Last Updated : 22 Dec, 2018 09:28 AM

 

Published : 22 Dec 2018 09:28 AM
Last Updated : 22 Dec 2018 09:28 AM

விநோதமான நான்கு காதல் கதைகள்

தமிழ்ப் புனைவெழுத்தில் புதுமையான வடிவ உத்திகளில் அசாத்தியமான படைப்புகளை வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் பா.வெங்கடேசன். வடிவ உத்திகளில் விதவிதமான முயற்சிகளை மேற்கொண்டவர்களாகப் பலரை நாம் பட்டியலிட முடியும் என்றாலும், பெரும்பாலானவை பரிசோதனைகளாக நின்றுவிடுகின்றன. கலையம்சம் கூடிய படைப்பாக முழுமை பெற்றவர்களில் பா.வெங்கடேசன் குறிப்பிடத்தக்கவர். நிறுத்தற்குறிகளற்ற மிக நீண்ட வாக்கியங்கள், ஏழெட்டுப் பக்கங்கள் நீளும் பத்தி, நீளமான வார்த்தைக்கோவை, உரையாடல்களற்ற கதைசொல்லல் முறை, எண்ணற்ற அடைப்புக்குறிகள், அடைப்புக்குறிக்குள் அடைப்புக்குறிகள் எனப் புனைவுமொழியில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டவர். ஒருமுறை பா.வெங்கடேசனை வாசித்தவர்கள் அவரது மொழியை வைத்து மட்டுமே அடையாளம் காணும் அளவுக்குத் துல்லியமான பாணி. மொழியில் இவர் கையாளும் உத்திகள் வாசகரை மிகக் கவனமாகப் பின்தொடரப் பணிக்கும். கொஞ்சம் பிசகினாலும் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். போலவே, இவர் சஞ்சரிக்கும் கற்பனை உலகம் பிரம்மிப்பூட்டக்கூடியது. நம்மை விழிப்பு நிலையிலேயே கனவுலகுக்குக் கூட்டிச்செல்லக்கூடியது.

மொழி, வடிவம், எடுத்துரைக்கும் விதம் என ‘பா.வெங்கடேசன் பாணி’யை அவர் பிறப்பித்தது ‘ராஜன் மகள்’ தொகுப்பிலுள்ள கதைகள் மூலமாகத்தான். அவர் பின்னாளில் எழுதிய ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ போன்ற பிரம்மாண்ட படைப்புகளுக்கான ஆரம்பப்புள்ளி ‘ராஜன் மகள்’ தொகுப்பிலுள்ள ‘மழையின் குரல் தனிமை’யிலிருந்தே தொடங்குகிறது. இந்தத் தொகுப்பு இப்போது பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகாக மறுபதிப்பு கண்டிருக்கிறது.

பா.வெங்கடேசனின் மொழிநடை மிக வேகமாக ஓட்டம் பிடிக்கக்கூடியது. அதேவேளையில், மொழியின் ஊடாகப் பின்னகர்ந்துகொண்டிருக்கும் கதையின் கால்களோ ஆமையினுடையது. இந்த முரண் ஒருபுறம் அழகியலோடு வெளிப்படுகிறது என்றால், இன்னொருபுறம் ஒரே அமர்வில் நீண்ட நேரம் வாசித்துச்செல்வதற்குத் தடையாகவும் இருக்கிறது. இந்தத் தடைகளுக்குத் தீனிபோடும் விதமாக சுவாரசியமான மூன்று விஷயங்கள் இவரது படைப்புகளில் விரவிக்கிடக்கின்றன. காதல், கற்பனை, புதிர்ப்பாதை!

