் மொழிபெயர்ப்பில் தமிழில் வாசிப்பது அலாதியானது. அந்த மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்...

விக்டர் லாங்க் தொகுத்து ‘தி மாடர்ன் லைப்ரரி’ பதிப்பித்த மிகச் சிறந்த ஜெர்மன் குறுநாவல்கள் புத்தகத்தை தமிழினி வசந்தகுமார் என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதிலுள்ள முதல் குறுநாவல் கதேயின் ‘இளம் வெர்தரின் துயரங்கள்’. அதை வாசித்தவுடன் தமிழில் இதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. கதே திட்டமிட்டு தன்னை உலக மகாகவியாக மாற்றிக்கொண்ட பெரும் மேதை.

பன்முக ஆளுமைமிக்க கலைஞன். தன்னுடைய 24-ம் வயதில் கதே எழுதிய இந்தக் குறுநாவல், 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய இலக்கியத்தைப் பெரிதும் பாதித்தது. காதலின் பித்தும் உணர்வெழுச்சியும் துயரமும் கலந்த இதன் கவித்துவமான சொல்முறையை அதே உக்கிரத்துடன் தமிழில் மொழிபெயர்ப்பது பெரும் சவாலாயிருந்தது.

கணினி வசதியில்லாத அந்தச் சமயத்தில் நான்கு முறை இதைத் திருத்தி எழுதினேன். இப்போதும்கூட இந்த மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு அழைத்துப் பேசுகிறார்கள். எனக்கு உளமார்ந்த நிறைவைத் தந்த மொழியாக்கம் இது.

உங்கள் அனுபவத்தில் சிறுகதை, நாவல் என்ற இரண்டு வடிவங்களும் எப்படியான உழைப்பைக் கோரியிருக்கின்றன?

ஒப்பீட்டளவில் சிறுகதை அவஸ்தையான வடிவம். ஒரு சிறுகதை, திருத்தமான கோலம்போல அதற்கேயான கச்சிதத்துடன் அமைவது அவசியம். வடிவ ஒழுங்கும் சொல்நேர்த்தியும் வாசிப்பு அமைதியும் ஒருங்கே அமைய வேண்டும். கயிற்றின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடியின் நிதானமும் நிபுணத்துவமும் சிறுகதையாளனுக்கு முக்கியம். நாவல் சற்று சுதந்திரமானது. எழுதுபவனுக்கு சௌகரியங்களைத் தரும் வடிவம். அதற்காக அதைக் கோணிப்பை என்று சொல்லிவிட முடியாது.

நாவல் தன் மையத்துக்கு ஒவ்வாத எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. அது தான் பேசவந்த பொருளைத் தெளிவுறவும் விரிவாகவும் ஆழமாகவும் எழுத அனுமதிக்கிறது. எல்லாத் தரப்புகளுக்கும் மோதல்களுக்கும் இடமளிக்கிறது. சிறுகதையாளனுக்கு முன்னால் வடிவத்திலும் சொல்முறையிலும் சாதித்தவர்களின் நீண்ட பெரும் வரிசை உண்டு. அவர்கள் செய்யாத ஒன்றை எட்டிப் பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டும்.

நாவலாசிரியனுக்கு இத்தகைய நெருக்கடி சற்று குறைவு. இரண்டு நாவல்கள் ஒரே வாழ்வைச் சொல்ல நேர்ந்தாலும் அவை ஒன்றுபோல இருக்காது என்கிற சாதகம் உண்டு.

ஒரு நாவல் புத்தக வடிவம் பெறுவதற்காகப் பல ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்த காலம் இப்போது மாறியிருக்கிறது. இலக்கியச் சூழலில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

இன்றைய இளம் படைப்பாளிகள் பலரும் கைபேசியைக் கொண்டே நாவல் எழுதுவதாக சமீபத்தில் வாசித்தேன். எழுதுவதிலுள்ள உடல் உழைப்பையும் களைப்பையும் சலிப்பையும் நீக்கி அது இன்று சுலபமாகியுள்ளது. மென்பிரதியில் பிழை நீக்குவதும் திருத்தங்கள் செய்வதும் எளிது. ஒருவார காலத்தில் 500 பக்க நாவலை எழுதி, தேவையான பிரதிகளை மட்டும் அச்சிட்டுவிட முடியும்.

இதனால், எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இத்தகைய சாதகங்களுக்கு நடுவில் நாம் தவறவிட்டிருப்பது செம்மையாக்கம் (எடிட்டிங்). தமிழின் இன்றைய பல ஆக்கங்கள் செம்மைப்படுத்தப்படுவதில்லை. எழுத்தாளன் அனுப்பும் மென்பிரதியை அப்படியே பயன்படுத்தி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

அடுத்தது புத்தகங்களின் எண்ணிக்கை. தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில் அவர்களுக்காக சந்தைப்படுத்தப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இதனால், வாசகத் தெரிவு என்பது சிக்கலாகிறது. நல்ல புத்தகங்கள்கூட கவனத்துக்கு வராமல்போகும் சாத்தியங்களும் உள்ளன.

