Published : 29 Dec 2018 08:14 am

Updated : 29 Dec 2018 15:21 pm

 

Published : 29 Dec 2018 08:14 AM
Last Updated : 29 Dec 2018 03:21 PM

இறையன்புவின் ‘தலை’ புராணம்

அறிவியல் தமிழுக்கு அணி சேர்க்கும் பிரம்மாண்டமான படைப்பு. நமது உடம்புக்குள் உச்சியில் இருந்துகொண்டு ஒவ்வொரு மனிதனையும் இயக்கும் பெரும் பேராற்றல் படைத்த மூளையைப் பற்றிய தகவல்களின் சுரங்கம். 626 பக்கங்களில் 138 தலைப்புகளிலான கட்டுரைகள், வண்ணப் புகைப்படங்கள், விளக்கப் படங்கள் என்று தரமாக வெளிவந்திருக்கிறது வெ.இறையன்புவின் ‘மூளைக்குள் சுற்றுலா’.

பொதுவாகவே, உலகம் முழுதும் இருக்கும் மனிதர்கள் மனம் என்கிற ஒன்று நம் உடலுக்கு இருப்பதான கருத்தியலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் நமது மூளையின் உணர்வெல்லைகளைத்தான் நாம் மனம் என்கிறோம் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். இந்த நூலில் இருக்கும் எல்லாக் கட்டுரைகளும் அதை நிரூபிக்கின்றன. மூளை குறித்து தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிற அறிவியல்பூர்வமான கேள்விகளுக்கெல்லாம் விரிவான விடையளிக்கும் வகையில் இக்கட்டுரைகள் உள்ளன. மூளையுடன் தொடர்புகொண்டிருக்கும் விளக்கங்களை வாசிக்கும்போது நம் அறியாமை அகல்கிறது.


‘நமது மூளையால் 10 ஆயிரம் விதமான வாசனைகளைப் பிரித்தறிய முடியும். உணவில்லாதபோது மூளையில் இருக்கும் நியூரான்கள் தங்களைத் தாங்களே தின்னத் தொடங்குகின்றன. அதுவே பசிக்கான சமிக்ஞையாகி, நம்மை சாப்பிடத் தூண்டுகின்றன. ஒவ்வொரு நொடியும் மனித மூளையில் ஒரு லட்சம் வேதியியல் வினைகள் நடக்கின்றன’ என்றெல்லாம் இறையன்பு அளிக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் இயற்கையின் படைப்பை எண்ணி வியக்கவைக்கின்றன.

‘மற்ற விலங்குகளால் அருவமாகச் சிந்திக்க முடியாது. எதிர்காலத்தைப் பற்றியோ, அவற்றுக்கு விழிப்புணர்வு இல்லை. மனிதனின் மூளை சுயமறிதல், காரணப்படுத்துதல், தகவல் தொடர்பு, கவலை, புதியன படைத்தல், கணக்கிடுதல், ஆராய்தல், அடுத்தவரிடத்தில் வைத்துப் பார்த்தல், உணர்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது’ என்று மனித மூளையின் சிறப்புகளை எழுதிச்செல்கிறார் இறையன்பு.

நமது மூளை எந்த அளவுக்கு நினைவாற்றல் கொண்டதோ அதேபோல அது இன்னொரு மிக முக்கியமான தன்மையையும் பெற்றிருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்பு மதியம் என்ன உணவு சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் நம்மால் சட்டென்று பதில் சொல்லிவிட முடியாது. அதேவேளை அந்த மத்தியானத்தில் நீங்கள் சாப்பிடாத ஒரு உணவுப்பொருளைச் சாப்பிட்டீர்கள் என்றால் அதைச் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். ஏன் என்பதற்கான காரணத்தை இறையன்பு சொல்கிறார்: ‘நமது மூளை ஒரு தூரிகையை வைத்திருப்பதைப் போல துடைப்பத்தையும் வைத்திருக்கிறது. மறதி என்கிற அந்தத் துடைப்பம் வருந்தத்தக்க அனுபவங்களை வழித்துவிடுகிறது.’

விரிவான ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம். ஆனால், அவற்றை அத்தனை சுவாரஸ்யமாய் சொல்கிறது. நாம் எப்படி நுகர்கிறோம்? கூந்தல் கருப்பாக இருக்க காரணம் என்ன? மனிதர்களின் தூக்கத்துக்க்கும் மனித மூளைக்கும் என்ன உறவு என்றெல்லாம் விரிவாக எழுதியிருக்கும் இறையன்பு, அது தொடர்பான சுவையான கதைகள், வரலாற்றுத் தகவல்கள், புள்ளிவிவரங்கள் போன்றவற்றையும் இணைத்துச் சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு.

இன்றைய உலகம் மிக மிக முக்கியத்துவம் கொடுக்கும் கருப்பொருள் - நுண்ணறிவுதான். கல்வி, அரசியல், கலை, உற்பத்தி, விஞ்ஞானம், நேர்காணல், போட்டி அனைத்திலும் நுண்ணறிவு மிக்கவர்கள்தான் வெற்றிபெற முடியும் என்கிற நிலை வந்துவிட்டது. இத்தகைய சூழலில் மனித மூளைக்கும், நுண்ணறிவுக்கும் உள்ள அடர்த்தியான அறிவியல் ரகசியத்தைவும் நுட்பமாக எழுதியுள்ளார் இறையன்பு. அறிவியல் தமிழுக்கு மிக முக்கியமான வரவு. வெளியான முதல் நாளிலேயே ரூ.1,500 விலை கொண்ட இந்தப் புத்தகம் 1,500 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன என்று சொல்கிறார்கள். ஆச்சர்யமே இல்லை!

- மானா பாஸ்கரன்,

தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

மூளைக்குள் சுற்றுலா

வெ.இறையன்பு

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

அம்பத்தூர், சென்னை-98.

விலை: ரூ:1,500

 044 – 26251968


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x