Last Updated : 15 Dec, 2018 09:09 AM

 

Published : 15 Dec 2018 09:09 AM
Last Updated : 15 Dec 2018 09:09 AM

பழமைவாதிகளிடமிருந்து விடுபடுமா பபாசியும் சென்னை புத்தகக்காட்சியும்?

மாபெரும் வாசகர் திருவிழாவான சென்னை புத்தகக்காட்சிக்கான முன்னோட்டங்கள் தென்படத் தொடங்கிவிட்டன. சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 4 – 20 நடக்கும் புத்தகக்காட்சி இம்முறை 17 நாட்கள் நீள்கின்றன. புத்தகக்காட்சிக்கான ஏற்பாடுகள் களைகட்டிவரும் சூழலில், புத்தகக்கடைகளுக்கு அரங்குகள் ஒதுக்குவது தொடர்பாக பதிப்பாளர்கள் மத்தியில் உருவாகியிருக்கும் சர்ச்சைகள் ‘எப்போதுதான் இதெல்லாம் மாறும்?’ என்று கேள்வியை வாசகர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது.

உறுப்பினர்கள் – அரங்குகள் விவகாரம்

தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கமான (பபாசி) நடத்தும் புத்தகக்காட்சி இந்திய அளவில் பெரிதாக உருவாகிவருகிறது. ஆண்டுக்கு ஆண்டு புத்தகங்களின் விற்பனையும், புத்தகக்காட்சிக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் கூடிவருகிறது. எனினும், வளரும் சந்தைக்கு ஏற்ப சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதில்லை – இப்படி உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவோருக்குதான் புத்தகக்காட்சியில் உத்தரவாதமான இடம் கிடைக்கும். தவிர, அவர்களுடைய அரங்குக்கான கட்டணமும் குறைவு.

பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், புதிய உறுப்பினர் சேர்க்கை தவிர்க்கப்படுவதற்கான முக்கியமான காரணம், பழைய உறுப்பினர்கள் பெருமளவில் புதிதாக வருபவர்களை விரும்பவில்லை. சந்தையைப் புதியவர்களுடன் பங்கிட வேண்டியிருக்கும் என்பதில் அவர்களுக்கு உள்ள தயக்கம்.

சமீபத்திய ஆண்டுகளில் மேலும் ஒரு பிரச்சினை உருவாகிவிட்டிருக்கிறது. அது என்னவென்றால், ஒற்றையரங்கு, இரட்டையரங்கு, நான்கரங்குபோல வழங்கப்படும் எட்டரங்குக்கான எதிர்ப்பே அது. ஒற்றையரங்கு 100 சதுர அடி பரப்பளவைக் கொண்டது என்றால், இந்த எட்டரங்கானது 800 சதுர அடி பரப்பைக் கொண்டது. ஒற்றையரங்கில் 100 புத்தகங்களைக் காட்சிக்கு வைக்கலாம் என்றால், எட்டரங்கில் 800 புத்தகங்களைக் காட்சிக்கு வைக்கலாம்.

ஏன் எட்டரங்கை எதிர்க்கிறார்கள்?  

“இந்த எட்டரங்கைப் பெரிய பதிப்பகங்கள் எடுக்கின்றன; அவர்கள் ‘ரிலையன்ஸ்’, ‘டாடா’ போன்ற பெருநிறுவனங்கள்போல, பெரிய அளவில் கடை போட்டு வாசகர்களை ஈர்த்துவிடுகிறார்கள் – இதனால் சிறிய பதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்பது எட்டரங்கை எதிர்ப்பவர்கள் நியாயம்.

ஆனால், எட்டரங்குக்காக வாதாடும் பதிப்பாளர்கள் இதைக் கடுமையாக மறுக்கிறார்கள். “நாங்கள் வெளியிடும் புத்தகங்கள் எண்ணிக்கையே ஆயிரத்தைத் தொடும் நிலையில்தான், இவ்வளவு பெரிய இடம் எங்களுக்குத் தேவைப்படுகிறது என்கிறோம். ஒரு வாசகர் தேடிவரும் புத்தகம் என்பது பற்பசையோ, ஷாம்புவோ அல்ல; இந்தக் கடையிலும் அந்தக் கடையிலும் ஒன்றே கிடைக்கும். எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சொல்வதற்கு. எங்கள் பதிப்பக புத்தகத்தை வாங்க வரும் ஒரு வாசகர் அது சின்ன கடையோ, பெரிய கடையோ எங்கள் புத்தகத்தைத்தான் வாங்குவார். இது எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொருந்தும். அப்படி இருக்க எட்டரங்கை முடக்குவது நியாயமற்றது” என்கிறார்கள். 

பபாசியின் சமரசம்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பபாசி தலைவர் வைரவனும் அவருடைய குழுவினரும் தம் பதவிக் காலத்துக்குள் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர விரும்பினாலும், சங்கத்துக்குள் நிலவும் குழுச் சண்டைகள் அதைப் பின்னுக்கு இழுப்பதை உணர முடிகிறது. எட்டரங்கு விவகாரத்தில் அதற்குத் தடை விதிக்க முடியாது என்ற முடிவை எடுத்தது பபாசி. ஆனால், எட்டரங்குக்கு எதிராகப் பேசுவோரின் அழுத்தத்தின் விளைவாக அதற்குக் கடுமையான தொகை நிர்ணயிக்கப்பட்டது. இந்த நியாயமற்ற தொகை கிட்டத்தட்ட எட்டரங்கை யாரும் கேட்க முடியாத சூழலுக்குத் தள்ளிவிட்டது.