யதார்த்தவாத படைப்புகளில்தான் உங்கள் அக்கறை இருக்கிறது. தமிழினி வெளியிடும் பெரும்பாலான படைப்புகள் அப்படியானவைதான். இலக்கிய வடிவத்தில் யதார்த்தவாதம் ஏன் முக்கியத்துவமானதாகிறது?

வாசகரோடு நேரடியாக உரையாடுபவை யதார்த்தவாதப் படைப்புகள். அவை வாழ்வை நேரடியாக முன்வைக்கின்றன. பிற எல்லா வகைகளுமே ஏதேனுமொரு வகையில் யதார்த்தவாதத்துக்குத் தொடர்புடையவை. அதன் ஏதோவொரு கண்ணியிலிருந்து கிளைத்தெழுபவை.

கதை மரபின் பல்வேறு கூறுமுறைகளில் அமைந்தபோதும் அவை கால்கொண்டிருப்பது யதார்த்தவாதத்திலேயே. செவ்வியல் ஆக்கங்கள் பலவும் யதார்த்தவாதப் படைப்புகளாக அமைந்திருப்பதன் காரணமும் அதுவே.

தொழில் நகரமாக திருப்பூர் உருக்கொண்டதை ‘மணல் கடிகை’ நாவலில் விரிவாக எழுதியவர் எனும் முறையில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்குப் பிறகான திருப்பூர் தன் அடையாளத்தை இழந்துவருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

‘மணல் கடிகை’ நாவலில் உள்ள திருப்பூர் இன்றுள்ள திருப்பூர் அல்ல. 2004-ல் அந்த நாவல் வெளிவந்தபோது திருப்பூர் தன் செழிப்பின் செல்வாக்கின் உச்சத்தில் இருந்தது. இன்று திருப்பூர் கலவையான ஒரு கலாச்சார நிலம். தொழிலாளர்கள் பலரும் பீகாரிலிருந்தும் ஜார்கண்டிலிருந்தும் வந்திறங்கியுள்ள வடக்கத்தியர்கள். ஒவ்வொரு நாளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்துசேரும் ரயில்களிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறங்குகிறார்கள். நைஜீரியர்கள் பெருமளவு குடிபுகுந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள நுட்பமான கலாச்சாரச் சிக்கல்கள் திருப்பூரின் சட்ட ஒழுங்கைக் கணிசமாகப் பாதித்துள்ளன. இதற்கிடையில் அரசின் பொருளாதார நடவடிக்கைகளோ பனியன் தொழிலுக்குச் சாதகமானதாக இல்லை. திருப்பூர் பனியன் உற்பத்தி என்பது ஏராளமான உபதொழில்களைச் சார்ந்தது. ஒரு பருத்தி ஆடையை உற்பத்தி செய்வதற்கான கண்ணியில் எண்ணற்ற கைகளின் பங்குள்ளது.

இந்தச் சிறு, குறுந்தொழில்கள் பலவும் சமீபகாலமாய் நசிந்துபோயுள்ளன. நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான பகுதியை ஈட்டித்தரும் தொழிலுக்கு உகந்த நடைமுறைகளையும் ஊக்கத்தையும் அளிப்பதன் வழியாகவே திருப்பூரை மீட்டெடுக்க முடியும். திருப்பூரில் இன்று பழைய முதலாளிகளும் இல்லை. பழைய தொழிலாளிகளும் இல்லை. பழைய திருப்பூரும் இல்லை.

கணவனை அடித்துத் துவைக்கும் பெண் பாத்திரத்தை ‘மனைமாட்சி’ நாவலில் உருவாக்கியதன் காரணம் என்ன?

சாந்தி என்கிற அந்தக் கதாபாத்திரம் உளவியல் சிக்கல்களைக் கொண்ட நுட்பமான கதாபாத்திரம். கணவனை அடித்துத் துன்புறுத்துவது என்பது அக்கதாபாத்திரத்தின் உளவியல் சிக்கலின் ஒரு பகுதியே. சாந்தி கதாபாத்திரத்தைப் போன்ற பலர் நம்மிடையே உள்ளனர். இன்னும் உக்கிரமான மனநிலையுடன் வன்முறையைப் பிரயோகிக்கும் பெண்கள் பலரையும் அறிவேன்.

ஆனால், நாவலை வாசித்த சிலர் இதை நம்ப மறுக்கிறார்கள். உண்மையில், அப்படி இருப்பதை நம்ப அவர்கள் தயாராக இல்லை. ஆண்களால் வதைபடும் ஏராளமான பெண் கதாபாத்திரங்களை நாம் எளிதாகக் கடந்துவிடுகிறோம். ஆனால், ஆணை அடிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தைக் கண்டவுடன் ‘இப்படியெல்லாம் இருக்குமா?’ என்று கேள்வி எழுப்புகிறோம். ஆண் கையாள்கிற அதே வன்முறையைப் பெண் கையில் எடுக்கும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அஞ்சுகிறோம்!

- தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in


எழுத்தாளர் பேட்டிதமிழ் எழுத்தாளர்சூத்ரதாரி எம்.கோபாலகிருஷ்ணன்மணல் கடிகைமனைமாட்சிதஞ்சை ப்ரகாஷ் விருது திருப்பூர் வாழ்க்கைதிருப்பூர் வாழ்வாதாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x