Published : 29 Dec 2018 08:21 AM
Last Updated : 29 Dec 2018 08:21 AM

இமையம், பா.வெங்கடேசன், ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மரியாதை

நம் காலத்தின் மூன்று முக்கியமான ஆளுமைகள் இந்த வாரத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். கனடா வாழ் தமிழர்கள் வழங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இயல் விருது’ எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, அமெரிக்கா வாழ் தமிழர்களால் வழங்கப்படும் ‘விளக்கு விருது’ எழுத்தாளர் பா.வெங்கடேசன், ஆராய்ச்சியாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி இருவருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாதனையாளர்கள் மூவருக்கும் வாழ்த்துகள்!

தமிழ் நாவல் வரலாற்றில் இமையத்தின் வருகையே புயலின் வருகைதான். ‘கோவேறு கழுதைகள்’ நாவல் வெளிவந்து 25 ஆண்டுகளாகும் நிலையிலும் இன்னும் அது உயிர்ப்போடு பேசப்படுவது இமையத்தின் எழுத்தின் வலிமைக்குள்ள சான்று. எளிமை எவ்வளவு உயரிய ஆபரணம், ஆயுதம் என்பதற்கு ஒருவர் இமையத்தின் எழுத்துகளை வாசிக்க வேண்டும். ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங்கதெ’, ‘செல்லாத பணம்’ என்று அடுத்தடுத்த நாவல்களும் காத்திரமான ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் தந்திருக்கிற இமையம், புனைவை மட்டுமல்ல சமகால எளிய மக்களின் வரலாற்றையும் அதனூடாகவே எழுதிச்செல்கிறார். அக்கறையுள்ள பள்ளி ஆசிரியர், தீவிரமான திராவிட இயக்கச் செயல்பாட்டாளர், உரையாடல் கலைஞர், படைப்பு தரும் பெருமையைத் தலையில் சுமக்காத பெரும் சாதனையாளர் இமையம்.

பா.வெங்கடேசன் தமிழ்ப் புனைவுமொழியின் ஜாலவித்தைக்காரர். கற்பனையில் உருவாக்கும் கதைக்களத்தையும் மனிதர்களையும் காட்சிகளையும் தன்னுடைய நுட்பமான விவரங்களாலும் தேர்ந்த சொல்லாட்சியாலும் உயிர்ப்பாக்கும் கதைசொல்லி. கவிதைக்கும் கதைக்கும் இடையில் ஊடாடும் அபாரமான மொழிநடை அவருடையது. ஒவ்வொரு நாவலிலும் வெங்கடேசன் விஸ்தரிக்கும் பரப்பின் பிரம்மாண்டமும் சரி, அதற்காக அவர் அளிக்கின்ற உழைப்பும் சரி; தமிழில் வேறெவரோடும் ஒப்பிட முடியாதது. இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா என்று மூன்று நிலப்பரப்புகளில் விரியும் ‘தாண்டவராயன் கதை’ நாவல், தமிழ் நாவல் வரலாற்றில் பெரிய சாதனை. காதலின் புதிரான உலகத்தை அரசியல் பார்வை கலந்து எழுதிய ‘பாகீரதியின் மதியம்’ நாவல் இன்னொரு உச்சம். ஒரே பத்தியில் அவர் எழுதி வெளிவரும் ‘வாராணசி’ நாவலுக்காக வாசகர்கள் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

முழுமையான அர்ப்பணிப்போடும் ஓய்வற்ற உழைப்போடும் தமிழின் அறிவுலக இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் ஆ.இரா.வேங்கடாசலபதி பல விதங்களில் ஒரு தனி இயக்கம். தமிழின் கலை, பண்பாட்டு ஆய்வுகள் தமிழ்நாட்டுக்குள்ளேயே சுருங்கிவிடாமல், சர்வதேச ஆய்வுலகக் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் தமிழக ஆய்வுலகின் பெருமிதம் சலபதி. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தொடர்ந்து எழுதிவருபவர். ஆய்வுக் கட்டுரைகளின் கட்டுப்பெட்டித்தனமான நடைகளை உடைத்து நொறுக்கிவிட்டு, அவற்றையும் ஒரு இலக்கியப் பனுவலாக மாற்றியவர் சலபதி. ஒரு பதிப்பாசிரியராகத் தொகுத்து இவர் கொண்டுவந்த உ.வே.சா, பாரதி, புதுமைப்பித்தன் நூல்கள் சலபதியின் இன்னொரு இணைச்சாதனை. ஒரு பேராசிரியராக, புதிய ஆய்வாளர்கள் படையொன்றைத் தான் நம்பும் விழுமியங்களுக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்டிருப்பது சலபதியின் இன்னொரு மகத்தான பங்களிப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x