எங்கே இருக்கிறது நியாயம்?

புத்தகக்காட்சியில் ஒற்றையரங்குக்கான வாடகை ரூ.14,750 என்றால் எட்டரங்குக்கான வாடகை ரூ.1,18,000 என்றுதானே இருக்க வேண்டும்? ஆனால், ரூ.5,00,000 என்று நிர்ணயித்திருக்கிறது பபாசி. ‘எட்டரங்குக்கான இடஒதுக்கீடு ஏல முறையில் நடப்பதல்ல; அவர்களுக்கான இடம் சிறப்பிடம்; எட்டரங்கை வாடகைக்கு எடுக்கும் பதிப்பகங்களும் கொஞ்சம் வசதியானவை என்பதால், ஏனைய அரங்கைக் காட்டிலும் கூடுதல் வாடகை வசூலிப்பதில் தவறில்லை’ என்றெல்லாம் சொன்னாலும்கூட அதிகபட்சம்  இரண்டு மடங்காக ரூ.2,36,000கூட வசூலிக்கலாம். கடந்த ஆண்டு நிர்ணயித்த ரூ.3,50,000கூட தருவதற்குப் பதிப்பகங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், “ரூ.5,00,000 என்ன நியாயம்?” என்கிறார்கள் பெரிய பதிப்பாளர்கள்.

விளைவாக, நூற்றுக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் ‘விகடன்’, ‘கிழக்கு’, ‘காலச்சுவடு’, ‘என்சிபிஹெச்’, ‘சிக்ஸ்த்சென்ஸ்’ உள்ளிட்ட தமிழின் முன்னணி பதிப்பகங்கள் எல்லாம் இம்முறை பின்வாங்கிவிட்டன. இதைத் தொடர்ந்து வாடகையைக் குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

எழுத்தாளர்களின் குமுறல்

புத்தகக்காட்சியோ, எட்டரங்கோ வெறுமனே வியாபாரம் சார்ந்த விஷயங்கள் அல்ல; ஆனால், பல பதிப்பாளர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள் என்பது தமிழின் துரதிர்ஷடம் என்கிறார்கள் எழுத்தாளர்கள்.

“ஆயிரம் புத்தகங்களை வெளியிட்டிருக்கும் ஒரு பதிப்பகத்துக்கு நிச்சயம் எட்டரங்கு வேண்டும். இப்படிக் கட்டுப்படியாகாத வாடகையை நிர்ணயிக்கும்போது பெரிய பதிப்பகங்கள் நான்கரங்கோடு நிறுத்திக்கொள்ளும். ஏனென்றால், அதற்கான வாடகை வெறும் ரூ.59,000. ஆனால், பாதி புத்தகங்களைத்தான் அங்கு காட்சிப்படுத்த முடியும். பதிப்பாளர்கள் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பார்கள். விளைவாக புதிய எழுத்தாளர்கள், புதிய சிந்தனைகளைத் தாங்கிவரும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் புத்தகக்காட்சியில் இடம்பெற முடியாத சூழல் ஏற்படும். தமிழ் மொழிக்கும் வாசகர்களுக்கும் இழைக்கப்படும் துரோகம் இது” என்கிறார்கள் எழுத்தாளர்கள்.

சீர்திருத்தங்களை முடக்குவோர்

எட்டரங்கு ஒரு உதாரணம்தான். பபாசி முன்னெடுக்க விரும்பும் பல சீர்திருத்தங்களும் பதிப்புத் தொழிலை வெறும் வியாபாரமாக மட்டும் பார்க்கும் பழைமைவாதிகளால் முடக்கப்படுவதைப் பதிப்பாளர்கள் பலரிடமும் பேசும்போது உணர முடிந்தது. “சமூக வலைதளங்களின் ஆதிக்கத்துக்குப் பின் வாசிப்பும், பதிப்புத் தொழிலும் பெரும் சவாலை எதிர்கொள்கின்றன. வாசிப்பையும் புத்தகங்களையும் புதிய தலைமுறையிடம் பரப்ப பல புதிய முயற்சிகள் தேவைப்படுகின்றன. அதிர்ஷ்டவசமாக பபாசியின் புதிய நிர்வாகிகள் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கிறார்கள்; ஆனாலும், பழமைவாதிகள் முடக்குகிறார்கள்” என்கிறார்கள்.

புத்தக அரங்குக்குள் வாசகர்களுக்கு எழுத்தாளர்கள் புத்தகத்தில் கையெழுத்துப்போட அனுமதிக்கக் கூடாது; வேண்டும் என்றால், அதற்கென ஒரு தனியிடம் ஒதுக்கி அங்கே போய் கையெழுத்து வாங்கிக்கொள்ளச் சொல்லலாம் என்றெல்லாம் வலியுறுத்துபவர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் நம்மைத் திகைக்க வைக்கிறார்கள்.

சென்னை புத்தகக்காட்சியில் தமிழ் தவிர, ஏனைய மொழி பதிப்பாளர்களின் பங்கேற்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை – குறிப்பாக ‘பெங்குவின்’ போன்ற புகழ்பெற்ற ஆங்கிலப்  பதிப்பகங்களைக்கூட பங்கேற்க வைக்க முடியாததற்கான காரணம் இப்படியான கட்டுப்பெட்டி முறைகள்தான் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அடிப்படையில் புத்தகக்காட்சி என்பது வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான கூடுகை. வியாபாரம் அங்கே மிக முக்கியம்தான். ஆனால், புத்தகக்காட்சி என்பது வியாபாரம் மட்டுமே அல்ல என்பதை எப்போது நம்மாட்கள் உணர்வார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x