Published : 01 Dec 2018 10:18 am

Updated : 08 Dec 2018 09:56 am

 

Published : 01 Dec 2018 10:18 AM
Last Updated : 08 Dec 2018 09:56 AM

நூல்வெளி: காந்தியை வரையும் சொற்கள்

காந்தியை வாசிப்பதென்பது கடந்த நூற்றாண்டின் இந்தியாவை வாசிப்பதற்குச் சமம். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் அவருடைய பங்களிப்பு முதன்மையானது. காந்தி குறித்து லட்சக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட்ட பல்வேறு ஆவணங்களுக்கு மத்தியில் காந்தியின் பன்முகப் பார்வைகளின் வழியே ‘அன்புள்ள புல்புல்’ எனும் புத்தகம் மூலம் இன்றைய தலைமுறையினரை காந்தியத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார் சுனில் கிருஷ்ணன்.

காந்தியை வாசிக்காமலேயே வாய்வழிக் கதைகள், வதந்திகள் வழியாகவே அவர் குறித்துப் பரவலாக ஓர் உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இல்லையா? காந்தி ஏன் சத்தியாகிரகப் போராட்ட முறையை மேற்கொண்டார், அகிம்சையை வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட காந்தி, பகத் சிங் மற்றும் அவரது சக போராளிகளின் தூக்கு தண்டனை குறித்து வாய் திறக்காதது ஏன், பிரிவினையை எதிர்த்த காந்தி தன் கடைசி உண்ணாவிரதத்தைப் பிரிவினை சார்பாக மேற்கொண்டது ஏன் என காந்தி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை காந்தி குறித்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளை எடுத்தாண்டு விரிவாக ஆராய்கிறார் சுனில் கிருஷ்ணன். வரலாற்றுப் பிழைகளையும் கோடிட்டுக் காட்டுகிறார்.


தேசத்தின் சுதந்திரம் என்பதைத் தாண்டி ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தில் போராடியவர் காந்தி. அவருடைய போராளி மனம் தனிமனிதரிடமே அடைக்கலம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதரிடமும் மாற்றத்தைக் காண விழைந்த காந்தி, கல்வி, சுகாதாரம், உணவு, எளிய வாழ்க்கை முறை போன்றவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்க விரும்பினார். இவற்றுள் பல விஷயங்கள் வெறும் கனவாகத் தேங்கிவிட்டது எனும் குரலையும் நூலின் பல இடங்களில் காண முடிகிறது.

காந்தியின் சத்தியாகிரகப் போராட்ட முறை பற்றி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் முக்கியமானவை. சத்தியாகிரகம் எனும் போராட்ட வடிவத்தை அக்கட்டுரைகள் நுணுக்கமாக ஆராய முற்படுகின்றன. “வன்முறையைப் பிரயோகிக்கும் ஒருவனிடம் வன்முறையைப் பிரயோகித்து எளிதில் ஆட்சியையோ நாட்டையோ பிடித்துவிடலாம். கைப்பற்றிய பின் ஆளுபவர்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் வலிமைமிக்கவர்களாக இருப்பார்கள். அப்போது மக்களுக்கு முன்பிருந்தவர்களிடம் இருந்ததைக் காட்டிலும் அதிகமான பயம் இருக்கும். ஆளுபவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி மேலும் அதிகமாகும். அங்கு அன்பு இருக்க வாய்ப்பில்லை. இந்த அன்பை அடையாளம் கண்டு அதை ஆயுதமாக்கியவர் காந்தி” என்கிறார். ஒத்துழையாமை போராட்ட வடிவத்தைப் பற்றி எரிக்கா என்பவரின் நெடிய ஆய்வின் வழியே காந்தியின் ஒத்துழையாமை போராட்ட முறையை ஒப்பிடுகிறார். அதன் வெற்றிகளையும் பல மக்களிடம் சென்றுசேர முடியாத தோல்விகளையும் கணக்கிட முயல்கிறார்.

தொகுப்பின் முக்கியத்துவம்வாய்ந்த கட்டுரை ‘ஒத்துழையாமை போராட்டங்கள்’. காந்தியின் போராட்ட வடிவம் அவருடையதன்று. மாறாக, இந்திய மண்ணில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு வாழ்வியல் முறை என்பதைப் பல்வேறு போராட்டங்களின் வழியே பகிர்கிறார். மேலும், ஆங்கிலேயர்களுக்கு முன்பு ஆண்டுவந்த மன்னர்களிடம் ஒத்துழையாமை போராட்டங்கள் எளிமையாக வெற்றி அடைந்திருக்கின்றன. மக்களை நம்பியே மன்னரின் ஆட்சி நிகழ்ந்திருக்கிறது. அப்போது மக்களுக்கும் மன்னருக்குமான இடைவெளி குறைவு. மேலும், மன்னருக்கு மக்கள் தம்மைத் தகர்த்து எறிந்துவிடுவார்கள் எனும் பயம் இல்லை. ஆனால், ஆங்கிலேயர்களிடம் இந்த பயம் இருந்ததாலேயே ஒத்துழையாமை போராட்டங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் விழித்திருக்கின்றனர். ஒத்துழையாமை ஓர் ஆயுதமாக உருவம் கொள்கிறது என்பதை விளக்கும் பக்கங்கள் உலகுக்கு இந்தியா பேராயுதமொன்றை வழங்கியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

காந்தி குறித்தும் காந்தியத்தைக் குறித்தும் வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதியவற்றிலிருந்து அல்லது ஆய்வுகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டு ஒவ்வொரு கட்டுரையும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் சுனில் கிருஷ்ணன் எடுக்கும் நிலைப்பாடு, சமகாலத்தில் காந்தியின் தேவை என்ன எனும் கேள்விக்கு விடையளிப்பதாக அமைகிறது. ‘அன்புள்ள புல்புல்’ காந்தி குறித்த அறிமுக நூல் அல்ல. மாறாக, காந்தியை எவ்வழியில் அணுகலாம் எனும் கேள்விக்குப் பாதை காட்டுகிறது. சொற்களால் கசடுகளைக் களைந்து காந்தியின் ஓவியத்தைத் தீட்டியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.

- கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்.

தொடர்புக்கு: krishik10@gmail.comகாந்தி சொற்கள்கிருஷ்ணமூர்த்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x