காதல் குறித்தும் பெண்கள் குறித்தும் புத்தம்புதிதான வர்ணனைகளை பா.வெங்கடேசனால் உருவாக்க முடிகிறது. இவரது ஒவ்வொரு புனைவுக்குள்ளும் பெண்களும் காதலும் விஸ்தரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இவர் உருவாக்கும் பெண்கள் விநோதமானவர்கள். காதலும் விநோதமானது. அதேவேளையில் அந்த விநோதத்துக்குள் உயிர்ப்பான உணர்வோட்டம் இருக்கிறது. பா.வெங்கடேசன் சொல்கிறார்: “காதல் எப்போதும் தன் உரையாடலின்கீழ் இன்னொரு உரையாடல் இருப்பதை விரும்புவதே இல்லை, இன்னொரு உரையாடல் என்பது இன்னொன்றின் இருப்பைப் பற்றிய அறிவால் உண்டாவது, காதலுக்கோ தன்னைத் தவிர பிறிதொன்றைப் பற்றித் தெரியாது, அது எப்போதும் தன்னைப் பற்றியேதான் பேசிக்கொண்டிருக்கிறது, இந்த உலகம் முழுவதிலுமுள்ள காதலர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பது காதலைப் பற்றி மட்டும்தான், அதனால்தான் எந்த தேசத்தில் எந்தப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் எந்தக் காதலனும் இன்னொரு தேசத்தில் இன்னொரு பெண்ணைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் இன்னொரு காதலனைவிடக் கூடவோ குறையவோ தன் காதலைப் பேசிவிட முடிவதில்லை.”

இரண்டாவது, கற்பனை. ‘மழை வீட்டின் முன் வண்டிகள் நின்றதும் பரமசிவம் பிள்ளையும் சிந்தாமணியும் அவரவர் காலங்களிலிருந்து தனித்தனியே வெளிப்பட்டுக் கீழிறங்கினார்கள்’. இது ‘மழையின் குரல் தனிமை’ கதையின் முதல் வரி. வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இருவரையும் அவரவர் காலங்களில் நிறுத்திவைத்துவிட்டு இரு காலகட்ட நிகழ்வுகளை ஒரே வர்ணனையில் நகர்த்திச்செல்லும் இந்தப் பத்தி இவரது கற்பனையின் பாய்ச்சலுக்கு ஓர் உதாரணம். ‘மழையின் குரல் தனிமை’யின் முதல் பத்தி மட்டுமே அதிசயம்தான்.

அடுத்ததாக, புதிர்ப்பாதை. காலத்தை இவர் கட்டமைக்கும் விதத்தில் இயல்பாகவே ஒருவித புதிர்த்தன்மையைப் புகுத்திவிடுகிறார். புதிர்ப்பாதையில் இவர் கதைசொல்கையில் கூடவே மர்மமும் சேர்ந்துவிடுகிறது. பிரம்மாண்டமான கற்பனையுலகம் மற்றும் மர்மங்கள் நிறைந்த புதிர்ப்பாதைகளினூடாக விரியும் நான்கு (‘மழையின் குரல் தனிமை’, ‘ஆயிரம் சாரதா’, ‘நீல விதி’, ‘ராஜன் மகள்’) காதல் கதைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. சுவாரசியமான சட்டகங்களுக்குள் தீவிரமான விவாதங்களை முன்னெடுக்கிறார். ராஜன் மகளுக்குப் பின்பாக வெளியான படைப்புகளில் இந்த விவாதத்தின் தீவிரம் உச்சம் பெற்றிருக்கிறது. புதிர்கள் நிறைந்த கதைப்பிரதேசத்துக்குள் எண்ணற்ற வாசல்களைத் திறந்து நம்மை உள்ளே அனுப்பிவிட்டு வழிநெடுக ரகசியமான இடங்களில் சாவிகளை ஒளித்துவைத்தும் விடுகிறார். சாவிகளைக் கண்டறிந்து சரியான இலக்குகளின் வழியே வெளிவந்தாலும் சரி, அல்லது கதவுகளற்ற சுவர்களில்போய் முட்டிமோதிக்கொண்டிருந்தாலும் சரி, இரண்டுமே சுவாரசியமான அனுபவங்கள்தான்!

ராஜன் மகள்

பா.வெங்கடேசன்

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629001.

விலை: ரூ.300

 9677778863

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x