

சென்னையின் வரலாறு பற்றிய பன்முகப் பரிமாணங்களை நமக்கு ‘சென்னை தலைநகரின் கதை’ எனும் நூலாகத் தந்துள்ளார் பார்த்திபன்.
375 வயதை தொட்டுவிட்டது இன்றைய சென்னை. ஒரு கடலோரக் காலி நிலத்தில் உருவாக்கப்பட்ட கோட்டைக்குள்ளே பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்த ஐரோப்பியர்கள் குடியமர்ந்தனர். கோட்டைக்கு வெளியே உருவான இடத்தில் மண்ணின் மைந்தர்களின் குடியேறினர். இந்தக் குடியேற்றங்கள்தான் சென்னை எனும் இன்றைய பெருநகரின் விதை.
இந்த விதை என்பது வெறும் சென்னைக்கான விதை மட்டுமல்ல. அது இந்தியத் துணைக்கண்டத்தின் மேல் அடுத்த சில நூற்றாண்டுகளுக்குக் கவிந்து நின்ற காலனியாதிக்கம் என்ற பெரும் சமூகக் கடைசலின் விதையும் அதுதான் என அழகாக எடுத்துக்காட்டுகிறார்.
வியாபாரம் மட்டும் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆட்சியாளராக, தண்டனை தரும் நீதிபதிகளாக மாறிய சம்பவங்களின் போக்கை நன்கு படம் பிடித்துள்ளார். ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் ஆரம்பகட்ட ஆளுநர்களைப் பற்றிய பகுதிகள் சிறப்பாக உள்ளன.
பல்லாவரம், மயிலாப்பூர் போன்ற ஆயிரக்கணக் கான வருடங்கள் பாரம்பரியமிக்க இடங்கள் சுற்றிலும் இருக்க, வெறும் 375 வயதே கொண்ட ஒரு கோட்டையை மையமாக வைத்து நவீன வரலாறு தனது வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறது. இதனைச் சரியாகத் தொட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நேற்றைப் புரிந்துகொள்ள விரும்பும் இன்றின் காதலர்களுக்கும் நாளைய சாதனையாளர்களுக்கும் உதவும் நூல்.